சிரியா: போர் நிறுத்தம் அறிவித்த கிழக்கு கூட்டா போராளிகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

சிரியா: போர் நிறுத்தம் அறிவித்த கிழக்கு கூட்டா போராளிகள்

படத்தின் காப்புரிமை Getty Images

டமாஸ்கசுக்கு வெளியே, கிழக்கு கூட்டாவின் முற்றுகையிடப்பட்ட பகுதியில் எஞ்சியிருக்கும் சிரிய போராளிகள் குழு ஒன்று, போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க ரஷ்ய ராணுவம், சிரியாவின் கூட்டாளி நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்கு இந்த அறிவிப்பு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மற்றொரு இடத்தில் உள்ள போராளிகளும் இதே முடிவை எடுத்தனர். இதுவரை 70 சதவீத பகுதிகளை சிரிய துருப்புகள் தங்கள் வசம் எடுத்துள்ன.

உளவாளி மீதான நஞ்சு தாக்குதல்: ரஷ்யாதான் பொறுப்பு என ஒப்புக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியம்

படத்தின் காப்புரிமை AFP

பிரிட்டனில் வசித்து வந்த முன்னாள் ரஷ்ய உளவாளி மீதான நஞ்சு தாக்குதலுக்கு ரஷ்யாதான் பொறுப்பு என்பதற்கு "அதிக வாய்ப்புகள்" இருப்பதாக பிரட்டன் அரசாங்கம் கூறுவதை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ப்ரூசல்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, "இதற்கு எந்த மாற்று விளக்கமும் இருக்க முடியாது" என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாஸ்கோவிற்கான தூதரை " சில ஆலோசனைகளுக்காக" ஐரோப்பிய ஒன்றியம் திரும்பி அழைத்துள்ளது.

சீன இறக்குமதிகளுக்கு 60 பில்லியன் டாலர் வரை கட்டணம் வசூலிக்க அமெரிக்கா முடிவு

படத்தின் காப்புரிமை Reuters

சீன இறக்குமதிகளுக்கு 60 பில்லியன் டாலர் வரை கட்டணம் வசூலிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்காவில் அறிவுசார் சொத்துகளை சீன திருடுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாடு அமெரிக்காவில் முதலீடு செய்வதை கட்டுப்படுத்தவே இந்த கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான எந்த ஒரு வர்த்தக யுத்தத்திலும் "இறுதிவரை போராட" தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

நைஜீரியா: விடுவிக்கப்படாத பள்ளி மாணவியை மீட்க நடவடிக்கை

படத்தின் காப்புரிமை EPA

நைஜீரியாவில் உள்ள டப்சி நகரத்தில் போக்கோ ஹராமால் கடத்தப்பட்ட 110 பள்ளி மாணவிகளில், கடைசி நபரை மீட்கும் வரை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதியன்று பள்ளி வளாகத்துக்குள் சென்ற போராளிகள் அங்குள்ள மாணவிகளை கடத்திச் சென்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் புதன்கிழமையன்று விடுவிக்கப்பட்ட நிலையில், இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த ஒரு கிறுஸ்துவ மாணவி இன்னும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் மீட்கப்படுவார் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக சௌதி வழியாக இஸ்ரேல் சென்ற இந்திய விமானம்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் இருந்து இஸ்ரேல் சென்ற இந்திய விமானம் ஒன்று, முதன்முறையாக சௌதி வான்வெளி தடத்தின் வழியே பறந்துள்ளது. டெல்லியில் இருந்து டெல் அவிவ் சென்ற ஏர் இந்திய விமானம், சௌதி வழியாக பறந்ததுதான் தங்கள் நாட்டுக்கும் சௌதிக்கும் ஏற்பட்ட முதல் அதிகாரபூர்வமான தொடர்பு என அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் யிஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

சௌதியின் வான்வழியை பயன்படுத்துவதால் பயணத்தில் இரண்டு மணி நேரம் குறைவதோடு, டிக்கெட் விலையும் குறையும் என இஸ்ரேலின் சுற்றுலாத்துறை அமைச்சர் யரிவ் லெவின் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: