அராஃபத்தை கொல்ல இஸ்ரேல் அமைத்த படை: 30 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் உண்மைகள்

  • 24 மார்ச் 2018

பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்தை கொல்வதற்கு இஸ்ரேல் எந்தவொரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தது என்கிறார் யாசர் அரஃபாத்தை சந்தித்த முதல் இஸ்ரேலியர் யூரி அப்னெரி,

Image caption பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரஃபாத்தை சந்தித்த முதல் இஸ்ரேலியர் யூரி அப்னெரி

யூரி அப்னெரியின் சிலிர்க்க வைக்கும் பயணம்

1982 இஸ்ரேல்-லெபனான் போரின்போது ஒரு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த சமயம் அது. கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியைப் பிரிக்கும் சோதனைச் சாவடிகளை ஆயிரக்கணக்கானோர் கடக்க முயன்றனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெப்பமான அந்த நாளன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒருவர் யூரி அப்னெரி. பத்திரிகை ஆசிரியரான இவர், பெய்ரூட் அருங்காட்சியகத்தின் அருகே பாலத்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) சோதனைச் சாவடியை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

பாலத்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராஃபத் சற்று நேரத்தில் அவரை சந்திக்கவிருந்தார்.

பிரகடனப்படுத்தப்பட்ட எதிரிகளை சந்திக்கச் சென்ற அப்னெரி, அந்தப் பாதை "சற்று ஆபத்தானது" என்று தெரிவித்தார். ஆயுதங்கள் இருந்த மெர்சிடிஸ் காரில் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பிறகு தெற்கு பெய்ரூட்டில் இருந்த பி.எல்.ஓவின் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் விளக்குகிறார்.

"நாங்கள் சமாதானத்தைப் பற்றி பேசினோம், இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை அது."

ஆனால் அராஃபத்துடனான சந்திப்பு, அப்னெரியின் வலதுசாரி பத்திரிகையில் வெளியானதுடன் முடிந்துவிடவில்லை.

சுமார் மூன்று தசாப்தங்கள் கழித்து இந்தக் கதையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய கமாண்டோக்கள் தங்கள் நாட்டின் சொந்த குடிமகனும், பத்திரிகையாளருமான அப்னெரி, பாலத்தீனத் தலைவரை சந்திக்கச் சென்றபோது பின்தொடர்ந்து வந்த்தாகவும், அவரை இலக்கு வைக்கவும் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது

படத்தின் காப்புரிமை AFP
Image caption லெபனானில் இருந்து பி.எல்.ஓவை அகற்றுவதற்காக 1982இல் இஸ்ரேல் அங்கு நுழைந்தது

பின் தொடரந்த சிறப்பு குழு

இஸ்ரேல் பத்திரிகையாளர் ரொனென் பர்க்மென் இஸ்ரேலிய அரசியல் படுகொலைகள் தொடர்பான ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதில் பாலத்தீன விடுதலை அமைப்பின் தலைவரை கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றியும் அவர் எழுதியிருந்தார்.

பர்க்மன் நூற்றுக்கணக்கானவர்களை பேட்டி கண்டார், இதில் நிறைய சர்ச்சைகளும் எழுந்தன. அவரது ஆராய்ச்சியின்போது, அவர் தேசத்துரோகம் செய்வதாக ராணுவத் தலைவர் குற்றம் சாட்டினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இஸ்ரேலை 1982 இல் பெய்ரூட் ஆக்கிரமித்தது. அராஃபத்தை கொல்வதற்காக, 'சால்ட் ஃபிஷ்' என்ற சிறப்பு கமாண்டோ பிரிவு நியமிக்கப்பட்டது என பர்க்மன் குறிப்பிட்டுள்ளார்.

அவரை பொறுத்தவரை, யூரி அப்னெரி மற்றும் அராஃபத்தின் சந்திப்பை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அந்தப் பிரிவு, அப்னெரி மற்றும் அவருடைய இரு சகாக்கள் பி.எல்.ஓ தலைவரை அணுகுவதற்கான முயற்சிகளை கண்டும் காணாமல் விட்டுவிட்டது.

பர்க்மன் எழுதுகிறார், "இஸ்ரேல் பத்திரிகையாளர்களை ஆபத்தில் விடலாமா அல்லது கொன்றுவிடலாமா என்று 'சால்ட் ஃபிஷ்' உறுப்பினர்களிடையே ஒரு விவாதமும் நடந்தது."

ஆனால் அவர்களின் முடிவு எதுவாக இருந்தாலும் அதை செயல்படுத்துவதற்கு முன்னரே, சந்திப்புக்கு செல்லும் வழியில் 'சால்ட் ஃபிஷ்' கண்காணிப்பில் இருந்து அப்னெரி நழுவிவிட்டார்.

Image caption யூரி அப்னெரி

இஸ்ரேலில் பதட்டம்

அராஃபத்துடனான சந்திப்பு தொடர்பான எல்லா தகவல்களும் தனக்கு நன்றாக நினைவில் இருப்பதாக யூரி அக்னெரி கூறுகிறார். சந்தித்தபோது பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அப்போது தான் வெளியிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

தற்போது 94 வயதான அவரை டெல் அவிவில் அவரது வீட்டிலேயே சந்தித்தேன். அவரது வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கும் புகைப்படங்களில், அராஃபத், பில் கிளிண்டன், முன்னாள் இஸ்ரேல் பிரதமர் இத்ஜாப் ராபின் ஆகியவையும் அடங்கும்.

1982இல் நடைபெற்ற சந்திப்புக்கு பின், இஸ்ரேலில் இது குறித்த சர்ச்சைகள் வலுத்தன. அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

"பி.எல்.ஓவை சந்திப்பதற்கு எதிராக எந்த சட்டமும் இல்லாததால் என் மீது சட்ட நடவடிக்கைகள் எதுவும் தேவையில்லை என்று அட்டார்னி ஜெனரல் முடிவு செய்தார்"

ஆனால் அராஃபத்துடனான சந்திப்பு அவரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தாரா?

"அதை உறுதியாக சொல்லமுடியாது" என்கிறார் அவர். சந்திப்புக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் தனக்கு அழைப்பு வந்ததாக அவர் சொல்கிறார்.

"ஆனால்... அவர்கள் மிகவும் திறமையானவர்களாக இருந்திருந்தால், தொலைபேசி அழைப்பை ஒட்டுக் கேட்டிருப்பார்கள், நான் செல்லும்போது எனது காரை பின் தொடர்ந்திருக்கலாம். அதற்கான சாத்தியங்களை மறுக்கமுடியாது" என்றார் அவர்.

'கண்மூடித்தனமானது சண்டை'

சால்ட் ஃபிஷ் பிரிவின் தலைவர் ஊஜி தயான், பிறகு இஸ்ரேலிய ராணுவத்தின் துணை தளபதியாக உயர்ந்தார்.

அராஃபத்தை கொல்வதற்கு 8 முதல் 10 முறை முயற்சித்ததாக ஊஜி தயான் என்னிடம் கூறினார்.

இந்த முயற்சிகளில் பொதுமக்கள் யாராவது கொல்லப்பட்டார்களா என்று கேட்டதற்கு, "எனக்கு தெரிந்து இல்லை" என்று அவர் பதிலளித்தார்.

Image caption ஊஜி தயான்

ஆனால், "மற்றவர் கொல்லப்பட்டார்களா என்றால் யாரை குறிப்பிடுகிறீர்கள்? அவருடன் இருந்தவர்கள் அப்பாவிகளா? இல்லை, அவரது அதிகாரிகளின் மனைவி குற்றமற்றவரா என்ற கேள்விக்கு யோசித்துத்தான் பதிலளிக்கமுடியும். அதுவும் அவருடன் ஒரு குழந்தையும் இருந்தால்?"

"பொது மக்கள் அந்த இடத்தில் இருப்பது தெரிந்தால் அந்த இடத்தை நாங்கள் தேர்ந்தெடுக்கமாட்டோம். ஆனால் போர் என்பது கண்மூடித்தனமானது. சுற்றியுள்ள யாரும் பாதிக்கப்படுகிறார்களா என்று எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது."

"அபத்தமான சிந்தனை'

பெய்ரூட்டை கைப்பற்றியபோது, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஏரியல் ஷெரனின் அதிகாரங்கள் பிற அமைச்சர்களிடம் சென்றன.

மேஜர் ஜெனரல் தயான் தனது திட்டத்தை நிறைவேற்றுவதில் பிடிவாதமாக இருந்தார். பாலத்தீன விடுதலை அமைப்பினர், பல இஸ்ரேலிய குடிமக்களை கொன்றதையும், லெபனானில் அவர்கள் நடத்திய தாக்குதல்களையும் அவர் நினைவுபடுத்துகறார்.

ஆனால் ரோனென் பர்க்மேன் குறிப்பிட்டுள்ள எந்த நடவடிக்கையுமே தங்கள் பிரிவு மேற்கொள்ளவில்லை என்று அவர் மறுக்கிறார்.

"அராஃபத்தையும், யூரி ஆப்னெரி உட்பட அவரை சந்திக்கும் இஸ்ரேலிய குடிமக்களை கொல்ல இஸ்ரேலின் பிரதமரோ, பாதுகாப்பு அமைச்சரோ அல்லது எந்தவொரு அதிகாரியோ அனுமதி கொடுப்பார்கள் என்பது முட்டாள்தனமான சிந்தனை" என்று அவர் கூறுகிறார்.

"அப்படி எதுவும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை" என்கிறார் அவர்.

"அரசியல் கொலை" என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஜெனரல் தயான், ஆனால் அராஃபத் உயிருடன் இருக்கக்கூடாது என்று விரும்பியதாக சொல்கிறார்.

இஸ்ரேலுக்கும் பாலத்தீனியர்களுக்கும் இடையிலான பல ஆண்டுகால சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது, அராஃபத் மற்றும் ஜெனரல் தயான் தொடர்ந்து பலமுறை சந்தித்தார்கள்.

பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவருடன் பேசும்போது, அவரை கொலை செய்வது பற்றி ஒருபோதும் பேசியதில்லை என்று கூறும் ஜெனரல் தயான், "ஆனால் அது அவருக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்" என்று கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :