“களவு போகிறதா நம் அந்தரங்க தகவல்கள்” ஆதார் குறித்த 6 கேள்வியும், பதிலும்

ஆதார்

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மீறுகிறதா? அரசு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் எண் பெற்றிருப்பதை கட்டாயமாக்குவது ஏற்புடையதா என்பது போன்ற முக்கியக் கேள்விகளுக்கு விடை அளிக்கும் தீர்ப்பினை இந்திய உச்சநீதிமன்றம் புதன்கிழமை வழங்க உள்ளது. இந்நிலையில் ஆதார் தொடர்பாக முன்பு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றை மறுபகிர்வு செய்கிறது பிபிசி தமிழ்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை ஆதார் எண்ணை பல்வேறு சேவைகளோடு இணைக்கின்ற காலக்கெடு, காலவரையின்றி நீட்டிக்கப்பட்டள்ளது.

ஆதார் எண்ணின் முக்கியத்துவம், அதிலுள்ள தகவல் கசிவால் ஏற்படும் விளைவுகள் குறித்து நிக்கில் பஹ்வா உள்பட பல நிபுணர்களிடம் பிபிசி பேசியுள்ளது.

ஆதார் பற்றி விடையறியாமல் நாம் தேடிய பல கேள்விகளுக்கு பதில்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

ஒருவர் என்னுடைய ஆதார் எண்ணை வைத்திருந்தால், என்னை பற்றி என்ன வகையான தகவல்களை அவர்கள் பெற முடியும்?

ஆதார் குறித்து அரசு இதுவரை அளித்த தகவலின்படி, உங்களுடைய ஆதார் எண்ணை வைத்து கொண்டு யாரும் உங்களை பற்றிய எந்தவொரு தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியாது.

உங்களுடைய ஆதார் எண்ணையும், பெயரையும் (அல்லது உங்கள் ஆதார் எண் மற்றும் கைரேகை) கொண்டு மூன்றாவது நபர் தரவுத்தளத்திற்கு கேள்வி அனுப்பலாம்.

அது சரியாக பொருந்தினால், இந்த தரவுத்தளம் "ஆம்" என்றும், பொருந்தாவிட்டால் "இல்லை" என்றும் பதிலளிக்கும். வேறு சொற்களில் சொல்ல வேண்டும் என்றால், சரியானதா என்பதை உறுதிப்படுத்தும் முறை இதுவாகும்.

இருப்பினும், "கூடுதல் உறுதிப்படுத்தும்" சேவையும் இதில் உள்ளது. இந்த சேவையில் பாலினம், வயது, முகவரி போன்ற பிற விபரங்களும் சேமிக்கப்பட்டுள்ளன.

"உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்" (கேஒய்சி) சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ளும் விதிமுறைக்கு தேவைப்படுவதால், கேள்வி அனுப்பும் நிறுவனம் அல்லது சேவை வழங்குபவர்கள் இந்த தகவல்களை பெறலாம்.

இதனால், எந்தவொரு வியாபார நிறுவனமும் அதனுடைய வாடிக்கையாளரை பற்றி சரிபார்த்து உறுதி செய்துகொள்ள இந்த சேவை அனுமதிக்கிறது.

உங்களுடைய ஆதார் எண்ணின் அடிப்படையில் இ-கேஒய்சி வழிமுறையை இந்திய தனித்தன்மை அடையாள ஆணையம் (யுஐடிஎஐ) உருவாக்கியுள்ளது.

இந்த இ-கேஒய்சி முறை, தொழில்துறை பயன்பாட்டுக்கு உடனடியாக, காகித செலவின்றி தகவல்களை வழங்குகின்ற மின்னணுமுறை என்று இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, தொலைபேசி சேவை வழங்குபவர் வாடிக்கையாளர் படிவத்தை மிக விரைவாக நிரப்புவதற்கு இந்த இ-கேஒய்சி முறை பயன்படுகிறது.

இதனால், மிகவும் பெரிய முந்தைய கடினமான படிவங்களோடு, காகித சான்றுகளில் தகவல்களை சரிபார்க்கும் செயல்முறை தவிர்க்கப்படுகிறது.

இப்போது, உங்களுடைய ஆதார் எண் மற்றும் கைரேகையோடு மேலதிக விபரங்களை யுஐடி தரவு தளத்திலிருந்து கணினி அமைப்பே நிரப்பிக்கொள்கிறது.

இவ்வாறு, உங்களுடைய அடையாளம் மற்றும் விபரங்களை தொடர்புபடுத்தி தனியார் நிறுவனங்களும், முன்றாவது தரப்பினரும் அவர்கள் கண்டறிகின்ற ஆதார் தகவல்களை கொண்டு அவரவருக்குரிய தரவு தளங்களை உருவாக்கி கொள்ள முடியும்.

ஆதார் தகவல்களோடு பிற தனிப்பிட்ட விபரங்களையும் (வயது, முகவரி, இன்னும் பிற) இணைத்து ஒரு நிறுவனம், தொழிலாளியை சரிபார்த்து உறுதி செய்யலாம் அல்லது மேலும் விரிவான விவரங்களோடு இ-வணிக பரிவர்த்தனை சேவை வழங்கலாம்.

யுஐடி தரவுத்தளத்தின் நேரடி கட்டுப்பாடு இல்லாமல் வெளியில் இருக்கும் இதே மாதிரியான தரவுதளங்கள் ஆதார் எண்ணை கொண்டு தகவல்களை ஒப்பிட்டு சரி பார்க்கலாம்.

"அதிக தகவல்களை பெறுவதற்கான கருவிதான் ஆதார் எண்" என்று ஆதார் திட்டத்தை வலுவாக எதிர்த்த டிஜிட்டல் உரிமைகள் செயற்பாட்டளர் நிக்கில் பஹ்வா பிபிசியிடம் தெரிவித்தார்.

உதாரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யுஐடிஎஐ, ஒரு எண்ணை டிவிட்டரில் பதிவிட்டிருந்தது.

இந்த எண்ணுக்கு உங்களுடைய ஆதார் எண்ணோடு ஒரு குறுந்தகவல் அனுப்பினால், அந்த ஆதார் எண்ணோடு யாருடைய வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் பெயரை (வங்கி கணக்கு எண் அல்ல) செய்தியாக நீங்கள் பெறுவீர்கள்.

"இதனால், வங்கியில் இருந்து அழைப்பதாக தனிநபர்கள் தொடர்ந்து ஏமாற்று அழைப்புகளை பெற்றனர். அதுமட்டுமல்ல, தங்களுடைய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவதற்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லும் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்று பஹ்வா தெரிவித்தார்.

என்னுடைய ஆதார் எண்ணின் ஒரு பகுதியை மட்டும் பிறர் கொண்டிருந்தால், என்னுடைய தகவலை பெறுவதற்கு அதனை பயன்படுத்த முடியுமா?

உங்கள் ஆதார் எண்ணில் எத்தனை இலக்கங்களை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை பொறுத்து இது இருக்கும். உங்கள் ஆதார் எண்ணில் இருக்கும் சில இலக்கங்களை மட்டும் கொண்டு அவர்கள் உங்களுடைய தகவல்களை பெற முடியாது.

ஆனால், அந்த ஆதார் எண்ணின் பல இலக்கங்களை அவர் கொண்டிருந்தால், உங்கள் பெயரை அறிய பல முறை முயற்சி செய்யலாம் மற்றும் யுஐடி தரவு தளத்திற்கு பொருந்துகிற வரை சாத்தியமாகும் எண்களை நிரப்பி முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

யாராவது என்னுடைய ஆதார் எண்ணை வைத்திருந்தால் அல்லது எனக்கு தெரியாமல் ஆதார் எண் பிறருக்கு கசிந்திருந்தால், அதனை தவறாக பயன்படுத்த முடியுமா? மோசமாக பயன்படுத்த முடியும் என்றால், எந்தெந்த வழிமுறைகளில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது?

ஆதார் எண் மட்டுமே கசிந்திருந்தால், அதனை தவறாக பயன்படுத்த முடியாது.

ஆனால், தொலைபேசி சேவை வழங்குவோரும், எதிர்காலத்தில் வங்கிகளும் கூட ஆதார் எண்ணோடு ஒப்பிட்டு பார்ப்பதற்கு உங்களுடைய பையோமெட்ரிக்ஸ் தகவல்களை பயன்படுத்தலாம்.

ஆனால், மூன்றாவது தரப்பால் (இ-வணிக நிறுவனங்கள் பேன்றவை) பராமரிக்கப்படும் தரவு தளங்களில் ஆதார் எண்கள் இருந்தாலும், அவற்றின் தரவுகள் கசிந்தாலும் ஒருவரின் அந்தரங்க உரிமை மீறப்படும் பிரச்சனை எழுகிறது.

இந்நிலை, குடிமக்களின் விபரமான தகவல்கள் வாங்குவோருக்கு இது கிடைப்பதற்கு வழிவகுக்கும் அல்லது அதிக வருமானமுடையவரை தேடிக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்கு இந்த தகவல்கள் கிடைக்க வழிசெய்யும்.

ஆனால், எந்தவொரு துல்லியமற்ற அமைப்பும் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு வழி உள்ளது. உங்களுடைய ஆதார் எண்ணோடு கூடிய அடையாள அட்டையை அடையாள சான்றாக ஏற்றுக்கொள்ளும் சேவையை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

"ஆதார் எண் ஒரு நிரந்தர அடையாள சான்று. பல சேவைகளோடு இதனை தொடர்பு படுத்துவது ஒரு தோல்வியாகும்" என்று பஹ்வா தெரிவித்தார்.

முடிவெடுத்து செயல்படுத்திவிட்டால், உங்களுடைய தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்களுக்கு தேவைப்படுவதெல்லாம், தனிப்பட்ட தகவல்களை அல்லது வங்கியை அணுகுவதற்கு, கட்டைவிரல் மற்றும் / அல்லது கைரேகை அல்லது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் போன்ற இன்னொரு சரிபார்க்கும் எண் மட்டும்தான்.

ஆனால்,பயோமெட்ரிக் தரவுகள் பாதுகாப்பாகவும், குறியாக்க வடிவத்திலும் உள்ளது என்பதை அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது.

யாரவது தரவுகளை கசிய செய்வதாக கண்டறியப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவர் மற்றும் அபராதம் விதிக்கப்படுவர்.

ஆன்லைன் சந்தைகளில் அல்லது சில்லறை மளிகை கடைகள் போன்ற சேவைகளில் என்னுடைய ஆதார் எண்ணை இணைப்பது எவ்வகையில் பாதுகாப்பானது?

இது போன்ற சேவை நிறுவனங்கள் அடையாளத்தை மிக எளிதாக சரிபார்ப்பதற்கு ஆதார் எண்ணை கேட்பது அதிகரித்து வருகிறது.

ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் தரவுகளில் நீண்டகாலமாக இந்த நிறுவனங்கள் சேமிக்கக்கூடிய விபரமான சுயவிபரங்களில்தான் ஆபத்து உள்ளது.

இத்தகைய தரவுகள் கசிந்தால், தனியாரின் தரவுகளை ஒப்பிட்டு சரிபார்த்து வாடிக்கையாளர்களின் சில்லறை சேவைகள், வாடகை கார் சேவைகள், பயன்பாடுகள் பற்றிய சுயவிபரங்கள் விரிவான முறையில் கட்டமைக்கப்படும் விலை மதிப்புமிக்க தரவுகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

இதனால், அந்தரங்க உரிமை மீறலுக்கு இட்டுசெல்வதும் சாத்தியம் ஆகலாம். உலக அளவில் பெரிய சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் தரவுகள் வெளியாகிவிடக்கூடாது. ஆனால், கடந்த காலத்தில் இது நடக்கவே செய்துள்ளது.

எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஏர்டெல் பணம் செலுத்தும் வங்கியின் செயலதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான ஷாஷி அரோரா பதவி விலகினார். இந்த நிறுவனம் தங்களின் தரவுகளை தவறாக பயன்படுத்தவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டிய பின்னர் யுஐடிஎஐ அந்த நிறுவனத்தின் இ-கேஒய்சி சேவைகளை இடைநிறுத்தியதால்தான் அவர் பதவி விலகினார்.

எவ்வளவுக்கு அதிகமான சேவைகளோடு ஆதார் எண்ணை இணைக்கிறோமோ, அவ்வளவு தகவல் கசிவுக்கு அதிக சாத்தியமுள்ளது" என்று பஹ்வா தெரிவிக்கிறார்.

இருப்பினும், தங்களின் தரவுத்தளம் வேறு எந்த தரவுத்தளங்களோடும் அல்லது பிற தரவுத்தளங்களிலுள்ள தகவல்களோடும் இணைக்கப்படவில்லை என்பதை யுஐடிஎஐ தொடர்ந்து கூறி வருகிறது.

நான் வெளிநாட்டவர் என்றாலும், ஆதார் எண் அவசியமா?

இந்தியாவில் பணிபுரியும் வெளிநாட்டவராக நீங்கள் இருந்தால், சில சேவைகளை மிக எளிதாக பெற்றுக்கொள்வதற்காக ஆதார் எண் பெற முடியும்.

செல்பேசி அல்லது சிம் மற்றும் எல்லா வங்கிக் கணக்குகள், கடன் பண அட்டைகள் (கிரடிட் கார்டுகள்) போன்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆதார் எண் கட்டாயமாக தேவைப்படும் சில சேவைகளை ஆதார் எண் வைத்திருந்தால் பெற்றுக்கொள்லாம்.

ஆதார் எண்ணை பல்வேறுப்பட்ட சேவைகளோடு இணைப்பதற்கான காலக்கெடுவை, உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை காலவரையறையில்லாத அளவுக்கு நீட்டித்துள்ளதால், இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில்தான் இருக்கும்.

இந்தியாவில் வாழாத இந்தியர்/இந்திய வம்சாவளியினருக்கு ஆதார்?

"ஆதார் குடிமக்களுக்கு வழங்குகின்ற எண் அல்ல. இது குடியிருப்போருக்கு வழங்கப்படும் எண்" என்று சுட்டிக்காட்டுகிறார் பஹ்வா. இந்தியாவில் வாழாத இந்தியர் அல்லது இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை உடையோர் ஆதார் எண் பெற்றுக்கொள்ள தகுதியில்லாதவர்கள். அவர்கள் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காலம் (கடந்த 12 மாதங்களில் 182 நாட்கள்) இந்தியாவில் அவர்கள் வாழ்ந்திருந்தால் மட்டுமே ஆதார் எண் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் பெற தகுதியில்லாத நிலையில், வங்கிக் கணக்குகள், சிம்கள் அல்லது வருமான வரி எண் போன்றவற்றிக்கு தகவலை சரிபார்ப்பதற்கு ஆதார் அவசியம் என்பதில் இருந்தும் இவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் ஆதார் பயன்பாடு பற்றிய வழக்கு நிலுவையில் இருக்கையில், சேவை வழங்குபவர் ஆதார் எண் கேட்பது சட்டப்பூர்வமானதா?

இப்போது, பல்வேறுப்பட்ட சேவைகளோடு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வரும்வரை காலவரையறையின்றி நீட்டித்துள்ளது.

எனவே "ஆதார் எண்ணை சேவை வழங்குவோர் கேட்பது சட்டப்பூர்வமானது என்றாலும் முறையல்ல" என்று பஹ்வா தெரிவிக்கிறார்,

"ஆதார் விபரங்களை கேட்டு, இணைப்பது அல்லது பகிர்வதில் இருந்து தனியார் நிறுவனங்களை இது தடுப்பதில்லை. ஆனால், இதனை வழங்க மறுப்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கேட்கப்படுகிறபோது, உங்களுடைய ஆதார் எண்ணை அல்லது பயோமெட்ரிக்ஸ் தகவல்களை வழங்காமல் இருக்கும் முடிவை நீங்கள் எடுக்கலாம். ஆனால், நீங்கள் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் அந்த சேவையை மறுக்கும் நிலைமையையும் உருவாகலாம்.

எல்லா செல்பேசி எண்களையும், ஆதார் எண்ணோடு சரி பார்த்துக்கொள்ள தொலைதொடர்பு துறை தொலைபேசி சேவை வழங்குவோருக்கு கட்டளை அனுப்பியுள்ளது.

சிறிய டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் செல்பேசி வாலட்டுகள் உள்பட பல குடிமக்கள் பெறுகின்ற சேவைகளுக்கு செல்பேசி எண்தான் அடையாமாக பயன்படுகிறது. எனவே, இதனை சரிபார்த்து அங்கீகரிப்பது அவசியமாகிறது.

"என்னுடைய கருத்துப்படி ஆதார் விரும்பியவர்கள் மட்டும் எடுக்கக்கூடியதாக, மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும். பயோமேட்ரிக் தகவல்களோடு இணைக்கப்படுவதாக இருக்க கூடாது. ஒருவர் விரும்பினால், அவருடைய ஆதார் எண்ணை நீக்கி விடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்" என்கிறார் பஹ்வா.

யுஐடிஎஐயின் இணையதளத்தின்படி, "ஆதாரை நீக்கிவிடுவதற்கு எந்தவொரு கொள்கையும் இல்லை". இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள "பூட்டு/திற பயோமெடரிக்ஸ்" என்ற வசதியை பயன்படுத்தி ஆதார் எண் வைத்திருப்போர் தங்களுடைய பயோமெட்ரிகஸ் தகவல்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: