ரஷ்யா: வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்து: 64 பேர் பலி

ரஷ்யா: வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயில் 37 பேர் பலி

சைபீரியாவில், கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 64 பேர் பலியாகி உள்ளனர்.

பாதிக்கப்பட்டோரில் பலர் குழந்தைகள் என்றும், இன்னும் 10 பேரை காணவில்லை என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வின்டர் செர்ரி கட்டட வளாகத்தின் மேல் மாடியில் இந்த விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட பலரும் அங்குள்ள திரையரங்கில் இருந்துள்ளனர்.

தீயிலிருந்து தப்பிக்க மக்கள் ஜன்னலில் இருந்து குதிப்பது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பதியப்பட்டுள்ளன.

நிலக்கரி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் கெம்ரொவா நகரம் மாஸ்கோவின் கிழக்கிலிருந்து சுமார் 3,600கிமீ தூரத்தில் உள்ளது.

இந்த தீ விபத்து குறித்த காரணங்கள் ஏதும் தெரியவில்லை; அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இரண்டு திரையரங்குகளின் கூரைகள் இடிந்து விழுந்ததாக தெரிகிறது என விசாரணை கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

288 அவசர சேவை பணியாளர்களும், 62 தீயணைப்பு குழுக்களும் மற்றும் வான்வழி மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்தில் இருப்பதாக கெம்ரொவா பிராந்திய அவசர உதவித் துறையின் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் தீயை அணைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். தீப்பற்றிய வணிக வளாகத்தின் கட்டட அமைப்பு சற்று சிக்கலானது என்றும், அதில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்கள் அதிகம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அங்கிருந்த ஒரு திரையரங்கு அரையில், 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக கெம்ரொவோ பகுதியின் துணை ஆளுநர் தெரிவித்தார்.

அவசர சேவை பணியாளர்கள் கட்டடத்திலிருந்து 100 பேரை வெளியேற்றியதாகவும், மேலும் தீயில் சிக்கிய 20 பேரை காப்பாற்ற முடிந்ததாகவும் செய்தி முகமை ஒன்று தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: