உலகப் பார்வை: ’புதின் ராஜிநாமா செய்ய வேண்டும்’: ரஷ்ய வீதியில் கோஷம் எழுப்பிய மக்கள்

  • 28 மார்ச் 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

புதின் ராஜிநாமா செய்ய வேண்டும்

படத்தின் காப்புரிமை Getty Images

சைபீரியாவில், கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 64 பேர் பலியாகினர். மரணித்தவர்களில் 41 பேர் குழந்தைகள். பலரை இன்னும் காணவில்லை. இந்த விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்று கூறி மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கெம்ரொவா நகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 1000 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டகாரர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; புதின் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோஷத்தையும் முன் வைத்தனர்.

டிரம்புக்கு எதிராக

படத்தின் காப்புரிமை Getty Images

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவினை தொடர்ந்து, டிரம்புக்கு எதிராக சில மாகாணங்கள் அணி திரண்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு எடுக்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், சில கேள்விகளை இணைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதாவது, 1950 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க குடிமகனாக இருக்கிறீர்களா என்ற கேள்வி அந்த கணக்கெடுப்பில் கேட்கப்படும். இது குடிபெயர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதற்கு நியூயார்க் மற்றும் கலிஃபோர்னியா உள்ளிட்ட மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், இது வளங்களை சரியாக பங்கிடுவதற்காகவும், பாகுபாடினை தடுப்பதற்காகவும் இந்த தரவுகள் உதவும் என அரசாங்கம் கூறுகிறது.

உளவாளியும், நாடோவும்

படத்தின் காப்புரிமை EPA/ YULIA SKRIPAL/FACEBOOK

ரஷ்ய முன்னாள் உளவாளியை பிரிட்டனில் விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்ததை அடுத்து ’நாடோ’ ஏழு ரஷ்ய ராஜதந்திரிகளை நீக்கி உள்ளது. சர்வதேச பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எல்லாவற்றுக்கும் ஒரு விலையும், விளைவும் உள்ளது என்று கூறினார். இது வரை 26 நாடுகள் கடந்த இரண்டு நாட்களில் பிரிட்டனுக்கு ஆதரவாக ரஷ்ய தூதர்களை நீக்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரஷ்யா தன் மீதான இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கிம் சீனா சென்றது உண்மைதான்

படத்தின் காப்புரிமை AFP

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு விஜயம் செய்தார் என்று சில தினங்களாக ஊகங்கள் எழுந்த நிலையில் தற்போது அவரின் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிம்மின் தந்தை பயன்படுத்திய ரயிலை போன்றதொரு சிறப்பு ரயிலில் உயர் அதிகாரி ஒருவர் சீனாவுக்கு வந்தார் என்ற செய்திகள் வந்தவுடன் அது குறித்த ஊகங்கள் இந்த வாரம் எழுந்தன.கிம்மின் இந்த விஜயம் சீனா மற்றும் வட கொரியாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே 2011ஆம் ஆண்டு அதிபராக கிம் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும். சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் "வெற்றிகரமாக பேச்சுவார்த்தை" நடத்தினார் கிம் என சீன செய்தி முகமையான சின்ஷுவா தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: