வடகொரிய தலைவர் கிம்மை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்: டிரம்ப்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

கிம்மை சந்திக்க டிரம்ப் ஆர்வம்

படத்தின் காப்புரிமை Getty Images

வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனா-வடகொரியா சந்திப்பு நல்ல விதமாக முடிந்தது என்று கூறப்பட்டதை அடுத்து டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீடிக்கும் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், கிம் ஜாங்-உன் உடனான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்ததாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தம்மிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், கிம்மும் தன்னை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும், ஆனால் துரதிஷ்டவசமாக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் தொடரும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க படைவீரர்கள் விவகாரத் துறை செயலாளர் மாற்றம்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரோனி ஜாக்சன்

படைவீரர்கள் விவகாரத் துறை செயலாளர் டேவிட் ஷல்கின் ராஜிநாமாவை அறிவித்த டிரம்ப், அவருக்கு பதிலாக அதிபர் மருத்துவராக செயல்பட்டு வருபவரை தேர்ந்தெடுத்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ஷல்கினுக்கு நன்றி தெரிவித்துள்ள டிரம்ப், தான் அதிபர் பதவியை ஏற்ற பிறகு, கடந்த ஜனவரி மாதம் தன்னை முதலில் பரிசோதித்த ரோனி ஜாக்சனை இந்த பதவிக்கு பரிந்துரைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

படைவீரர்கள் விவகாரத் துறையின் செயலாளராக பென்டகன் அதிகாரி ராபர்ட் வில்கி தற்காலிக பொறுப்பு வகிப்பார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் மலாலா

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மலாலா யூசஃப்சாய்

தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தான் வந்துள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய்.

தற்போது மலாலாவுக்கு 20 வயதாகிறது; மனித உரிமை ஆர்வலரான இவர், பெண் கல்வி குறித்து பேசியதற்காக 2012ஆம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.

பாகிஸ்தானில் அவர் பிரதமர் ஷாஹித் சாகான் அப்பாஸியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலாலா பாகிஸ்தானில் நான்கு நாட்கள் இருப்பார் என்றும், தனது மலாலா நிதிக் குழுவின் அதிகாரிகளுடன் அவர் வந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

"வலுவான மற்றும் ஒன்றுபட்ட" நாடு பிரிட்டன்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரதமர் தெரிசா மே

"வலுவான மற்றும் ஒன்றுபட்ட" நாடாக பிரிட்டனை வைத்திருப்பேன் என அந்நாட்டு பிரதமர் தெரீசா மே உறுதி அளித்துள்ளார்.

பிரெக்ஸிட் குறித்து கருத்துகள் கேட்க, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்துக்கு பிரதமர் மே பயணம் மேற்கொள்ள உள்ளார் .

பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால உறவுமுறை குறித்த ஒப்பந்தத்திற்கு இன்னும் சில மாத காலமே உள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முறையாக வெளியேறும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: