தாக்குதலுக்கு பின் முதன்முறையாக பாகிஸ்தான் சென்ற மலாலா

தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தான் வந்துள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய்.

படத்தின் காப்புரிமை Getty Images

மனித உரிமை ஆர்வலராக இருக்கும் மலாலாவுக்கு தற்போது 20 வயதாகிறது. பெண் கல்வி குறித்து பேசியதற்காக 2012ஆம் ஆண்டு தாலிபன் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.

அவர் பிரதமர் ஷாஹித் சாகான் அப்பாஸியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் தனது பெற்றோருடன் மலாலா வருவது போன்ற வீடியோக்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டன.

படத்தின் காப்புரிமை EPA

மலாலா பாகிஸ்தானில் நான்கு நாட்கள் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது மலாலா நிதிக் குழுவினருடன் அவர் வந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் வட மேற்கு பகுதியில் இருக்கும் மலாலாவின் சொந்த ஊரான ஸ்வாட்டிற்கு அவர் பயணம் செய்வாரா என்பது தெரியவில்லை.

அவர் ஏன் தாக்கப்பட்டார்?

தாலிபனின் பிடியில் தனது வாழ்க்கை எப்படி உள்ளது என்பது குறித்து, பெயர் வெளியிடாமல் பிபிசி உருது சேவையில் எழுத தொடங்கினார் மலாலா.

தீவிரவாதிகளின் அடக்குமுறைக்கு மத்தியில் பெண் கல்வி குறித்து பெரிதும் பேசி வந்த மலாலா, தனது 15ஆவது வயதில் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்; சர்வதேச கவனத்தை அது ஈர்த்தது.

படத்தின் காப்புரிமை UNIVERSITY HOSPITALS BIRMINGHAM

அவர் "மேற்கத்திய கலாசாரத்திற்கு ஆதரவாக" இருப்பதால் அவரை சுட்டதாக பாகிஸ்தானில் உள்ள தாலிபன்கள் தெரிவித்தனர்.

அந்த தாக்குதலில் மலாலா பலத்த காயமடைந்தார். மேலும், அவரின் மூளையில் வீக்கம் ஏற்படுவதை தடுக்க மண்டை ஓட்டின் ஒரு பகுதியை நீக்கும் நிலை ஏற்பட்டது.

பாகிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் அவசரகால சிகிச்சைக்கு பிறகு அவர் பிரிட்டனுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் பிரிட்டனில் வசித்து வருகிறார்.

என்ன செய்தார் மலாலா?

பிழைத்து வந்த மலாலா உலகளவில் குழந்தைகள் கல்வி குறித்தும், கல்வி பெறுவதில் அவர்களுக்கு உள்ள உரிமை குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார்.

உலகில் உள்ள அனைத்து பெண்களும் கல்வி கற்கவும், எந்தவித அச்சமும் இன்றி வாழ்வில் முன்னேறவும் அவர் தனது தந்தை சியாவுதினுடன் சேர்ந்து மலாலா நிதி அமைப்பை அவர் உருவாக்கினார்.

2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் மலாலா. இளம் வயதில் நோபல் பரிசு பெறும் சிறப்பையும், அமைத்திக்கான நோபல் பரிசை பெறும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையையும் பெற்றார் மலாலா.

குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடியதற்காக இந்திய ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார் மலாலா.

அவர் தனது படிப்பை தொடர்ந்து கொண்டே தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். மேலும் கடந்த ஆண்டு அவருக்கு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானில் ஆபத்து தொடர்கிறதா?

சமீப வருடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முயற்சிகளுக்கு மத்தியிலும், பாகிஸ்தான் தாலிபன் தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

நூற்றுக்கணக்கானவர்களை பலி வாங்கிய, பள்ளிகள் மீதும் கல்லூரிகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தாலிபான்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் மலாலா அளித்த நேர்காணல் ஒன்றில், தனது சொந்த ஊரான ஸ்வாட்டை ’பூமியின் சொர்கம்’ என்று குறிப்பிட்டு, தான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்