கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம் - ஓரிரு நாளில் பூமியில் விழும்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

சீன விண்வெளி நிலையம் ஓரிரு நாளில் பூமியில் விழும்

படக்குறிப்பு,

தியன்கொங்-1 (சித்தரிக்கும் படம்) பூமியை அடையும்போது பற்றி எரியும்

சீன விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள் இந்த வார இறுதியில் பூமியின் மீது விழும்.

சீனாவின் லட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியான தியன்கொங்-1 என்கிற விண்கலன் 10 மீட்டர் நீளம் மற்றும் 8 டன்கள் எடை கொண்டிருக்கும்.

தியன்கொங்-1 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், அதனை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் 2016ஆம் ஆண்டு சீனா உறுதிப்படுத்தி இருந்தது.

ஆனால், இதற்கு கவலைப்பட வேண்டிய தேவையே இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வளிமண்டலத்தை தாண்டி வருகின்ற வேளையில், இந்த விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் கழன்று எரிந்து சம்பலாகி போய்விடும்.

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூ பிரிட்டன் தீவில், 6.9 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை.

கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட 7.5 அளவிலான நிலநடுக்கத்தில் இருந்து அந்நாடு மீண்டு வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்புக்கு எதிரான மனு தள்ளுபடி

படக்குறிப்பு,

நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ்

தன்னுடன் உறவுமுறையில் இருந்ததை அமெரிக்க அதிபர் டிரம்ப் சாட்சியமாக அளிக்க வேண்டும் எனக்கூறி ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டிரம்ப் இதுகுறித்து முறையான விளக்கம் அளிப்பதற்கு முன்பாகவே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியது. 2006ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பாலியல் உறவு வைத்திருந்தது குறித்து 'பொதுவெளியில் பேசக்கூடாது என்று தாம் மிரட்டப்பட்டதாக' ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் கூறியிருந்தார்.

நடிகையுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை டிரம்ப் கடுமையாக மறுத்துள்ளார்.

வேதிப் பொருள் தாக்குதல் விவகாரம்: யூலியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கேய் ஸ்கிரிபாலின் மகளான யூலியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், அபாய கட்டத்தை அவர் கடந்து விட்டதாகவும், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனத்தால் தாக்கப்பட்டு, நான்கு வாரங்களுக்கு முன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.

பிரிட்டனில் கடந்த மார்ச் 4ஆம் தேதி அன்று செர்கேய் ஸ்கிரிபால் மற்றும் யூலியா மயங்கிய நிலையில் காணப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: