தென் கொரிய பாப் பாடகிகளின் நிகழ்ச்சியில் வட கொரிய தலைவர்

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் மற்றும் அவரது மனைவி அந்நாட்டு தலைநகரான பியாங்யோங்கில் நடைபெற்ற தென் கொரிய பாப் பாடகர்களின் கலைநிகழ்ச்சியை நேரில் கண்டதாக தென் கொரியாவின் கலாசாரத் துறை தெரிவித்துள்ளது.

South Korean girl group Red Velvet head to North Korea on 31 March, left, and North Korean leader Kim Jong-un, right

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

தென் கொரியாவின் 'ரெட் வெல்வெட்' பாப் இசைக் குழுவினர் (இடது) மற்றும் கிம் (வலது)

ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்கு பிறகு, வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இசைக் குழு இது.

பியாங்யோங்கில் நடைபெறும் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 11க்கும் மேற்பட்ட தென் கொரிய பாப் பாடகர்கள் வட கொரியாவுக்கு சென்றுள்ளனர்.

முன்னதாக, தென் கொரியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனது இசை மற்றும் நடனக் கலைஞர்களை வட கொரியா அனுப்பியிருந்தது.

இரு கொரிய நாடுகளுக்கிடையே பல மாதங்களாக நீடித்துவந்த பதற்ற நிலைக்கு பிறகு, சமீப காலமாக இதுபோன்ற பரிமாற்றங்கள் மூலமாக உறவு மேம்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றதாகவும், இதைத்தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமையன்று மற்றொரு நிகழ்ச்சி நடக்கவுள்ளதாகவும் தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பட மூலாதாரம், AFP

தென் கொரிய கலைஞர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் வட கொரிய தலைவர் கிம்தான் என்று தென் கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

அவருடைய சகோதரி கிம் யோ-ஜோங் மற்றும் பெயரளவில் அந்நாட்டு நிர்வாகத்தின் தலைவராக இருக்கும் கிம் யோங்-நாம் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் (வலது) உடன் கிம்

கிம் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த வாரம் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை சீனாவிற்கு மேற்கொண்ட கிம் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.

கடந்த 2000 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கொரிய உச்சி மாநாடுகளின் மூன்றாவது கூட்டத்தை இம்மாதம் 27ஆம் தேதிக்குள் நடத்தவேண்டியுள்ளது. அமெரிக்க-வட கொரிய உச்சி மாநாட்டுக்கான தேதி இதுவரை இறுதிசெய்யப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: