சொமாலியா: ஆஃப்ரிக்க ஒன்றிய தளத்தை தாக்கிய இஸ்லாமியவாத தீவிரவாதிகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

அமைதி காக்கும் தளம் மீது துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், AFP

சொமாலியாவில் உள்ள ஆஃப்ரிக்க ஒன்றியத்தின் அமைதி காக்கும் தளம் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை இஸ்லாமியவாத தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.

புலமெரெர் நகரத்தில் உள்ள அமைதித் தளத்தின் வெளியே இரண்டு கார் குண்டுகளை அல் ஷபாப் போராளிகள் வெடிக்கச் செய்தனர்.

துப்பாக்கிச்சூடு சுமார் மூன்று மணி நேரம் நிகழ்ந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை முழுமையாக தெரியவில்லை. ஆனால், இதில் 20க்கும் மேற்பட்ட அல் ஷபாப் போராளிகள் கொல்லப்பட்டதாக சொமாலிய உள்துறை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல்அசிஸ் அலி இப்ரஹிம் தெரிவித்தார்.

"சர்வாதிகார" நாடு ஸ்பெயின் - பூஜ்டிமோன்

பட மூலாதாரம், EPA

தேச துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன், தனது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

பெரும் "சர்வாதிகார" முறையில் ஸ்பெயின் நடந்து கொள்வதாகவும் பூஜ்டிமோன் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட அவர், முதல் முறையாக பேசியுள்ளார்.

பூஜ்டிமோனை விடுவிக்கக் கோரி பெர்லினில் அவரது ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.

25 சதவீதம் வரி விதித்த சீனா

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை சீனா வரி விதித்துள்ளது. இதில் பன்றி இறைச்சி, ஒயின் ஆகியவை அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images

மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதை தொடர்ந்து சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக போரை தாங்கள் விரும்பவில்லை என்று சீனா தெரிவித்திருந்த போதிலும் தங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படுமெனில் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தது.

"வர்த்தக போர் நல்லது" என்றும் அமெரிக்காவுக்கு அம்மாதிரியான போரில் வெல்வது "எளிதான" ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வீட்டு நீச்சல் குளத்தில் 11அடி முதலை

ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் 11அடி முதலை ஒன்று இருந்ததாக அப்பகுதி காவல்துறையினர் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டுள்ளனர்.

நோகோமிஸ் என்ற நகரத்தில் வசிப்பவர்கள், முதலை இருப்பதை அறிந்து உதவி கோரினர்.

நீரில் இருந்த முதலையை வெளியே இழுத்த காட்சிகளை சரசோடா கவுண்டி ஷெரிஃப் அலுவகம் பதிவிட்டிருந்தது.

அலிகேட்டர் எனப்படும் ஒரு விதமான முதலை வகை, தென்கிழக்கு அமெரிக்கா மற்றும் சீனாவை பூர்விகமாக கொண்டதாகும்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா அல்லது லூசியானா நகரங்களிலேயே அதிகளவிலான அலிகேட்டர்கள் வாழ்ந்து வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: