யூடியூப் மீது சீற்றம் கொண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தினாரா சந்தேக நபர்?

யூடியூபில் அனைவருக்கும் சமமான வளர்ச்சியில்லை - நசிம் அக்டம்
படக்குறிப்பு,

யூடியூபில் அனைவருக்கும் சமமான வளர்ச்சியில்லை - நசிம் அக்டம்

அமெரிக்காவில் வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள யூடியூபின் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட பெண் இரானிய வம்சாவளியை சேர்ந்த நசிம் அக்டம் என்று சான் புருனோ போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும், அவர் கலிஃபோர்னியாவிலேயே வசித்து வந்தார் என்ற தகவலையும் வெளிப்படுத்தியுள்ளனர் .

யூடியூப் தளத்தில் அடிக்கடி தோன்றும் நசிம் தான் பதிவேற்றிய ஒரு காணொளியில் யூடியூப் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

யூடியூப் இணைய தளம் தனது காணொளி பதிவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் அந்த காணொளிகளில் நசிம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, நசிம் அக்டமின் யூடியூப் கணக்கை நிர்வாகம் நீக்கியுள்ளது. அதேபோல், அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.

யூடியூப் நிர்வாகம் தனது காணொளிகளுக்கு கிடைக்கவேண்டிய பார்வையாளர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நசிம் அக்டம் தனது சொந்த இணையதளத்தில் குற்றஞ்சாட்டி கருத்து பதிந்துள்ளார்.

முன்னர், வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள யூடியூபின் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மூன்று பேரை காயமாக்கியதுடன் தன்னை தானே சுட்டுக் கொண்டார் என போலிஸார் தெரிவித்திருந்தனர்.

36 வயது நபர் ஒருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார் அவர் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் ஆண் நண்பர் என்று சிபிஎஸ் செய்தி தெரிவிக்கிறது. 32 வயது மற்றும் 27 வயது மதிக்கத்தக்க பெண்கள் இருவர் சுடப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மதியம் 12.28 மணிக்கு சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்ததாக சான் ப்ரூனோவின் தலைமை காவல் அதிகாரி ஈத் பார்பெரினி தெரிவித்தார்.

அதிகாரிகள் அங்கு சென்றவுடன், "பதட்டமான சூழலையும்" அதிகமானோர் "தப்பி ஓடுவது" போன்ற காட்சிகளையும் காண முடிந்ததுள்ளது.

துப்பாக்கி குண்டு காயத்துடன் நிறுவன தலைமையக வாசலில் ஒருவர் கிடந்தார் என பார்பெரினி தெரிவித்தார்.

சிறிது நிமிடங்களில் பெண் ஒருவர் தன்னைதானே சுட்டுக் கொண்டார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் கை துப்பாக்கியை வைத்திருந்தார் என்றும் அவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலிஸார் தெரிவித்தனர்.

யூடியூப் தலைமையகத்தில் சுமார் 1700 பேர் பணி புரிகின்றனர்; கூகுளுக்கு சொந்தமான இந்த நிறுவனம் அந்த பகுதியின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.

பணியாளர்கள் தங்கள் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு நடப்பது போன்ற காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

மற்றொரு காட்சியில், போலிஸாரின் சோதனைக்கு முன்னதாக பணியாளர்கள் வரிசையில் வெளியேறுகின்றனர்.

இது தொடர்பாக பேசிய யூடியூப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், துரிதமாக செயல்பட்ட போலிஸாரை பாராட்டியுள்ளார்.

"மேலும் இன்று யூடியூப்பை சார்ந்தவர்கள், அங்கு பணிபுரிபவர்கள் என அனைவரும் இந்த குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் மனம் இதில் காயமடைந்தவர்களை நினைத்து கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: