டோக்லாம் சர்ச்சை: இந்தியா - சீனா இடையே சிக்கி தவிக்கும் பூடான்

  • அன்பரசன் எத்திராஜன்
  • பிபிசி நியூஸ், திம்ஃபு
டோக்லாம் சர்ச்சை: இந்தியா - சீனா இடையே சிக்கி தவிக்கும் பூடான்

பசுமையாக காட்சியளிக்கும் மலைகள் மற்றும் மலையின் மீதுள்ள கவனம் ஈர்க்கும் புத்த மடங்கள் ஆகியவற்றை கொண்ட பூடான், பயணத்தில் ஆர்வம் கொண்டவர்களின் கனவு இடம். பரிபூரண அழகை கொண்டிருக்கும் ஒரு மாய அழகு இடத்தை ஷாங்ரி -லா என்கிறார்கள். அப்படித்தான் பூடானின் இந்தப் பகுதியை உலகின் கடைசி ஷாங்ரி-லா என வர்ணிக்கிறார்கள்.

நாட்டின் தலைநகரமான திம்ஃபு, பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாடு காரணமாக கடும் சோர்வில் இருந்தவர்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கவும், செழிப்பான பசுமைவாய்ந்த மலைகள் மற்றும் பனி மழைகள் ஆகியவற்றை தூரத்தில் இருந்து கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்ப்பதற்கு ஏற்ற புத்துணர்ச்சியூட்டும் மகிழ்சியளிக்கும் இடமாகும்.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அந்நாட்டின் பாரம்பரிய உடை அணிந்து அமைதியாக நடந்து செல்கிறார்கள். உலகிலேயே போக்குவரத்து சிக்னல்கள் இல்லாத ஒரே நாடு இதுவாகத் தான் இருக்கும். இங்கே போக்குவரத்து காவல் துறையினரே கையால் சமிக்யை தருகிறார்கள்.

அழகான அந்நாட்டின் மற்றொரு பக்கமானது கடந்த ஆண்டு முதல் அச்சத்துடனும் பதற்றத்துடனும் இருக்கிறது.

இரண்டு பெரிய ஆசிய ஜாம்பவான்களுக்கு இடையில் அமைந்திருக்கிறது பூடான். வடக்கே சீனாவையும் தெற்கே இந்தியாவையும் கொண்டிருக்கும் இந்த இமாலய நாட்டில் 8 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இந்த இரண்டு நாடுகளும் எல்லை சர்ச்சை குறித்த விஷயத்தால் தங்களது இராணுவத்தை இந்தப் பகுதியில் நிறுத்தி வைத்திருப்பதால் பூடான் மக்கள் அமைதியின்மையுடன் உள்ளனர்.

மண்டல ஆதிக்கத்துக்காக இரண்டு ஆசிய சக்திகளும் போராடும் வேளையில் பூடான் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியா, பூடான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே முச்சந்தியில் இருக்கும் டோக்லாம் என்ற பகுதி தான் தற்போது பதற்றம் நிறைந்ததாக இருக்கிறது.

பட மூலாதாரம், AFP Contributor

டோக்லாம் பகுதி சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. பூடான் மற்றும் சீனா இரண்டுமே இந்த இடத்துக்கு உரிமை கோருகின்றன. இந்தியா, இவ்விஷயத்தில் பூடானுக்கு ஆதரவாக இருக்கிறது.

கடந்த வருடம் ஜூன் மாதம் சாலை விரிவாக்கத்தை சீனா துவக்கியது. இந்திய படைகள் அங்கு சென்று அந்த பணியை தடுத்தன. இது இரு நாடு படைகளுக்கு இடையே சண்டையை உருவாக்கியது.

அந்த சாலையானது பாதுகாப்பு சார்ந்த விஷயங்களை கொண்டிருப்பதாக டெல்லி வாதாடியது. இந்தியாவுக்கு என்ன பயமெனில், வருங்காலத்தில் எதாவது மோதல் ஏற்பட்டால் சீன படைகள் டோக்லாமை பயன்படுத்தி இந்தியாவின் போர்த்திற வியூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சிலிகுரி பகுதியை அபகரித்துவிடும் என்பதே.

'கோழியின் கழுத்து' என அறியப்படும் சிலிகுரி தாழ்வாரம்தான் வட கிழக்கு மாநிலங்களை இந்திய நாட்டுடன் இணைக்கும் பகுதியாகும். ஆனால் இந்த பயம் தேவையற்றது என சில வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் பூடான் மக்கள் போர்தந்திர வியூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த டோக்லாம் பகுதியின் முக்கியத்துவம் குறித்து தெரியாமல் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறும் வரையில் டோக்லாம் முக்கியமற்ற பகுதியாகவே விளங்கியது.

பட மூலாதாரம், AFP

''பெரும்பாலான பூடானியர்களுக்கு டோக்லாம் எங்கிருக்கிறது என்றே தெரியாது'' என்கிறார் திம்ஃபுவில் பல்லூடக செய்தியாளராக உள்ள நம்கே ஜாம்.

மேலும் அவர் கூறுகையில், ''இந்தியா சீனா ஆகியவற்றுக்கு இடையே அது ஒரு சர்ச்சைப் பொருளாக மாறியபிறகுதான் பூடானில் டோக்லாம் ஒரு விவாத பொருளாக மாறியது'' என்றார்.

டோக்லாமில் சீன மற்றும் இந்திய படைகள் நிறுத்தப்பட்டிருப்பது அங்கே பூடானியர்கள் மத்தியில் இந்த இரண்டு ஆசிய பெரு நாடுகளுக்கு இடையே யுத்தத்தை உண்டாக்குமோ என கவலை ஏற்படுத்தியது. ''இது இந்திய படைகளின் மீறல்'' என பெய்ஜிங் கோபமாக கண்டித்தது.

இந்திய மற்றும் சீன தலைமைகளின் தீவிர இராஜ தந்திரத்துக்கு பிறகு சில வாரங்கள் கழித்து அதாவது 73 நாட்கள் பிறகு இறுதியாக இந்திய படைகள் விலகின. பூடான் அரசாங்கம் டோக்லாம் பிரச்னை குறித்து விவாதிக்க மறுக்கிறது. கடந்த ஆகஸ்டில் இரண்டு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றதை வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.

படக்குறிப்பு,

நம்கே ஜாம்

ஆனால் பூடானில் இந்த இரண்டு படைகள் நிறுத்தப்பட்டது ஓர் எச்சரிக்கை மணி என பலர் கூறுகின்றனர்.

சமூக வலைதளத்தில் பலர் ஆர்வமாக விவாதம் நடத்திவருகிறார்கள். சீனாவுடனான எல்லை பிரச்னை முடிவுக்கு கொண்டுவரவும், தனித்துவ வெளியுறவு கொள்கையை பின்பற்றவும் பூடானுக்கு இது சரியான நேரம் என்கின்றனர். அதே சமயம் சிலர் பூடான் இந்தியாவின் பிடியில் இருந்து வெளியே வர வேண்டும் என வாதிடுகின்றனர்.

இந்தியா-பூடான் நட்பு

1950 களில் சீனா திபெத் மீது படையெடுத்து இணைத்தப் பிறகு பூடான் இந்தியாவுடன் பாதுகாப்பு கருதி நட்பானது. அப்போதிருந்து அது இந்தியாவின் ஆதிக்க வளையத்திற்குள் இருக்கிறது.

பூடானுக்கு இந்தியா பொருளாதார, இராணுவ மற்றும் தொழிலநுட்ப உதவிகளை செய்கிறது. இந்த இமாலயன் தேசம் இந்தியாவிடம் இருந்து உதவிகளை பெறும் முக்கியமான நாடாகும். கடந்த ஐந்தாண்டு பொருளாதார திட்டத்தில் பூடானுக்கு கிட்டத்தட்ட 800 மில்லியன் டாலர் அளவுக்கு உதவி வழங்கியிருக்கிறது இந்தியா.

படக்குறிப்பு,

டோக்லாம் சர்ச்சை: இந்தியா - சீனா இடையே சிக்கி தவிக்கும் பூடான்

பூடானில் நூற்றுக்கும் அதிகமான இந்திய ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அதிகாரிகள் கூறுகையில் அவர்கள் பூடான் ராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கிறார்கள் என்றனர். டோக்லாமில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் 'ஹா' எனும் மேற்கு நகருக்கு அருகில் அந்நாட்டு இராணுவ தலைநகரம் அமைந்துள்ளது.

பல பூட்டானியர்கள் இந்தியா பல ஆண்டுகளாக தங்களுக்கு உதவி செய்வதால் நன்றியுடன் உள்ளனர். அதே சமயம், குறிப்பாக பூடான் இளைஞர்கள் தங்கள் நாடு சொந்த காலில் நிற்க வேண்டும் என விரும்புகின்றனர்.

பூடானில் ஆதிக்கம் செலுத்துகிறதா இந்தியா?

1949-ல் முதலில் கையெழுத்தான சிறப்பு உடன்படிக்கையானது பூடானின் வெளியுறவுக் கொள்கையானது இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. 2007-ல் இந்த உடன்படிக்கை மாற்றியமைக்கப்பட்டபோது வெளியுறவுக்கொள்கை மற்றும் ராணுவ கொள்முதலுக்கு பூடானுக்கு நிறைய சுதந்திரம் கிடைத்தது.

ஆனால் பூடானியர்கள் சிலர் இந்தியா அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாகவும் பூடானை ஒடுக்குவதாகவும் கருதுகின்றனர்.

படக்குறிப்பு,

கோபிலால் ஆச்சார்யா

''நாங்கள் ஜனநாயக நாடாக வளர்ந்துவிட்டோம். நாங்கள் இந்தியாவின் நிழலில் இருந்து வெளியேற விரும்புகிறோம். இந்தியாவும் பூடானை அடிமட்ட மாநிலமாக கருதக்கூடாது. பூடானை அதன் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய விடுங்கள்'' என வாதிட்டார் எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் கோபிலால் ஆச்சார்யா.

பூடானுக்கும் சீனாவுக்கும் அதன் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பிரச்னை நிலவுகிறது. பூடானுக்கு சீனாவுடனான பிரச்னைக்கு முடிவுகட்டும் தருணமிது என்ற உணர்வு வேகமாக வளர்ந்து வருகிறது.

'' பூடான் இந்த எல்லை விஷயங்களை சீனாவுடன் ஆரம்பத்திலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு பிறகு ராஜ்ய உறவுகளில் முன்னேற்றம் ஏற்படக்கூடும் இல்லையெனில் இந்த டோக்லாம் பிரச்னை மீண்டும் மீண்டும் வரும்'' என்கிறார் அரசியல் விமர்சகர் கர்மா டென்ஜின்.

'' இரு ராணுவ வல்லரசுகள் எங்கள் அமைதியான நாட்டின் வாசலில் முட்டி மோதிக் கொண்டு இருப்பது பூடானுக்கு நல்லதல்ல'' என்கிறார் டென்ஜின்.

திம்ஃபுவில் நான் பலரிடம் பேசியபோது இந்தியா கட்டுப்பாட்டை கடைபிடித்திருக்கலாம் சீனாவுடன் முட்டிக் கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம் என்றனர்.

பட மூலாதாரம், DIPTENDU DUTTA

பெய்ஜிங்குடன் தங்களுக்கு உள்ள நீண்டகால எல்லை பிரச்னையை தீர்க்க பூடான் எடுத்துவரும் முயற்சிகளில் டோக்லாம் பிரச்னை தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர்கள் நினைக்கின்றனர்.

மற்ற தெற்காசிய நாடுகளான நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் வங்கதேசம் போன்றவற்றில் சீனா சாலை அமைப்பதை இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியாது. இந்த மண்டலத்தில் பூடான் மட்டுமே பெய்ஜிங்குடன் நேரடி ராஜ்ய உறவுகளை கொண்டிருக்கவில்லை.

சீனா - இந்தியா போட்டியில் பிழியப்படும் பூடான்

இந்தியா தனது நாட்டில் இயற்கை வளங்களை நியாயமற்ற முறையில் சுரண்டுகிறது என பல பூடானியர்களிடம் சீற்றம் காணப்படுகிறது. டெல்லியின் 'பெரியண்ணன்' நடத்தை அங்குள்ள மக்களை சீனாவுடன் மேற்கொண்டு வர்த்தக தொடர்புகளை மேற்கொள்ள தூண்டுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவுடனான நட்பை வைத்து இந்தியாவுடனான உறவில் நேபாளம் விளையாடுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

''எங்களுக்கு, எங்களது எதிர்காலம் இந்தியாவுடன்தான். ஆனால் இந்தியா மற்றும் பூடான் இடையேயான சமமான நடத்தை கொண்ட ஓர் புதிய வகை உறவை நாங்கள் தோற்றுவிக்க வேண்டும். சமமான நிலைப்பாட்டில் மீதான புதிய அம்சங்களைப் பார்க்க வேண்டும்'' என ஆச்சார்யா கூறுகிறார்.

பெரு வளர்ச்சியை நோக்கி இயங்கும் சீனாவுடன் ராணுவ மற்றும் பொருளாதார அளவில் இந்தியா போட்டி போடும் நிலையில் மறுமுனையில் இந்தியாவின் வெளியுறவு கொள்கையானது பரஸ்பர மரியாதைக்கு அடிப்படையாக இல்லாவிட்டால், அதன் கொல்லைப்புறத்தில் அதன் கூட்டாளிகளை இழக்கும் அபாயம் உள்ளது.

பூடான் ஒரு சிறிய இமாலய தேசமாக இருக்கலாம் ஆனால் அதனிடம் ஒரு வியூகத்துக்கான திட்டம் இருக்கிறது. அது சீனா - இந்தியா போட்டியில் பிழியப்பட அந்நாடு விரும்பவில்லை. பூடான் பார்க்க விரும்பும் கடைசி விஷயம் என்னவெனில் சீனா மற்றும் இந்திய ராணுவ படைகள் அவர்களது எல்லைக்கு அருகே முறுக்கிக் கொண்டு நிற்க கூடாது என்பதே.

பிற செய்திகள்