ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கப்பட்டது எனக்கு தெரியாது - டிரம்ப்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

"ஆபாசப்பட நடிக்கைக்கு என் வழக்கறிஞர் பணம் கொடுத்தற்கும் எனக்கும் தொடர்பில்லை"

பட மூலாதாரம், Reuters

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸுக்கு தனது வழக்கறிஞர் பணம் வழங்கியது குறித்து தனக்கு தெரியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதன்முதலில் டிரம்ப் பேசியுள்ளார்.

ஏன் உங்கள் வழக்கறிஞர் பணம் கொடுத்தார் என்று கேட்டதற்கு அதற்கு நீங்கள் அவரைதான் கேட்க வேண்டும் என்றார் டிரம்ப்.

2006ஆம் ஆண்டு டிரம்புடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக அந்த நடிகை தெரிவித்திருந்தார். ஆனால் டிரம்ப் அதனை மறுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக 2016ஆம் ஆண்டு இதை பற்றி பேசாமல் இருக்க ஒரு லட்சத்து 30,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக நடிகை தெரிவித்திருந்தார்.

சீன பொருட்களுக்கு மேலும் வரி

பட மூலாதாரம், Getty Images

சீன பொருட்களுக்கு மேலும் 100பில்லியன் டாலர்கள் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது நூற்றுக்கணக்கான சீன பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 50பில்லியன் டாலர்களோடு கூடுதலாக சேரும்

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையாக சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 106 பொருட்களுக்கு வரி விதித்தது. அதனையடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் சர்வதேச சந்தையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதல்: `பொய்யான கதை`

முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நடத்தப்பட்ட நச்சுப் பொருள் தாக்குதல் விவகாரத்தில், பிரிட்டன் "பொய்யான கதையை" உருவாக்குவதாகவும் "நெருப்போடு விளையாடுவதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ரஷ்யாவின் ஐ.நாவுக்கான தூதர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ரஷ்யா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக பிரிட்டன் குற்றம் சாட்டுகிறது ஆனால் ரஷ்யா அதனை மறுக்கிறது.

35 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்கவுள்ள செளதி மக்கள்

பட மூலாதாரம், AFP

சௌதி அரேபியாவில் 35 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தியேட்டரில் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 18ஆம் தேதி திறக்கப்பட உள்ள தியேட்டரில் "ப்ளாக் பேந்தர்" படம் திரையிடப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில், சௌதியில் 15 நகரங்களில், 40 திரையரங்குகள் திறக்க, உலகின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான ஏ எம் சி உடன் இதன் ஒரு பகுதிக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

விஷன் 2030 திட்டத்தின் கீழ் சௌதி அரேபியாவுக்கு பொழுதுப்போக்குத் துறையை கொண்டு வருவதற்கான பெரிய தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.

இது பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை கொண்டு வர சௌதி அரசர் மொகமத் பின் சல்மானின் திட்டமாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: