ஊழல் குற்றச்சாட்டு: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டு சிறை

பட மூலாதாரம், AFP
தென் கொரியாவின் முன்னாள் அதிபரான பார்க் குன்-ஹே தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டையே உலுக்கிய இந்த ஊழல், அரசியல் மற்றும் வர்த்தக மேல்தட்டுக்களுக்கு எதிரான ஆத்திரத்தை மக்களிடையே தூண்டியது. எனவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பார்க்குக்கு, சிறைத்தண்டனையுடன் 17 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.
தீர்ப்பு அறிவிக்கப்படும்போது பார்க் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
பார்க் இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்கவில்லை என்பதுடன், முன்னதாக இந்த வழக்கில் நீதிமன்றம் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். தனது மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
பட மூலாதாரம், AFP
நாட்டில் "மிகப் பெரிய குழப்பத்தை" ஏற்படுத்திய பார்க், "செய்த குற்றத்திற்குரிய வருத்தத்தை தெரிவிப்பதற்கான அடையாளம் கூட இல்ல" என்று நீதிபதி கிம் சே-யோன் தெரிவித்துள்ளார்.
"எங்களால் உதவமுடியாது, ஆனால் இதற்கு அவர்தான் பொறுப்பு என்று கண்டிப்புடன் தெரிவிக்க முடியும்" என்று நீதிபதி கூறினார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், வெள்ளிக்கிழமையன்று வழங்கப்பட்ட தீர்ப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதியளித்ததற்கு, இந்த வழக்கின் மீது மக்கள் காட்டிய ஆர்வத்தை அதிகாரிகள் காரணமாக தெரிவித்தனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்