பிரேசில்: சரணடைகிறார் முன்னாள் அதிபர்

ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவர் போலீஸிடம் சரண் அடையவும் கால அவகாசமும் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு அரசியல் நோக்குடையது என்றும் தான் நிரபராதி என்றும் அப்போது அவர் தெரிவித்தார். சா பாலோவில், தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்வின்போது பிரேசிலின் இன்னொரு முன்னாள் அதிபரும், லுலா டா சில்வாவுக்கு பிறகு அதிபர் பதவி வகித்த இன்னொரு முக்கிய பெண் அரசியல் தலைவருமான தில்மா ரூசஃப்பும் உடன் இருந்தார்.

ஒரு பொறியியல் நிறுவனத்திடம் 1.1 மில்லியன் டாலர் (சுமார் 7 கோடி இந்திய ரூபாய்) மதிப்புள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அவரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்து செய்ய நடந்த இரு கடைசி நேர முயற்சிகள் தோல்வியடைந்தன.

இந்த ஆண்டு அக்டோபர் மதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதை தடுக்கும் முயற்சியே இந்த வழக்கு என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2003 முதல் 2011 வரை அதிபர் பதவியில் இருந்த அவர், எதிர்வரும் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் முன்னிலை வகித்தார்.

வியாழன்று அவருக்கு தண்டனை வழங்கிய விசாரணை நீதிமன்ற நீதிபதி அவர் அமைதியான முறையில் சரணடைந்தால் அவருக்கு கைவிலங்கிடப்படமாட்டாது என்று கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: