உலகப் பார்வை: பல் துலக்கும் போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய மனிதர்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

பல் துலக்கும் போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய மனிதர்

பல் துலக்கும் போது சிலருக்கு பற்பசையை விழுங்கும் பழக்கும் இருக்கும். கென்யாவை சேர்ந்த இந்த மனிதர் டூத் பிரஷ்ஷையே விழுங்கி இருக்கிறார். பல் துலக்கியின் சுவையெல்லாம் பிடித்து அல்ல. தவறுதலாக விழுங்கி இருக்கிறார். அவரது பெயர் டேவிட் கேரோ.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பல் துலக்கும் போது டூத் பிரஷ்ஷை விழுங்கி விட்டதாக டேவிட் கூறுகிறார். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் வயிற்றிலிருந்து பிரஷ் அகற்றப்பட்டு இருக்கிறது.

பற்றி எரிந்த டிரம்ப் டவர்

அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள அதிபர் டிரம்புக்கு சொந்தமான `டிரம்ப் டவர்' - இல் தீ பற்றியது. முன்னதாக டிரம்பின் வீடும், அலுவலகமும் இந்த கட்டடத்தில்தான் இயங்கியது. ஆனால், இப்போது அவர் வாஷிங்டனில் வசித்து வருகிறார். கொழுந்துவிட்டு எரிந்த தீயில் சிக்கி ஒருவர் படுகாயம் அடைந்ததாக நியூயார்க் தீயணைப்புத் துறை சொல்கிறது. மேலும், மூன்று தீயணைப்பு வீரர்கள் லேசான காயம் அடைந்ததாக தீயணைப்புத் துறையின் ட்வீட்டர் கணக்கு சொல்கிறது.

தீ பிடித்து 45 நிமிடங்களுக்கு பிறகு டிரம்ப், தீ அணைக்கப்பட்டுவிட்டதாக ட்வீட் செய்துள்ளார். கட்டடம் வலுவாக உள்ளது என்று சொல்லி உள்ள அவர், தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விசாரணை

பாலத்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே காசா - இஸ்ரேல் எல்லையில் நடந்த சண்டையில் பாலத்தீன பத்திரிகையாளர் ஒருவர் சுடபட்டது தொடர்பாக தாங்கள் விசாரணை நடத்துவோம் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறி உள்ளது. காசாவில் உள்ள ஓர் ஊடக நிறுவனத்தில் பணியாற்றுகிறார் யாசீர் மூர்தாஜா.

வெள்ளிக்கிழமை நடந்த சண்டையின் போது பத்திரிகையாளர் பனியன் அணிந்து நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது அவர் காயமடைந்ததாக பலதரப்பு தகவல்கள் கூறுகின்றன. பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், அங்கு இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரணடைந்த முன்னாள் அதிபர்

ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவர் போலீஸிடம் சரண் அடைய கால அவகாசமும் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய மறுத்து இருந்தார். இது தொடர்பாக போலீஸுக்கும், லுலாவின் வழக்கறிஞர்களுக்கும் பேச்சுவார்த்தை நடந்ததை அடுத்து அவர் சரணடைந்துள்ளார்.

நச்சு வாயு தாக்குதலில் 70 பேர் பலி

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்ததாக மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து ட்வீட் செய்துள்ள தன்னார்வ மீட்பு படையினரான "தி வைட் ஹெல்மட்ஸ்" குழு, கட்டடத்தின் அடிதளத்தில் பல சடலங்கள் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: