உலகப் பார்வை: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செளதி அரேபியாவில் வாழ்ந்த மனிதன்

  • 10 ஏப்ரல் 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்

செளதி அரேபியாவில் ஆதி மனிதன்

படத்தின் காப்புரிமை KLINT JANULIS

புதிய ஆய்வு ஒன்று செளதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதன் வசித்தான் என்பதை வலியுறுத்துகிறது. ஆஃப்ரிக்காவுக்கு வெளியே 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் தொடர்ச்சியாக வசித்ததில்லை என்னும் முந்தைய வாதத்தை இந்த ஆய்வு பொய்யாக்குகிறது. அரேபியாவின் உட்பகுதிகளில் நடத்தப்பட்ட முந்தைய அகழாய்வுகளில் மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எலும்புகூடுகள் எதுவும் கிடைக்காமல் இருந்தது. இப்போது அதுவும் கிடைத்துள்ளது.

வார்த்தை போரில் அமெரிக்கா - ரஷ்யா

படத்தின் காப்புரிமை AFP

சிரியா மீதான ரசாயன தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்காவும் ரஷ்யாவும் ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் வார்த்தை போரில் ஈடுப்பட்டன. சிரியா டூமா மீது ரசாயன தாக்குதல் தொடுக்கப்பட்டது என்பது உண்மை அல்ல என்றும், அதற்கு அமெரிக்கா காட்டும் ராணுவ எதிர்வினைக்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யாவின் பிரதிநிதி வசிலி நபியென்சியா கூறினார். அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி சிரியா ராணுவத்துக்கு உதவும் ரஷ்யாவின் கரங்களில் சிரியா குழந்தைகளின் குருதி படிந்துள்ளது என்றார்.

கொல்லப்பட்ட வனத்துறை அதிகாரிகள்

படத்தின் காப்புரிமை AFP

ஜனநாயக காங்கோ குடியரசில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் ஐந்து வனத் துறை அதிகாரிகளும் அவர்களது ஓட்டுநர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அந்த சரணாலயத்தில் பதுங்கி இருக்கும் சில கிளர்ச்சியாளர்களால் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது அங்கிருந்து வரும் செய்திகள். இந்த வனத்தில் தான் அழிந்து வரும் மலை கொரில்லாக்கள் வசிக்கின்றன. சட்டத்துக்கு புறம்பாக இங்கு வேட்டையில் ஈடுபடும் டி.ஆர் காங்கோ கிளர்ச்சி குழு, வேட்டையிலும் ஈடுபடுகின்றனர்.

அவமானகரமான செயல்

படத்தின் காப்புரிமை Getty Images

தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்த எஃப்.பி.ஐ சோதனையானது ’அவமானகரமான செயல்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். ஆபாச பட நடிகைக்கு பணம் அளித்தது தொடர்பான ஆவணங்கள் இந்த சோதனையில் சிக்கி உள்ளன என்கின்றன அமெரிக்க ஊடகங்கள். இந்த சோதனை குறித்து வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப்,"இந்த சூனிய வேட்டை தொடர்ந்து நடக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: