சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல், தலைநகரில் போராட்டம்

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.

படத்தின் காப்புரிமை PA
Image caption சைப்ரஸில் உள்ள அக்ரோத்திரி விமானப் படைத் தளத்தில் இருந்து நான்கு பிரிட்டிஷ் டொர்னடோ போர் விமானங்கள் இன்று அதிகாலை சிரியா கிளம்பின.

பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

'காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்'

இது மோசமான மற்றும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் என்று சிரியா கூறியுள்ளது.

ஹோம்ஸ் மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை இலக்கு வைத்து அமெரிக்க கூட்டணிப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டு, அவை தங்கள் பாதையில் இருந்து திருப்பப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்று குடிமக்கள் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் அரசு செய்தி முகமையான சனா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான தாக்குதலை எதிர்கொள்ள, தங்கள் நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், சோவியத் ரஷ்யா காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய தளவாடங்களையே சிரியா பயன்படுத்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்

படத்தின் காப்புரிமை AFP
Image caption மத்திய தரைக்கடலில் உள்ள ஒரு பிரெஞ்சு போர்க் கப்பலில் இருந்து சிரியாவை நோக்கி ஏவப்படும் ஓர் ஏவுகணை

கடந்த வாரம் சிரியாவின் டூமா நகரில் சிரியா படையினரால் நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ரசாயனத் தாக்குதல் நடத்தியதை சிரியா மறுத்திருந்தது. சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என்று ரஷ்யாவும் அமெரிக்காவை எச்சரித்திருந்தது.

அமெரிக்கக் கூட்டணிப் படைகளின் தாக்குதலை எதிர்த்து சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

"ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

சிரியாவின் ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் குறித்து பேசியுள்ள அவர் "இந்தத் தாக்குதல்கள் ஒரு மனிதர் நடத்தும் தாக்குதல்கள் அல்ல, ஓர் அசுரனின் தாக்குதல்," என்று சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்தை அவர் விமர்சித்துள்ளார்.

சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே சிரியா அதிபர் அல்-அசாத் வழக்கமாக தமது அலுவலகத்துக்கு செல்லும் காணொளி ஒன்றை அவரது அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிலவி வரும் சிரியாவில் மேற்கத்திய நாடுகளின் இந்தத் தாக்குதல் சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் அரசுக்கு எதிரான தாக்குதல்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Image caption தாக்குதல் நடக்கும் இடங்கள்

எங்கெல்லாம் தாக்குதல் நடந்தது?

கீழ்கண்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஜோசஃப் டன்ஃபோர்டு கூறியுள்ளனர்.

  • டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம்.
  • ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு.
  • ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம்.

ரஷ்ய படைகளைச் சேர்ந்தவர்கள் இறப்பைக் குறைக்கும் வகையில் தாக்குதல் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் டன்ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே வெடிச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் போகாது என்று சிரியாவின் முக்கியக் கூட்டாளியான ரஷ்யா அமெரிக்காவுக்கான தங்கள் நாட்டின் தூதர் மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

"முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் மீண்டும் அச்சுறுத்தப்பட்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் போகாது. அனைத்து பொறுப்புகளும் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் வசம் உள்ளன," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சிரியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே ராணுவ பலத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பிரிட்டனின் டொர்னடோ ஜெட் போர் விமானங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தங்கள் நாடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

"டஜன் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். வரம்பு மீறப்பட்டுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

சிரியாவின் பல்வேறு பகுதிகள் தொலைதூரம் சென்று தாக்கும் 'டோமாஹாக்' வகை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு இழப்புகள் எதுவும் உண்டாகவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியுள்ளார்.

தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை சிரியா நிறுத்தும் வரை தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்று முன்னதாக டிரம்ப் கூறியிருந்தார்.

தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: