“பழிவாங்கும் எண்ணத்தோடு திரும்பி வந்துள்ளது பனிப்போர்” - ஐநா பொது செயலர் எச்சரிக்கை

  • 14 ஏப்ரல் 2018

பழிவாங்கும் எண்ணத்தோடு பனிப்போர் மனப்பான்மை திரும்பி வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் ஆன்றணியோ குட்டர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Sebastian Widmann/Getty Images

ஆபத்து வளர்வதை மேலாண்மை செய்கின்ற பாரம்பரிய பொறிமுறைகள் இப்போது ஏதுமில்லை என்று தோன்றுவதாக பாதுகாப்பு அவையில் பேசியபோது குட்ரஸ் தெரிவித்திருக்கிறார்.

வர்த்தகப்போர் பழிவாங்கும் எண்ணத்தோடு, வித்தியாசமான முறையில் வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் நாடுகள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள நிலைமை குழப்பமாக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

சிரியா தொடர்பாக பதற்றம் அதிகரிப்பது உலகம் முழுவதும் ராணுவ தளவாடங்களின் அதிகரிப்புக்கு இட்டுச்செல்லும் என்று குட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலால் உருவாகியுள்ள மோசமான நிலைமையில் கூடிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தின் தொடக்கத்தில் குட்ரஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் ஆதரவோடு இருக்கும் சிரியா அரசை கவிழ்ப்பதில் மட்டுமே அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆர்வம் கொண்டுள்ளன என்று குட்ரசுக்குப் பிறகு பேசிய ரஷ்ய தூதர் தெரிவித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப்போரின் வெற்றிக்கு பிறகு தோன்றிய இந்தப் பனிப்போர், சோவியத் ஒன்றிய நாடுகளை ஓரணியாகவும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளையும் இன்னொரு அணியாகவும் எதிரிகளாகவே பார்க்கும் மனப்பான்மையில் செயல்பட செய்து வந்தது.

கடந்த 7 ஆண்டுகளில் குறைந்த்து 50 முறை ரசாயன ஆயுதங்களை சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் பயன்படுத்தியுள்ளதாக ஐநாவிலுள்ள அமெரிக்க தூதர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிரியாவின் நிலைமை திரும்பி வர முடியாத எல்லைக்கு சென்று விட்டது என்றும், பொதுவான பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பிரான்ஸ் தோள் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் பிரான்ஸ் தூதர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: