கோவை: காஷ்மீர் வல்லுறவு குறித்து பேசிய சட்டக்கல்லூரி மாணவி இடைநீக்கம்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவாவில் எட்டு வயது சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து வகுப்பில் மாணவர்களிடையே பேசியதால் கோவையிலுள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Image caption ஆர்.பிரியா

கோவை சட்டக்கல்லூரியில் இளநிலை பட்டபடிப்புக்கு பின் பயிலும் மூன்றாண்டு படிப்பான எல்.எல்.பி படிப்பின் முதலாமாண்டு மாணவி ஆர்.பிரியா.

நடப்பு செமெஸ்டருக்கான பாடங்களை முடித்துவிட்டதால், தங்கள் வகுப்பின் ஆங்கில ஆசிரியை மாணவர்கள் தங்கள் மேடைப் பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் அனைத்து மாணவர்களையும் வெள்ளிக்கிழமை வகுப்பின் முன்பாக பேசச் சொன்னதாக பிபிசி தமிழிடம் பேசிய பிரியா கூறினார்.

"பேச யாரும் முன்வராத நிலையில் ஆசிரியை என்னை வந்து பேசச் சொன்னார். நான் காஷ்மீர் சிறுமி குறித்துப் பேசினேன். எட்டு வயது சிறுமி ஒரு இந்துக் கோயிலுக்குள் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இரண்டு மாதக் குழந்தை கூட பாலியல் வல்லுறவு செய்யப்படும் நிலை இந்தியாவில் உள்ளது. எனவே பெண்கள் உடையை இந்தக் குற்றங்களுக்கான காரணமாகக் கூற முடியாது. சமூகத்தின் சாதி, மத, ஆணாதிக்க சிந்தனை மாற வேண்டும்," என்று பேசியதாகக் கூறினார் பிரியா.

பிரியாவுக்கு பிறகு சில மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, வகுப்பிலிருந்து சில மாணவர்கள் வெளியேறிவிட்டதாகவும், வெளியேறிய மாணவர்களிடம் பேசிய அம்மு எனும் பேராசிரியை வகுப்பு நேரங்களில் பாடங்களுக்கு அப்பாற்பட்டவற்றைப் பேச அனுமதித்ததாக ஆங்கில ஆசிரியையை கடிந்துகொண்டதாகவும், பிரியாவை அழைத்துச் சென்று முதல்வர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்ததாகவும் பிரியா கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை EPA

என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் என்னை இடைநீக்கம் செய்துவிட்டார்கள் என்று தனது கல்லூரி நிர்வாகத்தின் மீது தற்போது குற்றம் சாட்டுகிறார் பிரியா.

பேராசிரியை அம்முவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, "பிரியா காஷ்மீர் சம்பவம் பற்றி பேசியதால் இடைநீக்கம் செய்யப்படவில்லை. இதற்கு மேல் முதல்வரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்," என்று கூறினார்.

முதல்வர் கோபாலகிருஷ்ணனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, "பிரியா வகுப்பில் பேசியபோது மதம் மற்றும் பாலின ரீதியான பிளவை உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார். மாணவர்களை கட்டாயப்படுத்தி போராட்டங்களுக்கு வரச் சொல்வதாகவும் சில மாணவர்கள் கூறுகின்றனர். இது குறித்து அவரது வகுப்பு மாணவர்கள் சிலரும், பேராசிரியை அம்முவும் எழுத்துபூர்வமாகப் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது விசாரணை நடந்து வருகிறது. இப்பிரச்சனை குறித்த அறிக்கை சட்டக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை முடிந்தபின்னர் அவரது இடைநீக்கத்தை ரத்து செய்யலாமா, மேற்கொண்டு பிரியா மீது நடவடிக்கை எடுக்கலாமா என்று முடிவு செய்யப்படும்," என்று தெரிவித்தார்.

மாணவி பிரியா புரட்சிகர மாணவர் முன்னணி எனும் மாணவர் அமைப்பில் ஓர் அங்கமாக இருக்கிறார். பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்த மாணவர் போராட்டங்கள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் தான் சார்ந்திருக்கும் மாணவர் அமைப்பு சார்பில் கலந்துகொண்டுள்ளதாக பிரியா தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: