அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்

மாலை 4:45: சிரியா மீதான வான்வழி தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது - சீனா

படத்தின் காப்புரிமை Getty Images

சிரியா மீதான வான்வழி தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங், சர்வதேச உறவுகளில் ஆயுத சக்தி பயன்படுத்தப்படுவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றும், ஐக்கிய நாடுகள் அவையை தாண்டிய ராணுவ நடவடிக்கை சர்வதேச கொள்கைகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும் கூறியுள்ளார்.

மாலை 4:45: சிரியா தாக்குதலுக்கு சட்டபூர்வ அடிப்படை இல்லை - பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர்

சிரியா மீது பிரிட்டன் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு எந்தவொரு சட்டபூர்வ அடிப்படையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை MoD

அமெரிக்காவின் தலைமையில் நடத்தப்படுகின்ற ராணுவ தாக்குதலுக்கு பிரிட்டனின் போர் விமானங்களை அனுப்புவதற்கு முன்னால், பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மாலை 4:14: மேற்குலக நாடுகளின் வான்வழி தாக்குதலை நிராகரித்த கிளர்ச்சியாளர்

சிரியா அரசின் போர் திறனை பலவீனமாக்குவதற்கு போதுமானவைகளாக மேற்குலக நாடுகளின் வான்வழி தாக்குதல்கள் அமையும் என்று சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான பிரிவுகளிடம் நம்பிக்கை இருந்தது.

இதுவரை, மேற்குலக நாடுகளின் தாக்குதல் குறிப்பிடும்படியாக இல்லை என்று முன்னிலை கிளர்ச்சியாளரான முகமது அல்லுஷ் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குற்றத்தின் கருவியைதான் தாக்கியுள்ளன. குற்றவாளியை அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதியம் 15:57 மணி: சிரியா மீதான தாக்குதல்கள் எங்களை வலிமையாக்கும் - அசாத்

படத்தின் காப்புரிமை Reuters

சிரியாவிலுள்ள தீவிரவாதத்தை நசுக்குவதற்கு இதுவரை இல்லாத அளவுக்கான வலிமையை அமெரிக்கா தலைமையிலான தாக்குதல் வழங்கியுள்ளதாக சிரியாவின் அதிபர் பஷார் அல்-அசாத் தெரிவித்திருக்கிறார்.

இரான் அதிபர் ஹசன் ரூஹானியோடு தொலைபேசியில் பேசியபோது தெரிவிக்கப்பட்ட இந்த கூற்று சிரியா அதிபரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது,

மதியம் 15:53 மணி: சிரியா தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் - ரஷ்யா

சிரியா மீது தாக்குதல் தொடங்கியிருப்பது அமைதி பேச்சுவார்த்தைகளில் எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாக அரசின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கடும்போக்காளர்களும், கிளர்ச்சியாளர்களும் சரியானதையே செய்கிறார்கள் என்ற வலுவான சமிக்கையை இந்த நடவடிக்கை வழங்கியுள்ளதாக மரியா ஸக்காரேவா கூறியுள்ளார்.

மதியம் 2:45 மணி: மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை நியாயப்படுத்த விரும்புகிறது மேற்குலம் என்றார் இரான் அதிபர்

படத்தின் காப்புரிமை EPA

அழிவையும், நாசத்தையும் தவிர மத்திய கிழக்கில் அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதலால் எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை என்று கூறி சிரியா மீது அமெரிக்க தலைமையில் நடைபெறும் தாக்குதலை இரான் அதிபர் ஹசன் ரூஹானி கண்டித்துள்ளார்.

சனிக்கிழமை காலை இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனியுடன் நடத்திய கூட்டத்தில் இந்த தாக்குதல் மூலம் மேற்குலக நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை நியாயப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துளாார்.

மதியம் 2:45 மணி: சிரியா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு

சிரியா மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது.

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது வரம்பை தாண்டி செயல்படுவதாக அமையும் என்று அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

எனவே, இன்று அதிகாலையில் அமெரிக்காவின் தலைமையில் பிரான்சும், பிரிட்டனும் அந்த எதிர்ப்பை செயலில் காட்டியுள்ளன என்று இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகல் 2:44 மணி: யாரும் உயிரிழக்கவில்லை - ரஷ்யா

சிரியா மீது நடத்தப்பட்டு்ள்ள வான்வழி தாக்குதலில் பொது மக்கள் அல்லது ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பகல் 2:43 மணி: சர்வதேச விசாரணை முடிவுக்கு காத்திருக்க அவசியமில்லை - தெரீசா மே

சிரியாவில் தாக்குதல் தொடுப்பதற்கு, ரசாயன தாக்குதலை உறுதி செய்கின்ற சர்வதேச கண்காணிப்பு குழுவின் விசாரணை முடிவுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

டூமா நகரில் என்ன நடந்தது என்பது பற்றி பிரிட்டனே சுய ஆய்வு செய்து கொண்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வாரத்தில் சிரியாவின் டூமா நகரில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதல் பற்றிய சர்வதேச விசாரணைக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று தெரீசா மே தெரிவித்திருக்கிறார்.

மதியம் 2:43 மணி: ஹோம்ஸ் நகரில் அழிவுகளை காட்டும் புகைப்படங்கள்

படத்தின் காப்புரிமை Al-Ikhbariyah al-Suriyah

சிரியா அரசு ஆதரவு செய்தி சேனல் ஒளிபரப்பில் ஹோம்ஸ் நகர்புறத்தில் எடுக்கப்பட்ட காணொளி பதிவில் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகள் காட்டப்படுகின்றன.

காலை 8:23 மணி: விளைவுகளை எதிர்பார்க்கவும் - ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

சிரியா மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு பதில் நடவடிக்கை இல்லாமல் போகாது என்று ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

காலை 8:02 மணி: பொது மக்களின் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்கா, பிரான்சோடு சேர்ந்து பிரிட்டன் நடத்துகின்ற தாக்குதலில் பொது மக்களின் உயிரிழப்பை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரிட்டனின் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

சிரியாவின் மீதான தாக்குதலில் பிரிட்டன் ஈடுப்பட்டுள்ளதை அறிவித்துபோது, தெரீசா மே இதனை தெரிவித்துள்ளார்.

காலை 7:48 மணி: ரசாயன சேமிப்பு கிடங்கில் தாக்குவதற்கு பிரிட்டனின் டேர்னாடோ ஜெட் விமானங்கள்

சிரியாவின் ராணுவ படைதளங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு பிரிட்டன் விமான படையின் டேர்னாடோ ஜெட் விமானங்கள் அனுப்பப்படுவதாக பிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலை 7:45 மணி: தாக்குதல் தவிர மாற்று வழியில்லை - பிரிட்டன் பிரதமர்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக தாக்குதலை தொடங்கிய பின்னர் முதல்முறையாக பிரிட்டன் பிரதமர் இது பற்றி பேசியுள்ளார்.

சிரியா அரசால் பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்களை குறைத்து, அவற்றின் பயன்பாட்டை ஒழிக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

காலை 7:32 மணி: டூமா நகர தாக்குதல் அரக்கனால் நடத்தப்பட்டது

சிரியாவின் டூமா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதர் ஒருவரால் நடத்தப்பட்டதல்ல. ஆனால், ஓர் அரக்கனால் நடத்தப்பட்டது என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவின் அதிபர் அசாத்துக்கு ஆதரவு வழங்கி வரும் ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகள், அவை யாருக்கு ஆதரவு வழங்கி வருகின்றன என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலை 7:26 மணி: சிரியாவில் தாக்குதல் நடத்த டிரம்ப் ஆணை

படத்தின் காப்புரிமை Mike Theiler - Pool/Getty Images

சிரியா அரசு ராணுவ தளங்களில் ஏவுகணை தாககுதல்களை தொடங்கியுள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன.

கட்ந்த சனிக்கிழமை சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்தில் சிரியாவின் டூமா நகரில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துவதற்கு ஆணையிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தாங்கள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்றும் டூமா நகர ரசாயன தாக்குதல் சம்பவம் புனையப்பட்டது என்றும் சிரிய அரசு கூறிவருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: