உலகப் பார்வை: வலதுசாரி பிரதமருக்கு எதிராக திரண்ட ஒரு லட்சம் மக்கள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

வலதுசாரி பிரதமருக்கு எதிராக திரண்ட ஒரு லட்சம் மக்கள்

படத்தின் காப்புரிமை Reuters

மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வலதுசாரி பிரதமரான விக்டோர் ஆர்பனுக்கு எதிராக ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை திரண்டனர். இதே அளவு மக்கள் அவருக்கு ஆதரவாக கடந்த மாதம் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிகம் அதிகாரம் அளிப்பதற்கு எதிரானவர் விக்டோர். இவர் அண்மையில் நடந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற இடங்களை கைபற்றி இருந்தார். அவர் குடியேற்றங்களுகெதிரான கொள்கை உடையவரும் கூட. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற மக்கள், விக்டோர் தேர்தலில் முறைகேடு செய்துதான் வென்றார் என்றனர். ஆனால் விக்டோர், "நாங்கள் வென்றுவிட்டோம். அவ்வளவுதான்" என்று பதிலளித்துள்ளார்.

தாக்குதல் நடத்த தயாராகவே இருக்கிறோம்- சிரியாவை எச்சரிக்கும் டிரம்ப்

படத்தின் காப்புரிமை AFP

ரசாயன ஆயுதங்களை மீண்டும் சிரியா பயன்படுத்தினால், அதன் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அமெரிக்கா இப்போதும் தயாரான நிலையிலேயே உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை எச்சரித்துள்ளார். சிரியா அரசு ராணுவ தளங்களில் ஏவுகணை தாக்குதல்களை நேற்று (சனிக்கிழமை) அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நடத்தின. கடந்த சனிக்கிழமை சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்நாடுகள் கூறின. நேற்று இரவு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை இவ்வாறாக எச்சரித்துள்ளார்.

15 பெண்கள் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்

படத்தின் காப்புரிமை AFP

போகோ ஹராமால் கடத்தப்பட்ட 112 சிபோக் பெண்களில் 15 பேர் மட்டுமே உயிருடன் இருக்கலாம் என்று இஸ்லாமியவாத குழுவான போகோ ஹராமுடன் தொடர்பில் உள்ள நைஜீரிய பத்திரிகையாளர் ஒருவர் கூறி உள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போகோ ஹராமால் 276 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டார்கள். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்ட சூழ்நிலையில் இவ்வாறாக அந்த பத்திரிகையாளர் கூறி உள்ளார். அந்த பத்திரிகையாளரின் பெயர் அஹமத் சல்கிடா. அரசின் சார்பாக அந்த பெண்களை மீட்பதற்காக அந்த குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஆனால், அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான பல்வேறு வாய்ப்புகள் தவறவிடப்பட்டதாகவும் கூறுகிறார். ஆனால், நைஜீரியா அரசாங்கம் அந்த பெண்கள் இறந்திருக்கலாம் என்று எண்ணுவதற்கு ஒரு காரணமும் இல்லை என்கிறது.

வின்னி மண்டேலாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

படத்தின் காப்புரிமை WALTER DHALDHLA

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இனவெறிக்கு எதிரான பிரச்சாகரான 81 வயதாகும் வின்னி மண்டேலாவின் உடல் அரசு மாரியாதையுடன் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி இவர். இம்மாதம் இரண்டாம் தேதி வின்னி மண்டேலா மரணித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்