அமெரிக்காவும் வட கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க மத்திய புலானாய்வு முகமையின் இயக்குநர் மைக் பாம்பேயோ வட கொரிய தலைவர் கிம்முடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பியாங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகள் குறித்த சந்திப்புகள் ஈஸ்டர் சமயத்தில் நடைபெற்றன.

உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் ஒப்புக் கொண்டார்.

ஃபுளோரிடாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை வரவேற்று பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.

உயர்மட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த அவர், கிம் ஜாங் உன்னுடனான சந்திப்புக்கு ஐந்து இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி மற்றும் வட கொரியாவின் அண்டை நாடான ஜப்பானுக்கு இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் இல்லாமல் போகலாம் என ஜப்பானில் அச்சங்கள் எழுந்துள்ளன.

படத்தின் காப்புரிமை AFP

டிரம்ப் மற்றும் அபேவுக்கு இடையில் சுமுகமான உறவு தொடர்ந்து வருகிறது. டிரம்ப் இரண்டாவது முறையாக அபேவை தனது ’மார் அ லாகோ’ ஓய்வு விடுதிக்கு அழைத்துள்ளார். அதில் அவர்கள் கோல்ஃப் விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தலைவர்கள் மீதும் பல்வேறு விசாரணைகள் உள்ள நிலையில், இது ஒரு ஒய்வு நேரம் என கூறலாம். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசாரணை, தன்னுடன் பாலியல் தொடர்பு வைத்து கொண்டதாக ஆபாசப் பட நடிகை தெரிவித்த புகார், முன்னாள் மத்திய புலானாய்வு தலைவர் கூறிய குற்றச்சாட்டுகள் என அடுக்கடுக்கான விசாரணைகள் டிரம்ப் மீது உள்ளன.

சர்ச்சைக்குரிய தேசியவாத குழு ஒன்றிற்கு, அரசுக்கு சொந்தமான இடம் ஒன்றை சந்தை விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்றதாக அபே மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த சந்திப்பு எப்போது நடைபெறும்?

நேரடியான பேச்சுவார்த்தைக்கு வட கொரியா விடுத்த அழைப்பை அமெரிக்கா ஒப்புக் கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

இதுவரை அமெரிக்க அதிபர்கள் வட கொரிய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில்லை.

இந்த பேச்சுவார்த்தை ஜூன் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

வட கொரியா பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது,மேலும் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா தடைகளை மீறுவது ஆகியவற்றிற்குகாக தனித்து விடப்பட்டது.

இதுவரை ஆறு அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது மேலும் அமெரிக்காவை தாக்க கூடிய ஏவுகணைகளையும் வட கொரியா வைத்துள்ளது.

ஆனால் இந்த வருடம் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொியா பங்கேற்றது பிற நாடுகளுடனான நல்லுறவுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: