பிரிட்டன்: 'வின்ட்ரஷ்' தலைமுறையினர் பிரச்சனை: மன்னிப்பு கோரினார் தெரீசா மே

காமன்வெல்த் குடிமக்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக கரீபிய நாட்டு தலைவர்களிடம் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே மன்னிப்பு கேட்டுள்ளார்.

இவர்கள் பிரிட்டனில் பல தசாப்தங்களாக வாழ்ந்து, வேலை செய்த பின்னரும், அதிகாரபூர்வ ஆவணங்கள் இல்லாத காரணத்தால், சட்டபூர்வமற்ற முறையில் வாழ்வதாக கூறப்படுகின்றனர்.

1948 முதல் 1971ம் ஆண்டு வரை கரீபிய நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு சென்று குடியேறியவர்களை 'வின்ட்ரஷ்' தலைமுறையினர் என்று முத்திரை குத்தியுள்ளனர்.

போருக்கு பின்னர் பிரிட்டனில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாகுறை காரணமாக ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டோபாகோ, பிற தீவுகள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு 1948ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி எஸ்செக்ஸில், தில்பர்ரி டக்ஸை வந்தடைந்த "எம்வி எம்பயர் 'வின்ட்ரஷ்'" கப்பலின் பெயரால் இந்த தலைமுறையினர் குறிப்பிடப்படுகின்றனர்.

இந்த கப்பல் பல குழந்தைகள் உட்பட 492 பயணிகளை ஏற்றி வந்தது.

'வின்ட்ரஷ்' தலைமுறையினரை சேர்ந்தோர் எத்தனை பேர் என்று தெளிவாக தெரியவில்லை.

பெற்றோரின் விசாவோடு வந்திருந்த குழந்தைகள் வளர்ந்த பின்னர் ஆவணங்கள் பெற விண்ணப்பிக்கவில்லை. இத்தகையோர் ஆயிரக்கணக்கானோர் பிரிட்டனில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

1971ம் ஆண்டுக்கு முன்னர் 'வின்ட்ரஷ்' கப்பலில் வந்தவர்கள் உள்பட காமன்வெல்த் நாடுகளில் பிறந்த 5 லட்சம் பேர் பிரிட்டனில் தற்போது வாழ்வதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் குடிவரவு கண்காணிப்பகம் மதிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்