தனக்குப் புனிதர் தோற்றம் ஏற்படுத்த காமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்துகிறாரா மோதி?

படத்தின் காப்புரிமை Getty Images

லண்டனில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆளும் பாரதிய ஜனதா கட்சி பற்றிய நல்லதொரு தோற்றத்தை வழங்க முற்பட்டுள்ளார்.

பிரிட்டனின் தலைநகர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள சென்டரல் ஹாலில் "எல்லாரோடும் இந்தியாவின் உரையாடல்" என்ற தலைப்பிலான நிகழ்வில் 2.20 மணிநேரம் அவர் பேசியுள்ளார். இந்த முழு உரையும் எழுதி வழங்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

இந்த நிகழ்வில், என்ன நடைபெற வேண்டும், என்ன கேள்விகள் கேட்கப்படும், என்ன கேள்விகள் கேட்ப்படலாம், அதற்கு என்ன பதில்கள் வழங்குவது எல்லாம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தாக தோன்றுகிறது. இதனை அனைவரும் ஊகித்து அறிந்து கொள்ளும் நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதியை பாடலாசிரியர் பராசூன் ஜோஷி பேட்டிகண்டார். பிரதமர் மோடி மகிழ்சியோடு பதிலளிப்பதற்கான கேள்விகளை கேட்பதுபோல அவர் கேள்விகளை கேட்டார். நரேந்திர மோதி தன்னால் ஏற்பட்ட வளர்ச்சி அறிக்கையை இந்த நிகழ்ச்சியில் சமர்ப்பித்திருக்கிறார்.

இதில் பல தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பிடும்படியாக பாகிஸ்தான் பற்றி அவர் தெரிவித்திருக்கிற சில தகவல்கள், நாம் முதல்முறையாகக் கேட்பவையாக இருக்கலாம்.

தேர்தல் தயாரிப்புக்காக சொல்லப்படும் ஒட்டுமொத்தப் பார்வையாக இது அமைந்தது. லிங்காயத்து தத்துவஞானியான கர்நாடகாவை சேர்ந்த பசவன்னா பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய சிலைக்கு அருகில் நின்று அவர் புகைப்படமும் எடுத்துள்ளார். அடுத்த மாதம் கர்நாடகாவில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

படத்தின் காப்புரிமை TWITTER/BJP4Delhi/BBC

திரைப்படங்களில் சல்மான் கான் திடீரென எழுச்சியுரை ஆற்றுவதுபோல, நரேந்திர மோடியும் இந்த நிகழ்வில் எழுச்சியூட்டும் வகையில் உரையாற்றியுள்ளார்.

தான் செய்த பலவற்றையும் தலைசிறந்த பணிகள் என்று அவர் இந்த நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மறுபுறம் வளர்ச்சியில் பாகிஸ்தானுக்கு பின்னால் இந்தியா இருப்பதுபோல முன் எப்போதும் நிகழவே இல்லை என்று விமசகர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் நடைபெறும் வன்முறைகளும் அதிகரித்துள்ளன. துல்லியமான தாக்குதல் என்று கூறப்படுவதற்குப் பின்னரும், இத்தகைய பல சம்பவங்கள் நடைந்தேறின. ஆனால், இந்தியாவுக்கு முன்னால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது என்ற பார்வையை நரேந்திர மோதி இந்த நிகழ்வில் சமர்ப்பித்துள்ளார்.

என்னுடைய எல்லா பணிகளும் தனித்தன்மையானவை என்றும் நாட்டில் நடைபெறும் பாலியல் வல்லுறவு பற்றியும் மோதி இங்கு பேசியுள்ளார். ஆனால், சிறியதொரு விடயத்திற்காக உடனுக்குடன் டுவிட்டரில் கருத்துக்கள் பதிவிடும் நரேந்திரமோதி, நாட்டையே உலுக்கிய சம்பவங்களுக்கு பல நாட்களாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மேற்கொண்ட அரேபியா மற்றும் இஸ்ரேல் பயணங்களில் மோதி அதிக விளம்பரங்களை தேடி கொண்டார். நரேந்திர மோதியைப் போல தன்னைதானே புகழ்ந்து கொண்டு, தன்னுடைய பணிகள் எல்லாம் தனித்துவம் வாய்ந்தவை என்று எந்தவொரு பிரதமரும் கூறியிருக்கமாட்டார். லண்டனில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி முழுவதும் அவரைப் புகழ்வதாகவே நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கேள்வி கேட்டவர்கள் அனைவரும் ஏற்கெனவே அதற்காக குறிக்கப்பட்டவர்களாகவே தோன்றியது. வெளியே போராட்டம் நடைபெற்றபோது, எல்லோரும் இந்த கேள்விகளை அவரிடம் எழுப்பி கொண்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிகழ்ச்சி முழுவதும் அவருடைய தோற்றத்தை மேம்படுத்தும் ஒன்றாக இருந்தது. முழு நிகழ்ச்சியிலும் தன்னை பற்றியே பேசியது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வில், தன்னுடைய பெயரை 100 முறைக்கு மேலாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரைப் பற்றிய புகழ்ச்சி எல்லாம், எளிமையானவர், டீக்கடைக்காரர், ஆனால் புனிதமானவர் என்றுதான் நிறைவுற்றன. தன்னை எளிமையானவர் என்று கூறிக்கொள்பவர் தன்னைப் பற்றியே இவ்வளவு புகழ்ந்துகொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.

மோதிக்கு ஆதரவானோர் பங்கேற்றதற்கு அதிகமாகவே அவருக்கு எதிரானோர் வெளியில் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டிருந்தனர். அதில் பெண்களும் அடங்குவர். மோதிக்கு எதிரான முழக்கங்களில் "வெட்ககேடு, வெட்ககேடு" என்ற சொற்பதமும் ஒலித்தது.

இந்தப் போராட்டத்திற்கு வந்திருந்த வார்ரிக் பல்கலைக்கழக ஆசிரியர் ரஷிமி வர்மா, பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளுக்கு நரேந்திர மோதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே போராட வந்துள்ளதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மோதியை ஆதரித்த பெண்ணொருவர், நாங்கள் மோதிக்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளோம். அவர் நாட்டை முன்னேற்றப் பாதையில் வழி நடத்துகிறார்.

மோதி அமைதியாக செய்து வருவதைப் போல பலவற்றை காங்கிரஸ் அல்லது பிற கட்சிகள் செய்யவில்லை. வெளிநாட்டில் கூட பலர் மோதிக்கு ஆதரவு அளிப்பது ஆச்சரியமளிக்கிறது என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

இந்தியாவில் நடைபெறும் பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்கள் பற்றிப் பேசுவதற்கு லண்டன் மாநகரத்தை தேர்வு செய்திருக்கிறார். இதற்கு முன்னால் யாரும் செய்யாத வளர்ச்சியைத் தான் செய்துள்ளதாக மோதி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இந்தியாவின் தோற்றத்தை மேம்படுத்த அவர் நினைப்பதாகத் தெரிகிறது. ஆனால், இது போன்ற செயல்களால் இந்தியாவின் தோற்றம் சீர்குலைந்து வருகிறது என்பதுதான் உண்மை.

மோதியின் கருத்துக்கு பாகிஸ்தானின் பதில்

பாகிஸ்தானில் துல்லிய ராணுவ தாக்குதல் நடத்தியதாக பிரதமர் மோதி தெரிவித்துள்ள கருத்து தொடர்பான கேள்வியொன்றுக்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தானின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் டாக்டர் முகமத் ஃபைசல் இந்திய பிரதமரின் கூற்றை பாகிஸ்தான் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது. இவை ''அபத்தமான குற்றச்சாட்டுகள்'' எனக்கூறியுள்ளார்.

''இந்தியாவின் கற்பனை இது. வெறும் குற்றச்சாட்டுகளை ஒரு போதும் உண்மையாக மாற்றமுடியாது '' எனத் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

'' மேலும் கற்பழிப்பை ஓர் கருவியாக பயன்படுத்திவரும் அதன் கொள்கையானது சர்வதேச விசாரணைக்கு வரும்போது தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மீதான கவனத்தை திருப்புவதற்காக இதனைச் செய்கிறது.

இந்திய ஆட்சியின் கீழ் இருக்கும் காஷ்மீரில் நடக்கும் விஷயங்களின் மீதான சர்வதேச கவனத்தை திருப்ப தனது உள்நாட்டு பிரச்னைகளை இது போன்ற மோசமான கொள்கை வித்தைகளால் அயல்நாட்டு பிரச்னைகளாக்கி நாடகம் போடுகிறது'' என அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: