உலகப் பார்வை: "அதிபர் டிரம்பை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது"

  • 20 ஏப்ரல் 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

அதிபர் டிரம்பை கட்டுப்படுத்த முடியாது

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டிரம்பை அவரை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது என முன்னாள் எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறியுள்ளார். டிரம்பின் நடவடிக்கைகளை தடுக்கவும் யாருமில்லை என அவர் தெரிவித்தார்.

டிரம்பின் நடத்தையானது நாட்டின் சட்டம் மற்றும் நேர்மை போன்ற தேசிய மதிப்பீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பிபிசியிடம் பேசிய கோமி கவலை தெரிவித்தார்.

கடந்தாண்டு மே மாதம், அதிபர் டிரம்ப் கோமியை பணி நீக்கம் செய்திருந்தார். 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான டிரம்ப் பிரச்சாரத்தில் ரஷ்யாவிற்கு தொடர்புள்ளதா என்ற விசாரணயை கோமி தொடங்கிருந்தார்.

சௌதி- ஏமன் எல்லையில் நடந்த தாக்குதலில் 4 பேர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஏமனை எல்லையாக கொண்ட ஆஸிர் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் நடந்த தாக்குதலில் 4 பாதுகாப்பு படை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 பேர் காயமடைந்ததாகவும் சௌதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சௌதியை சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மக்கள் நடனமாடியது குற்றம்

Image caption மஷாத் நகரம்

இரானின் மஷாத் நகரத்தில் உள்ள ஷாப்பிங் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நடனமாடியதற்காக, அங்குள்ள இஸ்லாமிய வழிகாட்டுதல் துறையின் தலைவர் கைது செய்யப்பட்டார்.

பொது இடங்களில் ஆண்கள், பெண்கள் இருவரும் ஒன்றாக இருப்பதோ அல்லது நடனடமாடுவதோ இரானின் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வழிகாட்டுதல் துறை அனுமதியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மக்கள் நடனமாடியது குற்றம் என்று நீதித்துறை அதிகாரி தெரிவித்தார்.

உலகளாவிய புற்றுநோய் தகவல் வங்கி

படத்தின் காப்புரிமை Science Photo Library

உலகம் முழுவதும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபர்களுக்கு உதவும் வகையில், புற்றுநோயாளிகளின் மருத்துவ தகவல்களை சேகரிக்க உலகளாவிய புற்றுநோய் தகவல் வங்கி ஒன்றினை ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரரான ஆன்ட்ரூ ஃபாரஸ்ட் தொடங்கியுள்ளார்.

இத்திட்டத்திற்கு ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள நன்கொடையாளர்கள், நூறு மில்லியன் டாலர்கள் தருவதாக உறுதியளித்துள்ளனர்.

மூளை கட்டி கொண்ட பிரிட்டனின் முன்னாள் அமைச்சர் டேம் டெஸ்ஸா ஜோவல், தன் மருத்துவ தகவல்களை முதன்முதலாக இந்த வங்கியில் வழங்க முன்வந்துள்ளார். புற்றுநோய்க்கான தகவல் வங்கிகள் ஏற்கனவே இருந்தாலும், இதுவரை எந்த நாடுகளும் அதனை எல்லை தாண்டி பகிர்ந்து கொண்டதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: