நீர் மூழ்கிக் கப்பலில் பெண் பத்திரிகையாளர் கொலை: கண்டுபிடிப்பாளருக்கு ஆயுள் தண்டனை

டென்மார்க் கண்டுபிடிப்பாளர் பீட்டர் மேட்சனின் நீர்மூழ்கிக் கப்பலில் வைத்து ஸ்வீடன் பெண் பத்திரிகையாளர் கிம் வால் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பிணையில் வர முடியாத ஆயுள் தண்டணை மேட்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

30 வயதான பெண் பத்திரிகையாளர் கிம் வாலை மூச்சு திணற வைத்து அல்லது தொண்டையை அறுத்து மேட்சன் திட்டமிட்டு கொலை செய்ததாக அரசு தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

உள்நாட்டிலேயே பீட்டர் மேட்சன் தயாரித்த நீர்மூழ்கிக் கப்பலில் அவரைப் பேட்டியெடுத்த பெண் பத்திரிகையாளர் கிம் வாலின் சிதைந்த சடலம், 11 நாளுக்கு பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி டென்மார்க் காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டது.

47 வயதான மேட்சனுக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை வழங்கியது கோபன்ஹேகனிலுள்ள நீதிமன்றம்.

கிம் வாலின் உடலை சிதைத்து, உடலை நீழ்மூழ்கிக் கப்பலில் இருந்து வீசியதாக முன்னர் மேட்சன் ஒப்புக்கொண்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகவும், பாலியல் தாக்குதல் தொடுத்தாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

கிம் வால் இறந்தது விபத்து என்ற மேட்சனின் கூற்றை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேட்சனின் கண்டுபிடிப்பு பற்றி பெண் பத்திரிகையாளர் கிம் வால் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

கோபன்ஹேகனில் இருந்து கடலில் சென்று மேட்சன் உருவாக்கிய 40 டன் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஆகஸ்ட் 10ம் தேதி மாலை சென்றதுதான் அவரை கடைசியாக பார்த்த தருணமாகும்.

இந்தப் பயணத்தில் இருந்து அவர் திரும்பாததை அறிந்த அவரது காதலர் அடுத்த நாளே இது பற்றி சந்தேகத்தை வெளியிட்டார்.

அதே நாள் மேட்சனின் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதால், அதிலிருந்து மேட்சன் மீட்கப்பட்டார்.

இந்த கப்பலை அவர் வேண்டுமென்றே மூழ்கடித்து விட்டதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி கிம் வாலின் சிதைந்த முண்டத்தை மிதிவண்டி வீரர் ஒருவர் கண்டு தகவல் தெரிவித்தார்.

ஆனால், அவரது தலை, கால்கள் மற்றும் ஆடைகள் ஒரு பையில் இட்டு பாரம் வைத்து மூழ்கடிக்கப்பட்டிருந்தது பின்னர் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பின்னர், நீர்முழ்கிக் கப்பலில் நடைந்தவை பற்றி முரண்பட்டத் தகவல்களை மேட்சன் வழங்கியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: