இந்தியாவில் ’மாமா ஹோ’ என அன்புடன் அழைக்கப்பட்ட வியட்நாமின் தந்தை

வியட்நாமில் நீங்கள் எங்கு பயணம் மேற்கொண்டாலும், எல்லா இடங்களிலும் வியட்நாமின் தந்தை ஹோ சி மின்னின் முகத்தை பார்க்காமல் நீங்கள் தப்பவே முடியாது.

அவர் எங்கும் நிறைந்து இருக்கிறார். போக்குவரத்து சந்திப்புகளிலுள்ள பதாகைகள், சுவரொட்டிகள் என எங்கும் தெரிகிறார். பூங்காக்களில் உறுதியான, உயரமாக சிலை வடிவில் அவர்தான் நிற்கிறார். அருங்காட்சியகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் அவர் வாழ்கிறார். இந்தியாவில் மகாத்மா காந்தி எப்படியோ அவ்வாறுதான் வியட்நாமில் ஹோ சி மின்.

நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 1969ம் ஆண்டு அவருடைய இறப்புக்கு பின்னர், பெரியதொரு நகரான சாய்கயனுக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டது. இப்போதும் இந்த நகரம் ஹோ சி மின் என்று அழைக்கப்படுகிறது. சாய்கயன் நகரின் மையத்தில் நாட்டிலேயே மிகவும் உயரமான ஹோ சி மின்னின் சிலை உள்ளது. இந்த சிலையில் வலது கையை உயர்த்தி கொண்டு இருக்கும் தங்களின் தலைவரைபோல, தங்களின் கையை உயர்த்தி இளைஞர்களும், இளம் பெண்களும் சுயப்படம் (செல்ஃபீ) எடுத்து கொள்கின்றனர்.

தலைநகர் ஹனோயிலுள்ள பரந்த சதுக்கத்தில் அவருடைய கல்லறை உள்ளது. தங்களுடைய நேசத்திற்குரிய தலைவருக்கு மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான வியட்நாம் மக்கள் நாள்தோறும் இங்கு குவிகின்றனர். புகைப்படக்கருவிகள் அனுமதிக்கப்படாத இந்த கல்லறைக்கு உள்ளே ஹோ சி மின்னின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய தலைவரை புகழ்ந்து பேசுவதை சராசரி வியட்நாமியர் ஒருவரால் நிறுத்திவிட முடியாது. வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த சிறுமி ஒருவர், "நாங்கள் ஹோ சி மின்னை மிகவும் நேசிக்கிறோம்" என்று தெரிவித்தார். ஸ்கூட்டரின் இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒரு தொழிலாளி, "அவர் எங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுதந்தார். இன்று நாங்கள் சுதந்திரமாக, ஓரளவு செழிபுற்றிருக்கிறோம் என்றால் அவர் வாங்கி தந்த சுதந்திரத்தால்தான்" என்று தனது தலைவரை வெகுவாக பாராட்டினார். சாய்கயன் சதுக்கத்தில் சுயப்படம் (செல்ஃபீ) எடுப்பதில் மிகவும் கவனம் கொண்டிருந்த இளம் பெண்கள் சிலரும் தங்களுடைய தலைவரை பற்றி புகழ்ந்து பேசினர்.

நவீன வியட்நாமின் தந்தையாக இருப்பதற்கு அப்பாற்பட்டு, ஹோ சி மின் அந்நாட்டின் முதல் அதிபராகவும் இருந்துள்ளார். போர்களத்தில் வீரதீர படையினராகவும், கவரக்கூடிய தலைவராகவும் அவர் விளங்கினார் என்பதில் சந்தேகமே இல்லை. 3 பெரிய படைப்பிரிவுகளான பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய போரில் வியட்நாமின் கம்யூனிஸ்ட் படையை அவர் வழிநடத்தினார்.

எல்லா போரிலும் வியட்நாம் வென்றது. எல்லா சிக்கல்களுக்கும் எதிராக அவர் பெற்ற வெற்றிகளுக்காக தேசிய சின்னமாக விளங்குகிறார். 20 ஆண்டுகளாக நடைபெற்ற ரத்த கறை படிந்த போருக்கு பின்னர், வியட்நாமை தவிர வேறு எந்த நாடும் வல்லரசான அமெரிக்காவை போரில் தேற்கடித்தது கிடையாது. வியட்நாம் மக்கள் இது பற்றி பெருடையடைகின்றனர்.

ஹோ சி மின் போர்க்களத்தில் ஆக்ரோஷமானவர் ஆனால் வெளியில் சாந்தமானவர்.

அவர் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார். 1945-ல் அதிபரான பிறகு அவர் சிறிய வீடு ஒன்றில் வசிக்க முடிவெடுத்தார். ஒரு அதிகாரபூர்வ சுற்றுலா வழிகாட்டி அந்த வீட்டைச் சுட்டிக்காட்டி '' நமது தலைவர் இங்கேதான் சில காலம் வாழ்ந்தார் அதன் பிறகு வலப்புறமுள்ள வீட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கேதான் அவரது வாழ்வின் கடைசி 11 வருடங்களை கழித்தார்'' என்கிறார். அவர் வசம் ஜனாதிபதி மாளிகை இருந்தது. ஆனால் அவர் பெரும்பாலான மக்கள் வாழும் வழியிலேயே தானும் வாழ விரும்புவதாக கூறினார்.

1890-ல் ஹோ சி மின் பிறந்தபோது வியட்நாம் பிரான்ஸ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. 1911-ல் பிரஞ்சு கப்பலில் சமையல்காரராக பணியாற்றுவதற்காக நாட்டை விட்டுச் சென்றபோது அவர் பதின் பருவத்தை கடந்து சில ஆண்டுகளே ஆகியிருந்தது. ஆனால் விரைவிலேயே பிரஞ்சு காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உலகத்தின் அபிப்ராயங்களை அணி திரட்ட வேண்டியத் தேவை தனக்கு உள்ளது எனப் புரிந்து கொண்டார்.

படத்தின் காப்புரிமை HCM museum

அவர் ஃபிரான்சில் ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்தார், மாஸ்கோவுக்கு பலமுறை பயணம் செய்த ஹோ சி மின் சீனாவில் 1930-1940களில் நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சீன புரட்சியில் பங்கெடுத்தார். அவரது புரட்சி செயல்பாடுகளுக்காக சீனாவில் கைது செய்யப்பட்டார். ஆனால் ஹோ சி மின் தனது நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதில் முழு கவனமும் செலுத்தினார். அவர் வியட்நாமுக்குச் சென்ற நான்கு வருடங்களில் அதாவது 1945-ல் சுதந்திரம் கிடைத்தது.

இவரை இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும். ஜவஹர்லால் நேருவின் நண்பர் என்பதால் இவருக்கு இங்கே புகழ் கிடைக்கவில்லை, அவருடைய புரட்சிகரமான யோசனைகளுக்காகவே இந்தியாவில் புகழ்பெற்றார். 1958-ல் அவர் இந்தியா வந்தபோது நேரு அவரை அன்புடன் வரவேற்றார் மேலும் இளம் இந்தியர்கள் அவரை பாசத்துடன் ’மாமா’ ஹோ என அழைத்தனர்.

Image caption அருங்காட்சியத்தின் இயக்குநர்

குயென் வான் காங் என்பவர் ஹோ சி மின் அருங்காட்சியத்தின் இயக்குநர். ''பிரதமர் நேரு மற்றும் ஹோ சி மின் இருவரும் நல்ல நண்பர்கள். அவர் இந்தியாவில் நேருவால் அன்புடன் வரவேற்கப்பட்டார். இளம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அவரை மாமா ஹோ என அழைத்தனர். இந்தியர்கள் அவர் மீது அன்பு செலுத்தினர்'' என்றார்.

டெல்லி மற்றும் கொல்கத்தாவில் ஒரு சாலைக்கு இந்திய அரசால் ஹோ சி மின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அவருடைய வாழ்நாளில் ஹோ சி மின் வட வியட்நாமின் அதிபராக மட்டுமே இருந்தார். நாட்டை ஒன்றிணைப்பதற்காக அவர் போராடியதற்கு பலன் அவர் இறந்து ஆறு வருடங்களுக்கு பிறகே கிடைத்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்