அணு ஆயுதமற்ற கொரியா: வரலாற்று சந்திப்புக்கு பின்னர் இரு தலைவர்கள் உறுதி

கிம் ஜாங்-உன் படத்தின் காப்புரிமை Getty Images

தென் கொரிய தலைவர் உடனான தனது முதல் சந்திப்பை முடித்துவிட்டு, வட கொரிய எல்லைக்குள் திரும்பினார் கிம் ஜாங்-உன். கடந்த 10 ஆண்டுகளில் வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையில் நடந்த முதல் சந்திப்பு இதுவாகும்.

எங்களது நேரலை பக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறோம். எனினும் வட மற்றும் தென் கொரிய தலைவர்களின் சந்திப்பு குறித்த அடுத்தடுத்த செய்திகள் பிபிசி தமிழில் தொடந்து இடம்பெறும்.

இது குறித்த மேலும் செய்திகளுக்கு..

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வட கொரியா திரும்பும் போது காரில் இருந்து கையசைத்த கிம்

5:20: உங்கள் காலை தூக்கம் தடைபடாது

சந்திப்புக்கு பின்னர் தனது நாட்டின் அணு சோதனை குறித்து பேசிய கிம் ஜாங்-உன்,''தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்ள உங்கள்(தென் கொரிய அதிபர் முன்) காலை தூக்கம் பல முறை தடைபட்டதாக நான் கேள்விப்பட்டேன். உங்கள் காலை தூக்கம் இனி தடைபடாது என நான் உறுதியளிக்கிறேன்'' என்றார்.

வட கொரியாவின் போக்குவரத்து பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்ட கிம்,'' எங்கள் போக்குவரத்து நிலைமை மோசமாக உள்ளது. அதனால் நீங்கள் (தென் கொரிய அதிபர் முன்) வட கொரியா வரும்போது அசௌகரியமாக உணரலாம் என்பது எனக்கு கவலையளிக்கிறது.'' என்றார்.

படத்தின் காப்புரிமை TVPeru

5:10: வட கொரியாவால் ஏவுகணைகளால் மிரட்டப்பட்ட ஜப்பான், இந்தச் சந்திப்பு ஒரு நேர்மறையான நடவடிக்கை என கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

''பல்வேறு வட கொரிய பிரச்சனைகளை தீர்க்க, முன்நோக்கி நகரும் மற்றும் விரிவான நடவடிக்கை " எனக்கூறிச் சந்திப்பை ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே வரவேற்றுள்ளார்.

5:05: வட மற்றும் தென் கொரியா இடையிலான ரயில் இணைப்பு, எரிவாயு மற்றும் மின் விநியோகம் ஆகியவற்றுக்கு நடைமுறை ஒத்துழைப்பு தர தங்கள் நாடு தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது

வட மற்றும் தென் கொரிய எல்லைகளை ரயில் மற்றும் சாலைகள் மூலம் இணைப்பது என ஒரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது முடிவு செய்யப்பட்டது.

4:30: நல்ல விஷயங்கள் நடக்கிறது- டிரம்ப்

வட மற்றும் தென் கொரிய தலைவர்களின் சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பல டிவீட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

''ஏவுகணை ஏவியது மற்றும் அணுசக்தி சோதனைகள் நடத்தியது என சீற்றம் நிறைந்த ஆண்டுக்குப் பிறகு, வட மற்றும் தென் கொரியா இடையே ஒரு வரலாற்றுக் கூட்டம் இப்போது நடைபெறுகிறது. நல்ல விஷயங்கள் நடக்கிறது. இதன் பலன் என்ன என்பதைக் காலம்தான் சொல்லும்'' என ஒரு டிவீட்டில் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Trump/Twitter

மற்றொரு ட்வீட்டில்,''கொரிய போர் முடிவடையும். கொரியாவில் தற்போது நடப்பவற்றைக்கு, அமெரிக்கா மற்றும் அதன் சிறந்த மக்கள் மிகவும் பெருமையடைய வேண்டும்'' என கூறியுள்ளார்.

4:00: சந்திப்புக்கு பின்னர் பேசிய வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், இப்பகுதியின் துரதிருஷ்டவசமான வரலாறு(கொரிய போர்) மீண்டும் திரும்பாது என்பதை உறுதிப்படுத்த நெருக்கமாக ஒத்துழைக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.

''பின்னடைவு, துன்பம் மற்றும் ஏமாற்றம் இருக்கலாம்'' என கூறிய அவர், ''வலி இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது'' எனவும் கூறினார்.

3:40: வட கொரிய அதிபரின் மனைவி ரி சொல்-ஜு மற்றும் தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜுங்-சூக்கும் சந்தித்து பேசிக்கொண்டனர். வட கொரியா மற்றும் தென் கொரியா நாட்டின் முதல் பெண்மணிகள் சந்திப்பது இதுவே முதல் முறை என தென் கொரிய ஊடகம் கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

3:30: வட கொரியா மற்றும் தென் கொரிய தலைவர்களின் "தைரியத்தை" சீனா பாராட்டியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என சீன வெளியுறத்துறை கூறியுள்ளது.

2:52: வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின்னர், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் உறுதி பூண்டுள்ளனர்.

கூட்டு அறிக்கையில் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்ட மற்ற விஷயங்கள்.

 • இரு நாடுகள் இடையிலான விரோத நடவடிக்கைகளை நிறுத்துவது.
 • இரு நாடுகளை பிரிக்கும் ராணுவமயமற்ற பகுதியில், பிரச்சார ஒலிபெருக்கிகளை நிறுத்துவதன் மூலம் இப்பகுதியை அமைதி பகுதியாக மாற்றுவது.
 • அமெரிக்க மற்றும் சீனாவை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது.
 • போரினால் பிரிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் ஒருங்கிணைத்தல்.
படத்தின் காப்புரிமை Getty Images
 • எல்லைகளை ரயில் மற்றும் சாலைகள் மூலம் இணைத்தல் மற்றும் நவீனமயப்படுத்துதல்.
 • இந்த வருடம் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட, விளையாட்டு போட்டிகளில் கூட்டாக பங்கேற்பு.

1:40: வட கொரிய தொலைக்காட்சியில், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை அதிபர் என்று குறிப்பிட்டதாக பிபிசி மானிடரிங் செய்திகள் கூறுகின்றன. வழக்கமாக தென் கொரியாவை அவர்கள் தனி நாடாக கருதுவதில்லை. "கொரியாவின் தெற்கு பகுதி" என்றே குறிப்பிடுவார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

1:30:மரக்கன்றை நட்டபின் கிம் மற்றும் முன் ஆகியோர் காவலர்கள் யாருமின்றி சிறிது தூரம் நடந்து சென்றனர். அவர்கள் பேசியது ஒலிவாங்கியில் பதிவாகவில்லை. பறவைகளின் சத்தம் மட்டுமே கேட்டது.

1:16:தென்கொரிய அதிபருடன் இணைந்து எல்லையில் மரம் நட்ட கிம் ஜாங்-உன், இரு நாடுகளுக்கும் 'புதிய வசந்தம்' வந்துள்ளதாக கூறினார்.

12:30: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மனைவி இன்று இரவு விருந்தில் பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜாங் சூக்கும் அதில் பங்கு கொள்வார் என தகவல்கள் வந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரிய அதிபரின் மனைவியை போன்று இவரும் பாடகர் ஆவார்.

12:15 இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் உள்ள எல்லை பகுதியில் மரங்களை இருநாட்டு தலைவர்களும் நட்டனர்.

அதற்கான மண் மற்றும் நீர் இரண்டு நாடுகளிலிருந்தும் எடுக்கப்பட்டது.

12:00

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைINTER-KOREAN SUMMIT PRESS CORPS

இந்த படம் ஆயிரம் கதைகளை சொல்கிறது. பேச்சுவார்த்தை நடைபெற்ற அமைதி இல்லத்தில் இருந்த மேஜையை சுற்றி அதிகாரிகள் பூச்சி மருந்துகளை அடிக்கின்றனர்.

இந்த மேஜையில்தான் கிம் அமர்ந்து வருகையாளர்களுக்கான கையெழுத்திட்டார்.

வட கொரிய தலைவர் பூச்சுகளை கண்டும், அதனால் ஏற்படும் விஷத்தன்மை கண்டும் அச்சம் கொள்வார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

அதை இந்த படம் உறுதி செய்கிறது என்பதை கூற இயலவில்லை என்றாலும் இந்த உச்சி மாநாட்டிற்கான தயாரிப்பை இந்த படம் பிரதிப்பலிக்கிறது.

11:40 அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுவது, கொரிய தீபகற்பத்தில் நிரந்திர அமைதி, கொரிய நாடுகளுக்கு இடையே நல்லுறவு ஆகியவை குறித்து இரண்டு தலைவர்களும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் யூ யங்-சான் தெரிவித்துள்ளார்.

11:30 தென் கொரிய அதிபர் முன்னின் சொந்த ஊர் வட கொரியாவில் உள்ளது. முனின் பெற்றோர் கொரிய போரின் போது தென் கொரியாவிற்கு தப்பி வந்தவர்கள் இருப்பினும் அவர்களுக்கு வட கொரியாவில் உறவினர்கள் உள்ளனர்.

கடந்த வருடம் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில், தான் தனது பெற்றோரின் சொந்த ஊரான ஹநம்முக்கு செல்ல விரும்பியதாக தெரிவித்திருந்தார் முன்.

"இருநாடுகளுக்கும் இடையே அமைதி நிலவும் போது, எனது 90வயது அம்மாவை அவர்களின் சொந்த ஊருக்கு கூட்டிச் செல்ல வேண்டும்" என்றும் முன் ஜே-யின் தெரிவித்துள்ளார்.

11:00 தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் இதற்கு முன்னர் வட கொரியாவுக்கு சென்றுள்ளார் ஆனால் குடும்ப நிகழ்வுக்காக. 2004ஆம் ஆண்டு அவர் அதிபர் ரு மூ-ஹுயுனுக்கு உதவியாளராக இருந்த போது தனது தாயுடன் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக வட கொரியா சென்றுள்ளார்.

10:45:சீன ஊடகங்கள் இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. மேலும் நேர்மறையாக இந்த செய்தியை ஒளிபரப்பி வருகிறது.

இரு தலைவர்களும் "பதற்றமற்று" காணப்பட்டதாக சீன தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

இருவரும் கைக்குலுக்கியது "வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு" என சீன செய்தித்தாள் ஒன்று விவரித்துள்ளது.

10:30 தென் கொரிய எல்லைக்குள் நுழைந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் (காணொளி)

10:15 இந்த இருதலைவர்களுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவுகள் இருப்பதை போல எதிர்ப்புகளும் உள்ளன. வெகுசில தென் கொரிய மக்கள் வட கொரியாவை ராணுவ நடவடிக்கை மூலமாக மட்டுமே எதிர்கொள்ள முடியும் என தெரிவிக்கின்றனர். மேலும் இவர்கள் தென் கொரியாவின் பாஜு நகரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை EPA

10:00 இதற்கு முன்பு கொரிய தலைவர்கள் சந்தித்து கொண்டபோது அந்த செய்தி அவர்கள் சந்திப்பு நிகழ்ந்து பல மணி நேரங்கள் கழித்தே வட கொரிய ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

ஆனால் இன்று நடைபெற்றுள்ள சந்திப்பு குறித்து வட கொரிய ஊகங்கள் உடனடியாக செய்தி வெளியிட்டன.

9:50 இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்த செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட தின்பண்டம்.

9:40 தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா பங்கேற்றதை தொடர்ந்து இருநாடுகளின் உறவுகளில் சுமூகமான சூழல் நிலவ தொடங்கியது.

படத்தின் காப்புரிமை Getty Images

9:30 இருதலைவர்களும் உணவு இடைவேளைக்கு சென்றுள்ள நிலையில், இதுவரை இந்த சந்திப்பு குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

 • இருநாட்டு தலைவர்களும் கைகுலுக்கும் போது தென் கொரிய அதிபர் வட கொரியாவின் எல்லைக்குள் சென்று கைகுலுக்கியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது குறித்து தென் கொரிய சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
 • தென் கொரிய அதிபர் முன்னை வட கொரியாவிற்கு அழைத்துள்ளார் கிம். மேலும் இம்மாதிரியான வரவேற்பு அவருக்கும் அளிக்கப்படும் என்றும் கிம் தெரிவித்துள்ளார்.
 • எல்லையை கடந்து தான் நடந்து வர பத்து வருடத்திற்கும் மேலாக ஆனது என்றும், இனி இம்மாதிரியான சந்திப்புகள் அடிக்கடி நடைபெற வேண்டும் என்றும் கிம் தெரிவித்தார்.
 • பழைய நிகழ்வுகள் குறித்து பேச வேண்டாம். முடிந்தவரை இனி சிறப்பாக செயல்படுவோம் என கிம் முன்னிடம் தெரிவித்தார்.
 • பிற நாடுகள் பின்தொடர்வதற்கு எடுத்துக்காட்டாக கொரிய மக்கள் இருக்க வேண்டும் என்று முன் தெரிவித்துள்ளார்.
 • இந்த சந்திப்பை ஒட்டி, வட கொரியாவின் உணவான குளிர்ந்த நூடுல்ஸை உண்ண உணவகங்களில் கூட்டம் கூட்டமாக தென் கொரிய மக்கள் காத்துகிடப்பதாக பிபிசி கொரிய சேவையை சேர்ந்த செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

9:10 இந்த சந்திப்பை ஒட்டி, வட கொரியாவின் உணவான குளிர்ந்த நூடுல்ஸை உண்ண உணவகங்களில் கூட்டம் கூட்டமாக தென் கொரிய மக்கள் காத்துகிடப்பதாக பிபிசி கொரிய சேவையை சேர்ந்த செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

9:00 இதுவரை சந்திப்பில் என்ன நடைபெற்றது என்பதை தென் கொரிய அதிகாரிகள் ஊடகங்களிடம் விவரித்தனர்.

அனைத்து நற்சந்திப்புகளை போன்றும், இங்கும் சந்திப்புக்காக தாங்கள் செய்த பயணம் குறித்து இருதலைவர்களும் உரையாடினர். மேலும் அவர்கள் இங்கு வருவதற்காக விரைவாக தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள வேண்டியிருந்த அவசியத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளால் தான் எதிர்காலத்தில் விரைவாக எழுந்து கொள்ளும் சூழல் வராது என்று உறுதி செய்வதாக கிம் தெரிவித்துள்ளார்.

8:34: மெர்ஸிடீஸ் நிறுவனத்தின் லிமோ வாகனத்தில் பயணிக்கும் கிம் ஜாங்-உன்.

8:22: ஒரு மணிநேரமாக இருதலைவர்களும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த உலகமே ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறது. தற்போது அவர்கள் தனித்தனியாக உணவு இடைவேளைக்கு செல்லவுள்ளனர். இருவரும் ஒன்றாக சாப்பிடுவதற்காக இரவு உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

8:10 இந்த உச்சிமாநாட்டின் நேரலையை தென் கொரிய சிறைவாசிகளும் பார்த்தனர். உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியிலிருந்து அரை மணி நேரத்திற்கு பல சிறைகளில் இந்த சந்திப்பு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

8:00 இருநாட்டு தலைவர்களின் மனைவிகளையும் இதுவரை இந்த சந்திப்பில் காணமுடியவில்லை.

படத்தின் காப்புரிமை AFP

சில காலங்களாக வட கொரிய அதிபர் மனைவி ரி சோல்-உ பொது வெளியில் அதிகம் காணப்பட்டார்.

எனவே அவர் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுவரை அவரை காணாத போதிலும் பெரிதாக நடைபெறவுள்ள இரவு விருந்தில் கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

7:52: சீனா வட கொரியாவின் ஒரே பொருளாதார கூட்டாளி நாடாக இருந்து வருகிறது. பதிவியேற்றதிலிருந்து தனது முதல் வெளிநாட்டு பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டார் கிம்.

படத்தின் காப்புரிமை Reuters

7:45 கிம் மற்றும் மூன்னின் சந்திப்பிற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அமெரிக்காவின் சிஐஏ தலைவராகவும், தற்போது வெளியுறவுச் செயலராகவும் இருக்கும் மைக் போம்பேயோ மற்றும் அதிபர் கிம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன் சந்தித்து கைக்குலுக்கிய புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

7:39 தென் கொரிய அதிபர் மூன்னுடன் நல்ல முறையில், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல விளைவுகளை ஈட்டுவேன் என்று கிம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் விவாதத்துக்கு சம்மதம் தெரிவித்த வட கொரிய அதிபர் கிம்முக்கு நான் எனது மரியாதையை தெரிவித்து கொள்கிறேன் என தென் கொரிய அதிபர் மூன் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

7: 10 ராணுவமற்ற பகுதியில் உள்ள பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு இருவரும் செல்கின்றனர்.

7:00 தென் கொரியாவில் கிம்முக்கு சிறப்பு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

"நான் உங்களை சந்திப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்" என மூன் கிம்மிடம் கூறியதாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

6:50 அணு ஆயுதங்கள் பயன்பாடை வட கொரியா நிறுத்துவதற்கு தயாராக இருப்பது, இந்த வரலாற்று முக்கியத்துவமான சந்திப்பில் முக்கிய கவனம் பெறும்.

6:40 இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், கிம்மை இருநாட்டு எல்லையில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் சந்தித்தார்.

எல்லையில் இருபுறத்திலிருந்தும் கிம் மற்றும் மூன் கைகளை குலுக்கினர். எதிர்பார்க்கதாக தருணமாக தென் கொரிய அதிபர் வட கொரிய எல்லைக்குள்ளும் சென்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு தலைவர்களும் வட கொரியாவின் சர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்த இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ஆகிவிட்ட நிலையில், வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்கள் மிகவும் முன்னேறிவிட்டதால் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியாவோடு இப்போது ஒப்பந்தம் செய்ய முயல்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று தென் கொரியா தெரிவித்திருந்தது.

2000 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உச்சி மாநாடுகளுக்கு பிறகு, இரு நாட்டு உறவும் சமீப மாதங்களில் மேம்பட்டு வருவதே தற்போது நடைபெறும் இந்த சந்திப்புக்கு காரணமாகும்.

நிகழ்ச்சி நிரல் பட்டியல் முதல் விருந்து வரையான இந்த மாநாட்டின் எல்லா விபரங்களும் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள வட கொரிய அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு இந்த சந்திப்பு ஒரு முன்னோட்டம் என்றும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: