கொரிய அதிபர்கள் அமைதிப்பேச்சு: தென்கொரிய வாழ் தமிழர்கள் மன நிலை என்ன?

தென்கொரிய படத்தின் காப்புரிமை Getty Images

கிட்டத்தட்ட 65 ஆண்டுகால பிரிவுக்குப் பிறகு வட கொரிய மற்றும் தென் கொரிய அதிபர்கள் வரலாற்று சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர். கொரியப் போர் ஓய்ந்த பிறகு தென் கொரிய மண்ணில் காலடி எடுத்துவைத்த முதல் வட கொரிய அதிபர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார் அதிபர் கிம் ஜோங் உன். நடந்து முடிந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு அதிபர்களும் இனி எந்த இராணுவ மிரட்டல்களோ, அணு ஆயுதச் சோதனையோ செய்யப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். உலக அரசியலில், பிராந்திய அரசியலில் இது ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது.

அதே நேரம், தென்கொரிய நாட்டில் வசிக்கும் தமிழர்களும், அந்நாட்டு குடிமக்களும் இந்த நகர்வைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

தென்கொரியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணங்களுக்காகப் பல நாட்டவர்கள் உள்ளனர். அவர்களில் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் சுமார் 500 பேர் உள்ளனர். வட-தென் கொரிய அமைதி முயற்சிகள் இவர்களுக்கும், தென்கொரியக் குடிமக்களுக்கும் மகிழ்ச்சியையே தந்துள்ளது.

கியாங்கின் என்ற தென்கொரியப் பெண் இதுபற்றிக் கூறுகையில், "நான் சிறு வயதுமுதல் கொரியப் போரைப்பற்றி புத்தகங்களில் படித்தும் என் தாய்-தந்தை சொல்லியும் அறிந்ததுண்டு. அவர்கள் ஒவ்வொரு முறையும் வட கொரியாவில் இருப்பவர்களும் நம் உறவினர்கள் தான் சில காலங்களுக்கு முன்பு நாம் பிரிந்து விட்டோம் என்று சொல்லும்பொழுது அவர்களை நேரில் பார்க்கும் காலம் வராதா என்று பல முறை ஏங்கியதுண்டு. தற்போழுது நடைபெற்ற பேச்சுவார்த்தை அதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இனி எங்கள் இரு நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அனைவரும் விரைவில் ஒன்று சேருவார்கள். நானும் எங்கள் குடும்பத்தினரும் இந்த நகர்வை ஆக்கபூர்வ செயலாகக் கருதுகிறோம்.'' என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''இருந்த போதிலும் இதைப்பற்றி சில சந்தேகங்களும் எனக்குள் இருந்தது. இத்தனை ஆண்டு காலம் பகையில் இருந்த வட கொரிய அதிபர் திடீரென மனம் மாற என்ன காரணம் என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. மூத்தவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டபொழுது முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதிபர் கிம் ஏதேனும் மறைமுகத் திட்டம் வைத்திருக்கலாம் என்று கூறினார்கள். எனக்கும் அது போன்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால் காலங்கள் மாறி வருகின்றன. அதன் காரணமாகவே அதிபர் கிம் தன் பகையை மறந்து நாம் அனைவரும் சமாதானமாக இருந்துவிடலாம் என்று முடிவெடுத்திருக்கலாம். கண்டிப்பாக என் நாட்டு மக்கள் இனி கொரியப் போர் பற்றியோ அணு ஆயுத மிரட்டல் பற்றியோ கவலை கொள்ளாமல் நகர்வார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்". எனவும் அவர் தெரிவித்தார்.

தென் கொரியாவில் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாகப் பணி புரியும் தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் இது பற்றிக் கூறுகையில் "வட கொரிய அச்சுறுத்தலை நான் பன்னிரண்டு ஆண்டுகளாக நன்கு கவனித்து வருகிறேன். அவர்களின் அணு குண்டு சோதனை எனக்கு எந்த விதத்திலும் பயத்தை கொஞ்சம் கூட ஏற்படுத்தவில்லை. எனினும் தற்போதைய நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இனி அணு ஆயுதச் சோதனைகள் இருக்காது என வட கொரிய அதிபர் கூறியிருப்பதால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.'' என்றார்.

மேலும் தொடர்ந்த அவர்,'' அதிபர் மூன் ஒரு வட கொரிய வம்சாவழியை சேர்ந்தவர் என்று என்னோடு பணிபுரியும் தென் கொரிய நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். வட கொரிய அதிபர் கிம்-முக்கும் தென் கொரிய அதிபர் மூனுக்கும் கண்டிப்பாக ஒரு பிணைப்பும் பாசமும் இந்த வகையில் இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமாகியிருக்கலாம். எது என்னவோ தமிழ் நாட்டிலிருந்து என் உறவினர்கள் கொரியாவில் போரா? என்று இனி என்னைக் கேட்கமாட்டார்கள்," என்று கூறிச் சிரித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையைச் சேர்ந்த மோகன் கூறுகையில், "இரு நாட்டு அதிபர்களின் இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ஒவ்வொரு நாளும் வட கொரிய அணு ஆயுத சோதனைகளைப்பற்றி தென் கொரிய ஊடகங்களில் காண்பிக்கும்பொழுது என்றைக்கு இவை மாறும் என்று கவலைப்பட்டதுண்டு. ஆனால் இனி அப்படி இருக்காது என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அமைதிப்பேர்ச்சுவார்தை மூலம் தென் கொரியநாட்டின் பொருளாதாரமும் கண்டிப்பாக வர்ச்சியடையும். ஆனால் அதேவேளையில் தற்போழுது தென் கொரியாவில் பணிபுரியும் மற்ற நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு குறையவும் வாய்ப்புள்ளது. பிற்காலத்தில் வட கொரியாவைச் சேர்ந்தவர்கள் இங்குப் பணிக்கு அமர்த்தப்பட்டால் மற்ற நாட்டினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. ஒருங்கிணைந்த கொரியாவாக உருவெடுத்தால் மிகப்பெரிய வல்லரசு நாடாக வருவார்கள்" என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கூறுகையில் "எனக்கு இந்நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு வரலாற்று நிகழ்வை நான் அதே நாட்டில் இருந்து கொண்டு பார்க்கிறேன் என்பதில் ஆனந்தம். உலகமே கொரியாவில் போர் வரப்போகிறது என்று அஞ்சிய வேளையில் இருநாட்டுத் தலைவர்களின் ஒற்றுமை அமைதியைக் கொண்டுவந்துள்ளது. 2017-ம் ஆண்டு கொரியப் போர் அச்சம் உச்சத்தில் இருந்தது. ஆனால் இன்று அதற்கு முடிவுகட்டி இரு நாட்டுத் தலைவர்களும் அனைவரின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டனர். இந்த தருணத்தை மொத்த ஆசிய மக்களும் கொண்டாட வேண்டும். என் பக்கத்து வீட்டுத் தென்கொரிய நண்பர்களிடம் இதுகுறித்து கேட்டபொழுது சிலர் புன்னகையோடு தாங்கள் இதை வரவேற்பதாகச் சொன்னார்கள்.'' என்றார்.

''மேலும் வட கொரிய அதிபர் கிம் என்னதான் போரும் வேண்டாம் என்று கூறினாலும் அவர் எந்த அளவுக்கு அந்தக் கொள்கையில் உறுதியோடு இருக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது. ஊடகங்கள் முன்பு இருவரும் கைகுலுக்கிக் கொண்டாலும், இரு நாடுகளில் ஒன்று பொதுவுடைமைக் கொள்கையிலும் மற்றது மக்களாட்சிக் கொள்கையிலும் இருக்கின்றன. வட கொரியா மக்களாட்சிக்கு மாற எந்த அளவுக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரியவில்லை. தற்போதைய பேச்சுவார்த்தை தென் கொரிய மக்களுக்கு ஒருவித நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்தாலும் வட கொரிய மக்களுக்கு எந்த வகையில் இது பயனளிக்கும் என்று தெரியவில்லை" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: