வட கொரியாவுடன் அணு ஆயுதத் திட்ட ஒப்பந்தம்: அமெரிக்க வெளியுறவுச் செயலர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்கும் போது அணு ஆயுதத் திட்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்கான "அதிக வாய்ப்புகள்" உள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அணு ஆயுத திட்டம் குறித்து "பின்வாங்க இயலாத" நடவடிக்கைகளை வட கொரியா மேற்கொள்ள வேண்டும் என ஏபிசி நியூஸிடம் பேசிய போம்பேயோ தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் சிஐஏ வின் இயக்குநராக இருந்தபோது கிம்மை ரகசியமாக சந்தித்தார் போம்பேயோ; ஆனால் அவரது சந்திப்பு குறித்த விவரங்கள் சிறிது காலம் கழித்தே வெளியிடப்பட்டது.

ஆணு ஆயுத பயன்பாடற்ற கொரிய தீபகற்பம் குறித்து கிம்முடன் டிரம்ப் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை வட கொரியா விடடொழிப்பதை உறுதி செய்ய ”ஆய்வு செயல்முறை வேண்டும்" என்பது குறித்து பேசுமாறு டிரம்ப் தன்னிடம் கூறியதாக போம்பேயோ தெரிவித்தார்.

வட கொரியராவில் பிடித்து வைத்திருக்கப்படும் அமெரிக்க குடிமக்கள் குறித்து பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

சேதமடைந்த வட கொரியாவின் சோதனைத் தளம்:

தென் கொரியா மற்றும் வட கொரியாவின் முக்கிய அணு ஆயுத சோதனைத் தளமான பூங்கே-ரி மூடப்படவுள்ளதாக தென் கொரியா தெரிவித்தது.

பூங்கே-ரியில் உள்ள அந்த சோதனைத் தளத்தில் 2006ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

அந்த தளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் மலையின் உள்பகுதி சேதமடைந்தது என புவி ஆய்வு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார்.

இந்த ஆச்சரியம் அளிக்கும் அறிவிப்பு, தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின் வந்தது.

வட கொரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள மலை பகுதியில் இந்த பூங்கே-ரி தளம் அமைந்துள்ளது. மாண்டாப் மலைப்பகுதி என்று அழைக்கப்படும் மலைக்கு அடியில் இருக்கும் டனல் அமைப்புகளில் அணு ஆயுத சோதனை நடைபெறும்.

தென் கொரிய அறிவிப்பு:

தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் யூன் யங்-சன், மே மாதத்தில் அணு ஆயுத சோதனைத் தளம் மூடப்படும் என கிம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சோதனைத் தளம் மூடப்படும்போது தென் கொரியா மற்றும் அமெரிக்காவிலிருந்து வல்லுநர்கள் சோதனை மேற்கொள்வர் என்றும் கூறப்பட்டது. ஆனால் வட கொரியா இதுகுறித்து பொதுப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

வெள்ளியன்று நடைபெற்ற உச்சி மாநாட்டில், கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் ஆகியோர் அணு ஆயுதமற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்குவதற்கு இணைந்து செயல்படப்போவதாக உறுதியளித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: