உலகப்பார்வை: அறிமுகமாகிறது ஃபேஸ்புக்கின் ’டேட்டிங் சேவை’

  • 2 மே 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ஃபேஸ்புக்கின் டேட்டிங் சேவை

முதன்முறையாக ஃபேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தபோவதாக அதன் நிர்வாகி மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் அவர் இந்த தகவலை தெரிவித்தார். மேலும் சிறிய காலம் சேர்ந்து இருப்பது போன்றல்லாமல் நீண்டகாலம் நிலைக்கக் கூடிய உறவுகளை தேர்ந்தெடுப்பதற்கான சேவையை அது வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர் விவரங்களை பாதுகாப்பது முக்கியமாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மே தின பேரணியில் வன்முறை

ஆண்டுதோறும் நடைபெறும் மே தின பேரணியில் கடைகளை உடைத்து சேதப்படுத்திய மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்திய முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் 200 பேரை பாரிஸ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

தீவிர இடதுசாரி குழுவான பிளாக் ப்ளாக்ஸ், அதிபர் மக்ரோங்கின் பொதுத் துறை தொழிலாளர் சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக அமைதியாக நடைபெற்ற பேரணியில் புகுந்து இம்மாதிரியான சம்பவங்களில் ஈடுபட்டனர்.

மே தினத்தில் தொழிற் சங்கம் நடத்திய போராட்டங்களில் மூகமூடி அணிந்த 1,200 பேர் பங்கு கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

காவல்துறையை சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு பேர் இதில் காயமடைந்தனர்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் பலி

பாக்தாதின் வடக்கு பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் பலியாகியுள்ளதாக இராக் அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பை சேர்ந்த சந்தேக நபர்களை, டார்மியா நகரம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

அந்த பகுதியின் கட்டுப்பாட்டை அரசாங்கம் எடுத்துக் கொண்டதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பின் கூற்றை அரசாங்கம் மறுத்துள்ளது.

மூத்த கத்தோலிக்க தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவில் மூத்த ரோமன் கத்தோலிக்க தலைவரான கார்டினல் ஜார்ஜ் பெல் மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளை அவர் தனித்தனியாக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

1970களில் அவர் பாதிரியாராக இருந்தபோது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு விசாரணையும், 20 வருடங்களுக்கு பிறகு மெல்போர்னின் பேராயராக இருந்தபோது நடத்திய குற்றங்கள் தொடர்பாக மற்றுமொரு விசாரணையும் அவர் எதிர்கொள்வார் என்று வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.

76 வயதாகும் வத்திக்கான் பொருளாளர் தன்மீதான குற்றங்களை மறுத்து வருகிறார்.

கேரட்டிற்கு அடிமையாகும் கங்காருகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள வன விலங்கு சரணாலயம் ஒன்றில் கங்காருகளுக்கு, சுற்றுலா பயணிகள் கேரட் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மீது அடுத்தடுத்து இந்த விலங்குகள் நடத்திய தாக்குதலால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

நியூ சவுத் வேல்ஸில், மோரிசெச் மருத்துவமனையில் உள்ள கங்காருகள், சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக்கூடியவை.

ஒவ்வொரு வாரமும் அவற்றை காண சுமார் இரண்டாயிரம் பேர் வருவதுண்டு.

இருப்பினும் கேரட்டிற்கு அவைகள் அடிமையாகியுள்ளதாகவும், அதை காண வருவோர் கேரட் வழங்கவில்லை என்றால் அது ஆக்ரோஷமாகி பிறரை தாக்குவதாகவும் உள்ளூர் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: