பாலியல் குற்றச்சாட்டு: ஆஸ்கர் அகாடமியிலிருந்து இரு உறுப்பினர்கள் நீக்கம்

  • 4 மே 2018
இருவர் நீக்கம் படத்தின் காப்புரிமை Reuters/EPA

அமெரிக்காவில் ஆஸ்கர் அகாடமியில் இருந்து அதன் உறுப்பினர்களான பில் காஸ்பி மற்றும் ரோமன் பொலன்ஸ்கி ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்கார் விருதுகளைத் தரும் இந்த அகாடமி, நடத்தை விதிகள்படி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி நட்சத்திரமான காஸ்பி, கடந்த மாதம் பாலியல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு 13 வயது சிறுமியிடம் சட்டபூர்வமாக வன்புணர்வு என வகைப்பாடு செய்யப்படும் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் பொலன்ஸ்கி ஒப்புக்கொண்டார்.

இதெ போல, பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டெய்ன் கடந்த ஆண்டு ஆஸ்கர் அகாடமியில் இருந்து நீக்கப்பட்டார்.

அகாடமியின் இந்த நடவடிக்கை பற்றி காஸ்பி மற்றும் பொலன்ஸ்கி ஆகியோர் எதுவும் சொல்லவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில் காஸ்பி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது "உண்மையான நீதி அல்ல, அது கும்பல் நீதி" என்று அவரது மனைவி கமில் கூறியுள்ளார்.

அகாடமி கூறுவது என்ன?

கௌரவம் மிக்க ஆஸ்கர் அகாடமியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் இது குறித்து வாக்களித்த இரு நாட்களுக்கு பிறகு வியாழக்கிழமை இந்த முடிவை அறிவித்துள்ளது.

"ஆஸ்கர்ஸ் அமைப்பின் நடத்தை விதிகள்படி, காஸ்பி மற்றும் பொலன்ஸ்கியை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாக", அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், "மனித மாண்புக்கு மதிப்பளிக்கும் ஆஸ்கர் அகாடமியின் மதிப்பீடுகளை உறுப்பினர்கள் கடைப்பிடிப்பது தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

91 ஆண்டு காலமாக இயங்கி வரும் ஆஸ்கர்ஸ் அகாடமியில் இதுவரை 4 உறுப்பினர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: