பாலியல் சர்ச்சை: இந்த ஆண்டு இலக்கியத்துக்கு நோபல் பரிசு அறிவிப்பு இல்லை

இலக்கியத்துக்கான நோபல் பரிசினை முடிவு செய்யும் 'ஸ்வீடிஷ் அகாடமி' பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு விருதுக்கு எவரையும் தேர்வு செய்யப்போவதில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை ALFREDNOBEL.ORG

தனது உறுப்பினர் ஒருவரின் கணவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டினை அகாடமி கையாண்ட விதம் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களும், அதன் தலைவரும் பதவி விலகினர்.

இந்நிலையில் 2018ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்குரியவரை 2019-ம் ஆண்டு பரிசுக்குரியவரோடு சேர்த்து அடுத்த ஆண்டே தேர்வு செய்யப்போவதாக அகாடமி அறிவித்துள்ளது.

1901ம் ஆண்டு முதல் முறையாக இந்தப் பரிசு வழங்கப்பட்டதில் இருந்து இந்தப் பரிசு தொடர்பாக எழுந்துள்ள மிகப்பெரிய சர்ச்சை இது.

மக்களின் நம்பிக்கை குறைந்திருப்பதே இந்த முடிவுக்குக் காரணம் என்று அகாடமி தெரிவித்துள்ளது.

அகாடமியின் பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் பரிசு வழக்கம்போல அறிவிக்கப்படவேண்டும் என்று சில உறுப்பினர்கள் வாதிட்டனர். ஆனால் வேறு சிலரோ பரிசு வழங்கும் நிலையில் தற்போது அகாடமி இல்லை என்று வாதிட்டனர்.

உலகப் போர்கள் நடந்துவந்த காலங்களில் ஆறு ஆண்டுகள் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இது தவிர, 1935-ம் ஆண்டு தகுதியான யாரும் இல்லை என்பதால் பரிசு அறிவிக்கப்படவில்லை.

சர்ச்சை எப்படித் தொடங்கியது?

அகாடமியின் நிதியுதவியோடு ஒரு பண்பாட்டு திட்டத்தை செயல்படுத்திவந்த பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் ழாங் கிளோட் ஆர்னோ ஒரு 18 வயதுப் பெண் மீது பாலியல் தாக்குதல் தொடுத்ததாக புகார் எழுந்தபோது இந்தப் பிரச்சினை உருவானது. புகார் கூறப்பட்ட பல சம்பவங்கள் அகாடமியின் சொந்த இடங்களில் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் ஆர்னோ இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

பிறகு ஆர்னோவின் மனைவியும், கவிஞரும், எழுத்தாளருமான கடாரினா ஃப்ரோஸ்டென்சன்-னை அகாடமியின் உயர்மட்டக் குழுவில் இருந்து நீக்கவேண்டும் என்று முன்மொழியப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதனோடு, விருப்பார்வங்களின் முரண்பாடுகள், பரிசுக்கு வெற்றி பெற்றவர்களின் பெயர்களை கசியவிட்டது குறித்த குற்றச்சாட்டுகள் நிறுவனத்தை பிளவுபடுத்தின.

இதையடுத்து ஃப்ராஸ்டென்சன், அகாடமி தலைவர் சாரா டேனியஸ் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து பதவி விலகினர். தற்போது 11 உறுப்பினர்களே பதவியில் உள்ளனர். அவர்களிலும், கெர்ஸ்டீன் ஏக்மன் என்பவர் 1989ல் சல்மான் ருஷ்டியின் சாத்தானின் கவிதைகள் நூலுக்கு இஸ்லாமிய மத அடிப்படை வாதிகள் ஃபத்வா விதித்ததை அகாடமி கண்டிக்க மறுத்தது முதல் செயல்படாமல் இருக்கிறார். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்த வாக்கெடுப்புக்கு குறைந்தது 12 உறுப்பினர்கள் (கோரம்) இருக்க வேண்டும்.

விதிகளின்படி, ஸ்வீடிஷ் அகாடமிக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அனைவருமே வாழ்நாள் உறுப்பினர்கள்தான். அவர்கள் பதவி விலக முடியாது. ஆனால், உறுப்பினர்கள் முறைப்படியாக பதவி விலக வழி செய்யும் வகையில் விதியில் திருத்தம் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் அகாடமியின் புரவலர் 16-ம் கார்ல் குஸ்டாஃப் மன்னர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்