அணு ஒப்பந்தம்: முன்னேற்றம் அடைந்துள்ளதா இரானின் பொருளாதாரம்?

படத்தின் காப்புரிமை AFP

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை கடந்த 2015ஆம் ஆண்டு இரான் மீது எண்ணெய், வர்த்தகம் மற்றும் வங்கி உள்ளிட்ட துறைகளில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடைகளை முடிவுக்கு கொண்டுவரும் அணுஉடன்பாட்டில் கையெழுத்திட்டன.

அதற்கு பிரதிபயனாக, தனது அணு தொடர்பான செயல்பாடுகளை குறைத்துக்கொள்வதற்கு இரான் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இரான் மீதான தடைகளை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்தபோவதாக கூறிவந்த அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப், இதுகுறித்த தனது இறுதி முடிவை வரும் 12ஆம் தேதி எடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது முடிவை அறிவிப்பதற்கான காலம் நெருங்கிவரும் நிலையில், இந்த அணு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இரானின் பொருளாதாரம் எவ்வளவு முன்னேற்றமடைந்துள்ளது என்பதை ஆராய்கிறது இந்த கட்டுரை.

படத்தின் காப்புரிமை AFP

இரானின் பொருளாதாரம் முன்னேற்றமடைவதற்கு எண்ணெய் ஏற்றுமதி எவ்வளவு உதவியது?

வல்லரசு நாடுகள் இரானுடன் அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே அந்நாட்டின் பொருளாதாரம் அதிக மந்தநிலையில் சிக்குண்டு கிடந்தது.

இந்த அணு ஒப்பந்தம் நிறைவேறிய ஒரே வருடத்தில் இரானின் உள்நாட்டு உற்பத்தி 12.5 சதவீதம் அதிகரித்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

அதைத்தொடர்ந்த ஆண்டுகளில் சரிந்த இரானின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டு நான்கு சதவீத வளர்ச்சியை அடைய வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட திடீர் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகரித்த எண்ணெய் ஏற்றுமதியே காரணமாக கருதப்படுகிறது.

இரானின் எரிபொருள் துறை மீது விதிக்கப்பட்ட தடை அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை பாதியளவாக, அதாவது 2013ல் சராசரியாக 1.1 மில்லியன் பீப்பாய்கள் என்றளவுக்கு குறைத்தது.

பிஸ்தா போன்ற மற்ற பிரபல இரானிய பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்ததா?

படத்தின் காப்புரிமை AFP

எண்ணெய் அல்லாத பிற இரானிய பொருட்களின் மதிப்பு இந்தாண்டு மார்ச் மாதத்தில் 47 பில்லியன் டாலர்களை அடைந்தது. இது அணு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பிருந்த தொகையை விட கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்கள் அதிகமாகும்.

உலகளவில் புகழ்பெற்ற இரானிய பொருட்களுள் ஒன்றான பிஸ்தாவின் ஏற்றுமதி இந்தாண்டு 1.1 பில்லியன் டாலர்களாக உள்ளதாக அந்நாட்டின் விவசாயத்துறையின் அறிக்கை கூறுகிறது.

இரானின் வேளாண்துறை ஏற்றுமதிகள், குறிப்பாக பிஸ்தா மற்றும் குங்குமப்பூவின் ஏற்றுமதி குறைவதற்கு வர்த்தகத் தடைகளைவிட அங்கு நிலவும் வறட்சியே முக்கிய காரணமாக உள்ளதாக தெரிகிறது.

இரானின் ஆடம்பர ஏற்றுமதி பொருட்களான கம்பளங்கள் மற்றும் உயர்தர மீன் உணவுகளின் ஏற்றுமதியும் அதிகரித்தது.

வர்த்தகத் தடை நீக்கத்திற்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியத்துடனான இரானின் வர்த்தகம் அதிகரித்தாலும், சீனா, தென் கொரியா மற்றும் துருக்கி ஆகியவையே அதன் முதல் மூன்று வர்த்தக பங்காளிகளாக உள்ளன.

படத்தின் காப்புரிமை AFP

வீழ்ச்சி கண்ட இரானின் பணமதிப்பை நிலைநிறுத்தியதா அணு ஒப்பந்தம்

வர்த்தக தடைகள் மற்றும் உள்நாட்டு நிர்வாக குளறுபடிகளின் காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இரானிய நாணயத்தின் மதிப்பு மூன்றில் இரண்டு பங்கு குறைந்திருந்தது.

இரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் அந்நாடு தனது எண்ணெய் வருமானம் மற்றும் சர்வதேச வங்கி செயல்பாடுகளை அணுகுவதில் பிரச்சனையை உருவாக்கியது.

ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நிலையாக இருந்த அந்நாட்டின் பணமதிப்பு கடந்த 2017ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரானுடனான அணு ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு மறுப்பு தெரிவித்தவுடன் அதன் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடைய தொடங்கியது.

கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இதுவரை ரியாலின் மதிப்பு பாதியாக குறைந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் மீண்டும் விதிக்கப்படும் சாத்தியமுள்ள பொருளாதார தடைகள் மற்றும் அதைத்தொடர்ந்த ஏற்படும் பண மதிப்பு வீழ்ச்சியை கருத்திற்கொண்டு பல இரானியர்கள் வெளிநாட்டு பணங்களை சேமித்து வருகின்றனர்.

மக்களின் இதுபோன்ற செயல்பாடுகளால் ரியாலின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைவதிலிருந்து காப்பாற்றும் விதமாக வெளிநாட்டு பணமாற்று மையங்களை தடைசெய்ததுடன், அதற்கான மற்ற வரையறைகளையும் இரானிய அரசு விதித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: