ரஷ்ய அதிபராக நான்காவது முறையாக பதவியேற்றார் புதின்

ரஷ்ய அதிபராக நான்காம் முறையாக பதவியேற்றார் புதின் படத்தின் காப்புரிமை AFP

கடந்த மார்ச் மாதம் நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதின், நான்காவது முறையாக ரஷ்ய அதிபராகப் பதவியேற்றார்.

அதிபர் அல்லது பிரதமராக கடந்த 18 ஆண்டுகளாக புதின் அதிகாரத்தில் உள்ளார். ஆனால் புதின் எதேச்சதிகாரமாக ஆள்பவர் என எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.

சனிக்கிழமையன்று மாஸ்கோ மற்றும் மற்ற ரஷ்ய நகரங்களில் புதின் ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்களுடன் வன்முறை தடுப்பு ரஷ்ய காவல்துறையினர் மோதினர்.

ரஷ்யா முழுவதும் 19 நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பாதிபேர் மாஸ்கோவில் போராடி கைதுக்குள்ளானவர்கள்.

புதினின் அரசியல் எதிரிகளை அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கடுமையாகக் கையாள்வதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திங்கள் கிழமை புதின் பதவியேற்கவுள்ள நிலையில் அங்கே புதியதொரு அமைதியின்மைக்கான அச்சம் நிலவுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போராட்டத்தில் அலெக்ஸி நவால்னி

பதவியேற்பு விழாவானது 2012-ல் நடந்ததைவிட சாதாரணமானதாகவே இருக்கும் என்றும், தனது தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட தன்னார்வலர்களை மட்டுமே அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏன் போராட்டம் நடக்கிறது?

76 சதவிகிதத்திற்கு அதிகமான ஓட்டுகளைப் பெற்று, ரஷ்ய அதிபராக புதின் மீண்டும் தேர்தேடுக்கப்பட்டார். ஆனால், இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக சில சர்வதேச பார்வையாளர்களால் கூறப்பட்டது.

அதிபர் புதினுக்கு சவாலாக இருக்கக்கூடிய ஒரே வேட்பாளராகப் பரவலாக கருதப்பட்ட, அலெக்ஸி நவால்னி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை நவால்னி இழந்துவிட்டார் என கூறப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை நவால்னி மறுத்துள்ளார்.

சனிக்கிழமை மாஸ்கோவில் புதினுக்கு எதிராக நடந்த அனுமதிக்கப்படாத பேரணியில் கலந்துகொண்ட நவால்னி கைது செய்யப்பட்டார்.

ரஷ்யாவில் ஜனநாயகத்தை வலுவிழக்கும் செயலை புதின் செய்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகின்றன.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்