அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்கும்: இரான் அதிபர் எச்சரிக்கை

இரானிய அதிபர் ஹசன் ரூஹானி படத்தின் காப்புரிமை NOAH SEELAM
Image caption இரானிய அதிபர் ஹசன் ரூஹானி

டொனால்டு டிரம்ப் இரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்க நேரிடும் என இரானிய அதிபர் ஹசன் ரூஹானி எச்சரித்துள்ளார்.

வரும் மே 12-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுடைய அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதா இல்லையா என முடிவெடுக்கவுள்ள நிலையில் ரூஹானியின் இக்கருத்து வெளிவந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை '' பைத்தியக்காரத்தனமானது'' முன்னதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.

2015-ல் இரானுடன் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை ஒரு ஒப்பந்தத்தை எட்டின. இரான் மீதான தடைகளை நீக்குவதற்கு கைமாறாக இரான் தனது அணுசக்தி திட்டத்தில் சில குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே அந்த ஒப்பந்தம்.

பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் போரிஸ் ஜான்சன் இவ்விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதற்காக ஞாயற்று கிழமையன்று வாஷிங்டன்னுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை விட்டு டிரம்ப் வெளியேறக்கூடாது என ஐநாவும் எச்சரித்துள்ளது.

இருப்பினும், இரானுடனான ஒப்பந்தத்தில் உள்ள ''பேரழிவு குறைபாடுகளை'' செனட் சபை மற்றும் ஐரோப்பிய சக்திகள் சரி செய்யவில்லையெனில் 120 நாள் மதிப்பாய்வு காலத்துக்கு பிறகு அதாவது மே-12 அன்று அமெரிக்கா ஒப்பந்தத்தை முறித்துவிடும் என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்

ஞாயற்றுகிழமையன்று இரானிய அரசு தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் ரூஹானி '' இந்த ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால், இதற்காக வரலாற்று ரீதியான வருத்தத்தை சந்திக்கும்'' என தெரிவித்துள்ளார்.

''இரானுக்கு டிரம்ப் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்கொள்ளவதற்கான திட்டம் உள்ளது. நாங்கள் அதனை எதிர்கொள்வோம்'' என ரூஹானி எச்சரித்துள்ளார்.

தன்னுடைய அணுசக்தி திட்டமானது முழுமையாக அமைதி வாய்ந்ததாக உள்ளதாக இரான் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் மறு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல என இரான் கருதுகிறது.

கடந்த வாரம், இஸ்ரேல் '' ரகசிய அணுசக்தி ஆவணங்களை'' வெளியிட்டது. இரான் 2003-க்கு முன்னரே அணு ஆயுத திட்டத்தை நடத்திவந்ததாகவும் மேலும், ஒப்பந்தத்தை மீறி தொழில்நுட்ப ரீதியாக ரகசியமாக அத்திட்டத்தை தொடர்வதையும் இந்த ஆவணங்கள் காட்டுவதாக இஸ்ரேல் கூறியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெஞ்சமின் நெத்தன்யாஹூ

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவை ஒரு பொய்யர் என இரான் முத்திரை குத்தியது. மேலும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பகமான சர்வதேச அணுசக்தி நிறுவனத்தால் கையாளப்பட்ட பழைய குற்றச்சாட்டுகளின் மறுபிறப்பு என இந்த ஆவணங்கள் குறித்து தெரிவித்தது.

ஆனால் அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்பியோ, இந்த ஆவணங்கள் நம்பத்தகுந்தது என்றும், 2015-ல் இரான் கையெழுத்திட்ட ஒப்பந்தமானது '' பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டது'' என்பதை வெளிக்காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

இவ்வொப்பந்தமானது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இரானின் அணுசக்தி நடவடிக்கைகளை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. மேலும் இரான் பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்வதன் வளர்ச்சியை நிறுத்தாது என்ற காரணங்களுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார்.

எதிர்பாராத அளவுக்கு ஈரானுக்கு நூறு பில்லியன் டாலர்களை அமெரிக்கா கொடுத்ததாகவும். ஆனால் அப்பணமானது சட்டவிரோதமான ஆயுதங்கள், பயங்கரவாதம் மற்றும் அட்டூழியங்களை மத்திய கிழக்கு முழுவதும் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது என்றார் டிரம்ப்.

இந்த ஒப்பந்தத்துக்காக இரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டிருந்தன. இரான் தீவிரவாத குழுக்களுக்கு உதவுகிறது எனும் அமெரிக்க குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவந்துள்ளது தெஹ்ரான்.

வாஷிங்டனில் நடக்கும் இரண்டுநாள் பேச்சு வார்த்தையில் ஜான்சன், அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் மற்றும் செனட் சபையின் வெளியுறவு கொள்கைக்கான தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

படத்தின் காப்புரிமை Dan Kitwood
Image caption பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் போரிஸ் ஜான்சன்

இம்மாதத்தின் துவக்கத்தில், இந்த ஒப்பந்தத்தை தொடர்வது முக்கியமானது என்றார் ஜான்சன்.

ஞாயற்று கிழமையன்று இரானுக்கு எதிராக மீண்டும் பேசிய நெத்தன்யாஹூ, இரானை பின்னாட்களை விட இப்போதே எதிர்கொள்வது நல்லது என்றார்.

அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அவர், இஸ்ரேலுக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக சிரியா அரசுக்கு மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை இரான் வழங்கிவருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும்,'' இது போராட்டம் என்றாலும் கூட நமக்கு எதிராக இரான் செய்யும் வலுவான தீங்கினை தடுத்து நிறுத்த நாம் உறுதியாக உள்ளோம். தாமதிப்பதை விட இப்போதே அதைச் செய்து முடிப்பது நல்லது'' எனத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: