நேரில் சந்திக்காமலேயே சீன ஆண்களை மணம்புரியும் கோஸ்டாரிகா பெண்கள்

"யார் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்?"

இது ஒரு எளிய கேள்விதான். ஆனால் மரியாவை (அவரது உண்மையான பெயர் அல்ல) எளிமையானது போன்று காணப்படும் ஓர் ஒப்பந்ததிற்கு சம்மதிக்க வைப்பதற்கு போதுமானதாக இருந்தது.

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு குடிபெயர்ந்துள்ள சீனாவை சேர்ந்த ஆணொருவர் அந்நாட்டில் நிரந்தர குடியுரிமையை பெறுவதற்காக, கோஸ்டாரிகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 46 வயதான பெண்ணொருவரிடம் 100,000 கொலோன்களை கொடுத்து அவரை திருமணம் செய்துகொள்வதற்கு தயார்ப்படுத்துகிறார்.

அந்த நேரத்தில், கோஸ்டாரிக்காவின் தலைநகரான சான் ஜோஸின் மிக வறிய பகுதிகளில் ஒன்றில் மரியா வாழ்ந்தார். மேலும், அவருடைய குடும்பத்திற்கு உணவளிப்பதற்கான உதவியை எதிர்நோக்கி காத்திருந்தார்.

"எங்களுக்கு உண்பதற்கு எதுவும் இல்லை" என்ற காரணத்தினால் அதற்கு சம்மதிக்கும் நிலை எனக்கு ஏற்பட்டது.

"உணவுக்காக வேட்டையாடுவதற்கு காத்திருக்கிறார்கள்"

மரியா வசிக்கும் பகுதி அதன் பாதுகாப்பிற்காக அறியப்படவில்லை. அதாவது இங்கு நடக்கும் "விடயங்கள் குறித்து குறைவாக தெரிந்திருந்தால், அதிக காலம் வாழலாம்" என்று அங்கு வசிப்பவர் ஒருவர் கூறுகிறார்.

மரியாவுக்கு இங்கு நடந்தது அசாதாரணமானது அல்ல. ஒரு வழக்கறிஞர் அல்லது மத்தியஸ்தம் செய்பவர் உதவியை எதிர்நோக்கி இருக்கும் பெண்களை தான் அதுவரை சந்தித்திருக்காத ஒரு வெளிநாட்டவரை திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதிக்க வைப்பதற்காக வருகிறார்.

"இங்கிருக்கும் பெண்கள் உணவுக்காக வேட்டையாடுவதற்கு காத்திருக்கிறார்கள்… இங்கு வாழும் மக்கள் கொடூரமான தேவையில் இருக்கிறார்கள். எவ்வளவு குறைவாக பணம் தருவதாக கூறினாலும், மறுமுறை யோசிக்காமல் அதை ஒப்புக்கொள்கிறார்கள்" என்று அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு நபர் கூறுகிறார்.

தான் வசிக்கும் இடத்தைக்கூட விட்டு விலகாமல் மரியா திருமணம் செய்துகொண்டார். அதாவது, தனது பகுதிக்கு வந்த காரில் ஏறிய அவர் தான் விரைவில் விவாகரத்து செய்யப்படுவேன் என்று அறிந்து திருமண பத்திரம் ஒன்றில் கைழுத்திட்டவுடன் அதற்கு பரிமாறாக 100,000 கலோன்களை பெற்றுக்கொண்டார்.

"என்னிடம் சீன ஆண் ஒருவரின் புகைப்படத்தை காண்பித்த அவர்கள்: 'மரியா, நீங்கள் இந்த சீன ஆணை திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள்' என்று விளக்கினார்கள்" என்று மரியா கூறுகிறார்.

இத்திருமணத்திற்காக மத்தியஸ்தம் செய்த நபர் தான் அளித்த உத்தரவாதத்தை காப்பாற்றும் வகையில் சிறிது காலம் கழித்து விவாகரத்து செய்வதற்கான ஆவணங்களுடன் வந்தார்.

சில வருடங்களுக்கு பிறகு மரியா பணத்துக்காக மற்றொரு சீன ஆணை திருமணம் செய்து கொண்டார். இதேபோன்று மரியாவின் சில மகள்களும் செய்தார்கள்.

கள்ள சந்தை

அளவிடுவதற்கு கூட கடினமானதாக உள்ள தீவிர பிரச்சனையில் ஒன்றே மரியாவின் கதையும் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறுகிறது.

தனது அலுவலகம் இதுபோன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலித் திருமணங்கள் குறித்து விசாரித்து வருவதாக அம்மாநில அரசின் துணை வழக்கறிஞர் கில்லர்மோ பெர்னாண்டஸ் கூறுகிறார்.

ஆனால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை"மிகச் சிறிதளவாகவே இருக்கும்" என்று அவர் அஞ்சுகிறார்.

கோஸ்டாரிகாவின் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் நிர்வகிக்கப்படும் பல குழுக்கள், அந்நாட்டில் சட்டரீதியான தங்கி பணிபுரியும் உரிமை அல்லது குடியுரிமைக்காக அணுகும் வெளிநாட்டவர்களுக்கு உள்ளூர் பெண்களை பல வழிகளின் மூலம் போலித் திருமணம் செய்து வைப்பதாக கோஸ்டாரிகாவின் குடியுரிமை அலுவலக மேலாளர் கிசெலா யாக்ச்சென்.

இதுபோன்ற போலித் திருமணங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு தெரிவிக்கப்படாமலே தங்களின் திருமண நிலை "திருமணமாகாதவர்" என்பதிலிருந்து "திருமணமானவர்" என்று மாறியதை அறிந்து அதிர்ச்சியடைந்த சம்பவங்களும் கோஸ்டாரிகாவில் நடைபெறுவதுண்டு.

மேலும், விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தெரிந்தே போலித் திருமணங்களுக்கு சம்மதிக்கும் பெண்களுக்கு கடைசி வரை விவாகரத்து ஆவணங்கள் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது. தான் வாழ்க்கையில் சந்தித்திராத மற்றும் கண்டுபிடிக்கவியலாத ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக கூறும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்களில் தங்களுக்கு தெரியாமலேயே வெளிநாட்டவர்களும் பாதிக்கப்படுவதாக கிசெலா கூறுகிறார்.

பிபிசிக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்று, ஸ்பானிஷ் மொழி தெரியாத சீன இளைஞர் ஒருவர் குடியுரிமைக்கான ஆவணம் என்று நினைத்து திருமண ஒப்புதல் சான்றில் கையெழுத்திட வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளதை காட்டுகிறது.

கடுமையான விதிகள்

2010ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கடுமையான குடிவரவு சட்டம் சிக்கலைத் தடுக்க உதவாமல் போய்விட்டதாக கிசெலா கூறுகிறார். அந்தச் சட்டத்தின் கீழ், போலி திருமணங்களை ஏற்பாடு செய்தவர்களும், அதோடு தொடர்புடையவர்களுக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.

அப்போதிலிருந்து, கோஸ்டாரிகாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்வதினால் மட்டும் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் அந்நாட்டின் குடியுரிமையை பெறுவது சாத்தியமில்லாத ஒன்றாக ஆனது.

இப்போதும் கூட கோஸ்டாரிகாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த வெளிநாட்டவர் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பது சாத்தியமானததுதான். ஆனால், அவருக்கு ஒரு வருடத்துக்கு மட்டும்தான் கோஸ்டாரிகாவில் வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

அந்த இணையர் தாங்கள் தொடர்ந்து கணவன்-மனைவியாக வாழ்ந்து வருவதாக உறுதியளித்தால் அவர்களின் குடியுரிமை அனுமதி காலம் நீட்டிக்கப்படும். இவ்வாறாக மூன்று வருடங்கள் கழித்து வெளிநாட்டை சேர்ந்த அந்த இணையர் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம்.

"அமெரிக்காவின் நுழைவு வாயில்"

கோஸ்டாரிகாவுக்கு குடிபெயர்ந்த சீனர்களில் பெரும்பாலானோர் சீனாவின் தென் பகுதியிலுள்ள மாகாணமான குவாங்டாங்கில் இருந்து வந்தவர்கள் என்று ஆராய்ச்சியாளர் அலோன்சோ ரோட்ரீஸ் கூறுகிறார்.

எளிதான குடியேற்ற கொள்கைகள் மற்றும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான நாடு என்ற நற்பெயர் காரணமாக பலர் கோஸ்டாரிகாவைத் தேர்வு செய்கிறார்கள்.

கடந்த 1855ஆம் ஆண்டே சீனர்கள் கோஸ்டாரிகாவுக்கு தொழிலாளர்களாக வந்ததிற்கான வரலாற்று ஆவணங்கள் இருக்கிறது. ஆனால், தற்போது கோஸ்டாரிகாவுக்கு வரும் சீனர்களின் கடைசி நோக்கமாக இங்கு வசிப்பது மட்டும் இல்லை. "அவர்களில் பெரும்பாலானோருக்கு இது அமெரிக்கா செல்வதற்கான நுழைவு வாயில்" என்று ரோட்ரீஸ் கூறுகிறார்.

கோஸ்டாரிகாவுக்கு வரும் பெரும்பாலானோர் இங்கு சிறு கடைகளை திறந்து வியாபாரம் செய்வதாகவும், இங்குள்ள வாழ்க்கை முறைக்கேற்ப தங்களை எளிதாக கட்டமைத்து கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.

லி ஜொங் கோஸ்டாரிகாவில் குடியேறியவர்களில் ஒருவர். அவர் சான் ஜோஸில் கடை ஒன்றை நடத்துகிறார்.

சீனாவிலிருந்து முதலில் பனாமாவுக்கு சென்ற தான், அங்கு அதிகாரிகளுடன் நிலவிய சில பிரச்சனைகளின் காரணமாக கோஸ்டாரிகாவுக்கு வந்ததாகவும், பிறகு இங்கு வந்த தன்னுடைய மகன் கடையொன்றை நடத்துவதாகவும் அவர் கூறுகிறார்.

போலித் திருமணங்களை பற்றி பெறும்போது மழுப்பலான பதில்களை அளிக்கும் லி, ஆனால் தனக்கு பல சீன-கோஸ்டாரிக தம்பதிகளை தெரியும் என்று கூறுகிறார்.

சீன ஆண்கள் மற்றும் கோஸ்டாரிகா பெண்கள் இடையே நடக்கும் திருமணங்கள், கோஸ்டாரிகா ஆண்கள் மற்றும் சீன பெண்கள் இடையே திருமணங்களை விட எளிதானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் நகைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :