உலகப்போர் வெற்றி நாளில் ரோபோ டாங்கியை காட்சிப்படுத்தும் ரஷ்யா

  • 9 மே 2018
படத்தின் காப்புரிமை Alamy
Image caption உரான்-9 "பன்முகப் பணியாற்றும் ஆளில்லா போர் வளாகம்" என்று அழைக்கப்படுகிறது.

புதன்கிழமை நடைபெறும் ரஷ்யாவின் பிரமாண்ட வெற்றி நாள் அணிவகுப்பில் தொலை இயக்கி மூலம் கட்டுப்படுத்தப்படும் டாங்கி மற்றும் பிற புதிய ஆயுத அமைப்புகள், சிரியாவில் போரிட்டு சோதிக்கப்பட்ட பிற ஆயுத முறைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

உரான்-9 டாங்கியில் டாங்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளும் பீரங்கியும் இயந்திரத்துப்பாக்கியும் இடம் பெற்றுள்ளன.

சோவியத் காலத்தில் ராணுவ அணிவகுப்பின் போது கடைபிடிக்கப்பட்ட நவீன ஆயுத அமைப்புகளை, ஏவுகணைகளை காட்சிப்படுத்தும் பாரம்பரியத்தை அதிபர் விளாதிமிர் புதின் மே 9ம் தேதி மீண்டும் கொண்டு வருகிறார். ஜெர்மனியின் நாஜிப்படையினருக்கு எதிரான போரில் பலியான லட்சக்கணக்கானோரை கெளரவிக்க ரஷ்யா நடத்தும் பிரமாண்ட நிகழ்வாகும் இது.

காலாட்படையின் புதிய வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளும் அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.

உரான்-9 மற்றும் "ரோபோ சேப்பர்" என்ற கண்ணி வெடி அகற்றும் வண்டி உரான்-6 ஆகிய இரண்டும் சிரியாவில் நடைபெற்ற சண்டையில் ரஷ்யப் படைகளால் பயன்படுத்தப்பட்டன, இவை சிறப்பாக செயல்பட்டன என்று ரஷ்யாவின் Gazeta.ru என்ற இணையதளம் ரஷ்ய மொழியில் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை MIL.RU/FACEBOOK
Image caption தொலைவில் இருந்து இயக்கப்படும் உரான்-6 சிரியாவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது.

சிரிய அதிபர் பாஷர் அல் அஸாத்திற்கு உதவும் வகையில் ரஷ்யா சிறப்பு படைகளையும் ஏராளமான போர் விமானங்களையும் ஐஎஸ் குழு உட்பட பல்வேறு தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது.

Gazeta.ru செய்தியின் படி உரான்-9 ரோபோ டாங்கி, தான் தாக்க வேண்டிய இலக்கை தானே கண்டறிந்துவிடும். ஆனால் பீரங்கியால் சுடும் முடிவு 3 .கி.மீ. தொலைவு வரையில் கவச வண்டியில் அமர்ந்து இருக்கும் இராணுவ கமாண்டரால் எடுக்கப்படும்.

உரான்-6 ரோபோ-சேப்பர், சிரியாவின் பால்மைரா, அலெப்போ மற்றம் டேர் அல்-ஜொர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கண்ணிவெடிகளை அகற்ற பயன்படுத்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டை ஒரு கி.மீ. தொலைவிலிருந்து மேற்கொள்ள முடியும்.

உரான்- 6 அரசு படையினருக்கு பாதுகாப்பான தொலைவில் இருந்தே கண்ணிவெடிகளை இயக்கி செயலிழக்கச் செய்தது. இதன் மூலம் துருப்புகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஊடுருவ இயன்றது. ரஷ்ய பாதுகாப்பு துணை அமைச்சர் யூரி போரிசோவ் கூறிய தகவல்களின் அடிப்படையில் இந்த தகவலை Gazeta.ru கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை MIL.RU/FACEBOOK
Image caption ஏஎம்.-1 வாகனம், ரஷ்யாவின் கடந்த கால காலாட்படை வாகனங்களில் இருந்து மாறுபட்டது.

இரண்டு பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அனைத்துவகை நிலப்பரப்பிலும் பயணிக்கக் கூடிய காலாட்படை வாகனங்கள் முதன் முறையாக அணிவகுப்பில் பங்கேற்கும். அடிப்படையில் இவை ரஷ்யர்கள் தயாரித்த இயந்திர 4 சக்கரம் பொருத்தப்பட்ட பைக். இதில் இயந்திரத் துப்பாக்கியைப் பொருத்தலாம்.

சிறிய ஏவுகணை எதிர்ப்பு வாகனம் காலாட்படைக்கு என வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை கரடுமுரடான பகுதிகளிலும் பயணிக்க வல்லது. ஆர்க்டிக், பாலைவனம் மற்றும் சதுப்புநிலங்களிலும் பயணிக்க வல்லது.

ரஷ்யா அனைத்து பருவநிலையிலும் பயன்படுத்தவல்ல ட்ரோன் விமானமான கோர்சார் விமானத்தை காட்சிப்படுத்த உள்ளது. இந்த ட்ரோனைப் பயன்படுத்தி ஏவுகணைத் தாக்குதல்கள், வேவுப்பணிகள் மற்றும் பொருள் வழங்கல் பணிகளை மேற்கொள்ள முடியும்.

படத்தின் காப்புரிமை MIL.RU/FACEBOOK
Image caption ஏஎம்.-1 வாகனத்தில் உள்ள கொடிகள் இரண்டாம் உலகப்போரின் காலத்தைச் சேர்ந்தவை

இந்த விமானங்கள் 10 மணி நேரம் வரை பயணிக்கும், 6 கி.மீ. உயரம் வரை செல்லும், அதிக பட்சமாக 160 கி.மீ. வரை செல்லும்.

ரஷ்ய பாதுகாப்பு இணை அமைச்சர் போரிசோவ் கூறுகையில் ரஷ்ய இராணுவத்தில் பல்வேறு வகையான ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இரண்டு வகை ட்ரோன்கள் மட்டுமே அணிவகுப்பில் இடம்பெறும் என்றார். அவை கோர்சார், மற்றும் ஹெலிகாப்டர் போன்ற விமானமான கத்ரன் ஆகியவை.

புதன் கிழமை மாஸ்கோவின் வானிலை நன்றாக இருந்தால் அணிவகுப்பின் போது பெரிய அளவில் விமானங்கள் பறக்கும். இதில் போர் விமானங்கள், குண்டு வீசும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அடங்கும்.

படத்தின் காப்புரிமை MIL.RU/FACEBOOK
Image caption கோர்சார் டிரோன்களைப் பயன்படுத்தி ஏவுகணைகளை செலுத்தலாம்.

முதன்முறையாக மிக் 31 ரக போர் விமானங்கள் ரஷ்யாவின் கின்ழல் என்ற அதிவேகக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை தாங்கிச் செல்லும். இவை விமானந்தாங்கிக் கப்பல்கள் மற்றும் சிறிய கப்பல்களை தாக்கி அழிக்க வல்லவை.

படத்தின் காப்புரிமை MIL.RU/FACEBOOK
Image caption கின்ழல் ஏவுகணைகளை தாங்கிய மிக்-31 விமானங்கள் பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றன.

மேலும் ரஷ்யா தன் விமானப்படையின் பெருமையான புதிய சு-57 ரக ரகசிய விமானத்தை காட்சிப்படுத்த உள்ளது. இந்த விமானத்திற்கு டி-50 என்றும் பெயர் உண்டு. சிரியாவில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு போர் ஆயுதங்களில் இதுவும் ஒன்று.

படத்தின் காப்புரிமை MIL.RU/FACEBOOK
Image caption சு-57 விமானங்கள் ரஷ்யாவின் வயதாகிவரும் மிக்-29 மற்றும் சு-27 ரக போர் விமானங்களுக்கான பதிலீடாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :