இரான் அணு ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்: மேற்குலக நாடுகள்

  • 9 மே 2018
இரான் படத்தின் காப்புரிமை Getty Images

இரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இரான் அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக மேற்குலக நாடுகள் கூறியுள்ளன.

தற்போது மீதமுள்ள அனைத்து நாடுகளுடன் தொடர்ந்து செயல்படப் போவதாக பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூறியுள்ளது. தங்களது செயல்பாடுகளை தடுக்க வேண்டாம் எனவும் இந்நாடுகள் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளன.

2015 இரான் அணு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ரஷ்யா மற்றும் சீனாவும் தங்களது ஆதரவைத் தொடரவுள்ளதாக கூறியுள்ளது.

முன்னதாக, இரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனை உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ள டிரம்ப், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தனது ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, 2015-ல் அணு ஒப்பந்தம் ஏற்பட்டபோது தளர்த்தப்பட்ட இரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதற்கு பதிலடியாக, அணு எரிசக்தி மற்றும் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுவதற்கு முக்கியமானதாகக் கருதப்படும் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க ஆயத்தம் மேற்கோள்வதாக இரான் கூறியுள்ளது.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறுகையில், ''தனது ஒப்பந்த்தை மதிக்கப் போவதில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அதனால், இரான் அணு எரிசக்தி அமைப்பை யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

தனது கூட்டாளி நாடுகள் மற்றும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிற நாடுகளுடன் பேசுவதற்காக அடுத்த சில வாரங்கள் காத்திருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

இரான் மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாக அமல்படுத்தப் போவதில்லை என்றும், 90 மற்றும் 180 நாள் காலக்கெடு நடைமுறைகளின்படி செயல்பட இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹசன் ரூஹானி

ஐரோப்பிய ஒன்றியம் அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மதிப்பதில் உறுதியாக இருப்பதாக ஒன்றியத்தின் மூத்த ராஜீய பிரதிநிதி ஃபெடரிகா மொஹெரினி தெரிவித்துள்ளார்.

ஆனால், டிரம்பின் தைரியமான இந்த முடிவை ஆதரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தம், இரான் தனது அணு ஆயுத நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நிறுத்தி வைக்க உதவியதாகவும் ஆனால் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் அதன் செயல்பாடுகளைத் தடுக்கவில்ல என்றும் டிரம்ப் தொடர்ந்து புகார் கூறிவந்தார்.

மேலும், அமெரிக்கா வழங்கிய 100 பில்லியன் டாலர் நிதியுதவியை ஆயுதங்களுக்காகவும், மத்திய கிழக்கில் அடக்குமுறையை தூண்டவுமே பயன்படுத்தக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

உடன்பாட்டில் இருந்து விலகுவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் எந்த மாதிரி ஆபத்தான நிலையில் இருந்ததோ அதை நிலைக்கு உலகத்தை மீண்டும் இழுத்தும் செல்லும் ஆபத்துக்கு ஆளாக்கியிருப்பதாக அந்த உடன்பாட்டுக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: