அமெரிக்கா தவறு செய்துவிட்டது: இரான் எச்சரிக்கை

  • 9 மே 2018
படத்தின் காப்புரிமை AFP

பல நாடுகளுக்கிடையேயான அணு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளதன் மூலம் அவர் "தவறு செய்துவிட்டதாக" இரானின் அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

"முதல் நாளிலிருந்தே, அமெரிக்காவை நம்ப வேண்டாம்" என்று தான் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் தொடர்வதற்கு முன்பு, தனது அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து உத்தரவாதத்தை பெறவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இரான் மீதான தடைகளை 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்தத்தின் மூலம் நீக்கியதற்கு பதிலாக இரான் தனது அணுசக்தி தொடர்பான செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது.

முன்னதாக, இரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனை உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ள டிரம்ப், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தனது ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, 2015-ல் அணு ஒப்பந்தம் ஏற்பட்டபோது தளர்த்தப்பட்ட இரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

அதற்கு பதிலடியாக, அணு எரிசக்தி மற்றும் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுவதற்கு முக்கியமானதாகக் கருதப்படும் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளப்போவதாக இரான் கூறியுள்ளது.

மிதவாத சீர்த்திருத்தவாதியாக கருதப்படுபவரும், இந்த ஒப்பந்தம் 2015ல் கையெழுத்திடப்பட்டபோது அந்நாட்டை தலைமை தாங்கியவருமான இரானிய அதிபர் ஹசன் ரூஹானி, இந்த ஒப்பந்தத்தை தக்க வைப்பதற்கு தான் முயல்வேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தொலைக்காட்சியில் உரையாற்றிய இரானின் அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி, தான் பிரிட்டன், பிரான்ஸ் அல்லது ஜெர்மனி ஆகிய நாடுகளை நம்பவில்லை என்றும், ஒப்பந்தத்தை தொடர்வதற்கு முன்பு அந்நாடுகள் 'உத்தரவாதம்' அளிக்கவேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இரானிய அரசாங்கத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், "மூன்று ஐரோப்பிய நாடுகளுடன் அணு ஒப்பந்தத்தை தொடர வேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக நாங்கள் அறிகிறோம். ஆனால், இந்த மூன்று நாடுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

"நீங்கள் ஒப்பந்தத்தை தொடர விரும்பினால், அந்நாடுகளிடமிருந்து உண்மையான உத்தரவாதங்களை பெறுங்கள், இல்லையெனில் நாளை அவர்கள் அமெரிக்காவைப் போலவே செய்வார்கள்" என்று கமேனி கூறியுள்ளார்.

"அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை" என்றும் "அவர்கள் இன்று ஒன்றும், நாளை மற்றொன்றும் கூறுவார்கள். அவர்களுக்கு வெட்கமே இல்லை" என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளின் தலைவர்களை அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: