உலகப் பார்வை: காங்கோவில் மீண்டும் 'இபோலா' அச்சுறுத்தல் - இருவர் உயிரிழப்பு

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

மீண்டும் இபோலா

படத்தின் காப்புரிமை AFP

காங்கோ ஜனநாயக குடியரசில் இருந்து ஆபத்தான இபோலா வைரஸ் பரவுவதை தடுக்க நைஜீரியா மற்றும் கென்யா அரசாங்கங்கள் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. காங்கோ மற்றும் அருகில் உள்ள நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

காங்கோவில் சுகாதார அதிகாரிகளுக்கு உதவ, சிறப்புக் குழுக்களை அனுப்ப நைஜீரியா ஆலோசித்து வருகிறது.

17 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலின மாற்ற சட்டத்துக்கு தடை

படத்தின் காப்புரிமை AFP

தங்களது பாலினத்தை எளிதாக மாற்றிக் கொள்ள வழிவகை செய்யும் சட்டத்துக்கு போர்துகல் அதிபர் மார்ஸெலு ரபெல்லு டி சௌஸா தடை விதித்துள்ளார்.

இச்சட்டம் இருந்திருந்தால், 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ அறிக்கை ஏதும் சமர்பிக்காமலே தங்கள் ஆவணங்களில், தங்கள் பாலினத்தை மாற்றிக் கொள்ளலாம்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், அவர்களது பெற்றோர்கள் அல்லது சட்ட பிரதிநிதிகளால் அங்கீகாரம் பெற்ற பிறகே பாலினத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

சோமாலியாவில் கல்லெறிந்து கொல்லப்பட்ட பெண்

படத்தின் காப்புரிமை AFP

சோமாலியாவில் 11 கணவர்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பெண் ஒருவர் கல்லெறிந்து கொல்லப்பட்டதாக போராளிகள் குழு தெரிவித்துள்ளது. அல் ஷபாப் போராளிகள் குழுவால் நடத்தப்பட்ட நீதிமன்றம் இந்தப் பெண்ணை தண்டித்துள்ளது.

ஷுக்ரி அப்துல்லாஹி வர்சமே என்ற பெண், முன்னாள் கணவர்களை விவாகரத்து செய்யாமலே 11 முறை திருமணம் செய்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

கழுத்து வரை புதைக்கப்பட்ட அவர், அல் ஷபாப் போராளிகளால் கல்லெறியப்பட்டு கொல்லப்பட்டதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

உலகின் வயதான தலைவர்

படத்தின் காப்புரிமை AFP

மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமரான மஹாடீர் மொஹமத் வெற்றி பெற்றுள்ளார்.

60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பேரீஸான் தேசிய கூட்டணியை, 92 வயதான மஹாடீர் வீழ்த்தியுள்ளார். "நாங்கள் பழி வாங்கவில்லை. சட்டத்தை மீட்டெடுக்கவே விரும்புகிறோம்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

வியாழக்கிழமையன்று பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகில் வயதான தலைவராக மஹாடீர் மொஹமத் திகழ்வார்.

மேலும் இச்செய்தியை படிக்க: மலேசியா: 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: