சிரியா: இரானிய நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் பகுதி மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக சிரியாவில் உள்ள இரானின் அனைத்து ராணுவக் கட்டமைப்புகளையும் தாக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது இஸ்ரேல்.

படத்தின் காப்புரிமை Reuters

கடந்த இரவு தங்கள் நிலைகள் மீது இரானியப் புரட்சிப் படை 20 ராக்கெட்டுகளை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இதற்குப் பதிலடியாக இரானிய ஆயுதக் கிடங்குகள், போக்குவரத்துக் கேந்திரங்கள், உளவு மையங்கள் ஆகியவை மீது இலக்கு வைத்துத் தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையே நடந்து வரும் போரில் அதிபர் பஷார் அல்-அசாத் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்கு இரான் தனது படைகளை அனுப்பியுள்ளது. இரானின் ராணுவ இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியதற்கு உடனடியாக இரான் பதிலேதும் கூறவில்லை.

அதே நேரம், இஸ்ரேலின் ஏராளமான ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும், இஸ்ரேல் தாக்குதலை தம் நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆனால், சில ஏவுகணைகள் வான் பாதுகாப்புப் படைப்பிரிவுகளையும், ரேடார்களையும், ஆயுதக் கிடங்குகளையும் தாக்கியதாக ராணுவத் தரப்புத் தகவல்கள் அதிகாரபூர்வ செய்தி முகமையான சானாவிடம் கூறியுள்ளன. தமது பரம எதிரியான இரான் சிரியாவில் ராணுவ ரீதியாக காலூன்றுவதை தடுக்க இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

இதையடுத்து சிரியாவில் உள்ள பல இரானிய ராணுவத் தளங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படுகிறது. ஏப்ரல் மாதம் ஒரு விமானப்படைத் தளம் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் இரானியப் படையினர் ஏழு பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதில் ஒன்று.

கோலன் ஹைட்சில் என்ன நடந்தது?

சிரியாவின் கோலன் ஹைட்ஸின் பெரும்பாலான பகுதியை 1967 மத்தியக் கிழக்குப் போரின் போது ஆக்கிரமித்துக்கொண்ட இஸ்ரேல் அதை தமது நாட்டோடு இணைத்துக் கொண்டது. ஆனால் சர்வதேச சமூகம் இதை ஏற்கவில்லை.

வியாழக்கிழமை அதிகாலை கோலன் ஹைட்ஸில் உள்ள தமது முன்னரண் பகுதி மீது இரானிய புரட்சிகரப் படையினரின் (இரான் ராணுவம்) வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குத்ஸ் ஃபோர்ஸ் 20 ராக்கெட்டுகளை ஏவியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் 4 ராக்கெட்டுகள் வான் பாதுகாப்பு அமைப்பால் வீழ்த்தப்பட்டதாகவும் மற்றவை இலக்கைத் தாக்கவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: