கென்யா: தனியார் அணை உடைந்து 41 பேர் பலி

கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து வடமேற்கே சுமார் 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோலாய் நகரின் அருகே உள்ள அணை ஒன்று, புதன்கிழமை நள்ளிரவு உடைந்ததில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

நகுரு கவுண்டி பகுதியில் உள்ள படேல் அணை உடைந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நைரோபியில் இருந்து பிபிசி செய்தியாளர் ஃபெர்டினண்ட் ஓமோண்டி தெரிவிக்கிறார்.

புதைமண்ணில் சிக்கி உயிரிழந்தவர்களில் 11 பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.

சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள, பலரும் தங்கி பணியாற்றும் விளைநிலத்தில் வெள்ளம்பரவும் முன்பு பெரும் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இதுவரை சுமார் 40 பேரை மீட்டுள்ளதாக கென்யாவிலுள்ள செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. இந்த பெருவிபத்தில் 2,000க்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

அணை உடைந்ததால் உண்டான முழு சேத விபரங்கள் தெரியவில்லை என்று கூறியுள்ள உள்ளூர் அதிகாரிகள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக கூறியுள்ளனர்.

தற்போது உடைந்துள்ள படேல் அணைக்கட்டு அங்குள்ள பெரு விவசாயி ஒருவருக்கு சொந்தமான மூன்று தனியார் நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும்.

சமீபத்தில் அப்பகுதியில் பொழிந்த கனமழையால் அந்த அணையின் சுவர்களில் பெரும் சேதங்கள் உண்டாகியிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த அணையைக் கட்ட முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும், மீதமுள்ள இரண்டு அணைகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பது குறித்தும் உள்ளூர் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் மழை மற்றும் அதனால் உண்டான சேதங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய மழை வெள்ளதால் கென்யாவில் 2,20,000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: