மலேசிய தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம் என்ன?

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார் என்று கருதப்பட்ட மகாதீர் மொஹமத் எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து மலேசியாவில் தேர்தலை சந்தித்ததுடன் மட்டுமல்லாது, அந்தத் தேர்தலில் வரலாற்று வெற்றியும் பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தலைநகர் கோலாலம்பூரில் வெற்றியைக் கொண்டாடும் மகாதீரின் ஆதரவாளர்கள்

கடந்த 2003இல் பதவியில் இருந்து விலகிய மகாதீர் மொஹமத், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலேசிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். தற்போது 92 வயதாகும் மகாதீர்தான் உலக நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்களிலேயே அதிக வயதுடையவர் ஆகிறார்.

பிரிட்டனிடம் இருந்து மலேசியா சுதந்திரம் பெற்றதில் இருந்து ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி முதல் முறையாக இந்தத் தேர்தலில் அதிகாரத்தை இழந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான நம்பிக்கை கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.

மலேசிய அரசின் தரவுகளின்படி, அந்நாட்டு மக்கள்தொகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சுமார் 8%. அந்த 8% பேரில் சுமார் 95% பேர் தமிழர்கள்.

பிரிட்டன் காலனியாக இந்தியா, இலங்கை, மலாயா (மலேசியா) ஆகிய நாடுகள் இருந்தபோது தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து ஆங்கிலேயர்களால் மலாயா அழைத்துச் செல்லப்பட்டவர்கள், இந்திய விடுதலைக்கு முன்னரும் பின்னருமாக வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிற காரணங்களுக்காக புலம் பெயர்ந்தவர்கள் என தமிழர்கள் மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழ்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மகாதீர் மொஹமத்

இந்தத் தேர்தல் முடிவுகள் பிபிசி தமிழிடம் பேசிய மலேசியாவைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் மக்கள் ஓசை இதழின் ஆசிரியருமான மோகனன் பெருமாள், இந்தத் தேர்தலில் இன, மத எல்லைகளைக் கடந்து மலேசிய மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் இது ஓர் ஆரோக்கியமான சூழல் என்றும் கூறினார்.

"இதுவரை இந்தியர்களின் பிரச்சனைகளுக்காக இந்தியக் கட்சி, சீனர்களின் பிரச்சனைகளுக்கான சீனக் கட்சி, மலாய்காரர்களின் பிரச்சனைகளுக்காக மலாய் கட்சி எனும் நிலை இருந்தது. இனிமேல் இவர்களில் யாருக்கு பிரச்சனை என்றாலும் அது ஒட்டுமொத்த மலேசிய மக்களின் பிரச்சனையாகப் பார்க்கப்படும்," என்றார்.

"சில தமிழ் வேட்பாளர்கள் 40 ஆயிரம், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர். ஆனால், ஒரு தொகுதியில் தமிழர்களின் எண்ணிக்கையே அவ்வளவு இருக்காது. சராசரியாக ஒரு தொகுதியில் 2,000 முதல் 5,000 தமிழர்களே இருப்பார்கள். அதிகபட்சமாக 10,000 பேர் இருப்பார்கள். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது," என்று மோகனன் பெருமாள்.

Image caption மோகனன் பெருமாள்

வழக்கமாக அரசியலில் அதிக ஆர்வம் இல்லாத மலேசிய-இந்திய இளைஞர்கள் இந்தத் தேர்தலில் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள் என்று கூறும் அவர் அவர்களுக்கு அடிப்படை வரலாற்றுப் புரிதல் இல்லாமல் இருப்பது குறித்தும் கவலை தெரிவித்தார்.

மலேசிய வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 22 வயது இளைஞரான பிரபாகரன் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் முடிவு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி, "10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த அரசியல் சுனாமி தற்போது வீசியுள்ளது. வழக்கமாக நாடாளுமன்றத்தில் தமிழர்களின் எண்ணிக்கை 6-7 என்ற அளவில்தான் இருக்கும். அந்த எண்ணிக்கை இப்போது இரண்டு மடங்காகியுள்ளது," என்று கூறினார்.

மலேசியாவில் 61 ஆண்டுகளாக இன, மத அடிப்படையில் நடந்த ஆட்சியால் தமிழர்களுக்கு பாதிப்பு உண்டாகியுள்ளதாகக் கூறும் அவர், "புதிய அரசு தமிழர்களுக்கு சமய மற்றும் கலாசார பாதுகாப்பை உண்டாக்கும்," என்று தெரிவித்தார்.

Image caption பினாங்கு ராமசாமி

"இதுவரை மலேசியா இனம், சமயம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஆளப்பட்டு வந்தது. அதனால் சிறுபான்மையினருக்கு இயல்பாகவே போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. வணிக வாய்ப்புகள், உயர்கல்வி ஆகியவற்றில் தமிழர்களுக்கு குறைந்த அளவே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இனிமேல் அவற்றில் தமிழர்களுக்கு அதிக இடங்கள் கொடுக்க புதிய அரசு பரிசீலனை செய்யும்," என்று இந்தத் தேர்தலுக்கு பிந்தைய மாற்றங்கள் குறித்து ராமசாமி கூறினார்.

பெரும்பான்மை மக்கள் வாக்குகளுக்காக சிறுபான்மையினர் நலனில் சமரசம் செய்துகொள்ளும் கட்டாயம் புதிய அரசுக்கு உண்டாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய மற்றும் சீன வம்சாவளியினர் மலேசியாவின் மக்கள்தொகையில் சுமார் 40% இருப்பதாகவும் அவர்களும் சேர்ந்து வாக்களித்துதான் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டது என்றும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: