பணமதிப்பிழப்பு: செல்லாத ரூபாய் தாள்களுடன் அல்லல்படும் நேபாள மக்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக நேபாளம் செல்கிறார் நரேந்திர மோதி.

நேபாள தலைவர்களுடனான மோதியின் பேச்சுவார்த்தையின்போது, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளிகளின் நிலை குறித்து விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

இப்போது கூட, நேபாள மத்திய வங்கியில் சுமார் எட்டு கோடி இந்திய ரூபாய் பயனற்று உள்ளது.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டவுடன், மக்கள் மற்றும் சிறுதொழில் வர்த்தகர்கள், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களின் முன்பு பெரிய வரிசைகளில் நின்றுகொண்டு தங்களது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு தவித்ததும், அரசாங்கத்தை திட்டியதும் உங்களுக்கு நிச்சயம் ஞாபகத்தில் இருக்கும்.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய மக்களை மட்டுமல்லாது, பக்கத்து நாடான நேபாள மக்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

இந்திய ரூபாய் மீதான மதிப்பு குறைந்துவிட்டது

மதிப்பற்றதாக அறிவிக்கப்பட்ட தங்களது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இந்திய மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு, இன்றுவரை நேபாள மக்களுக்கு கிட்டவில்லை.

தடையுத்தரவுக்கு முன்னர், நேபாளத்தில் கணிசமான அளவு 500 மற்றும் 1000 இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர், மக்கள் நேபாளத்துக்கு 25,000 இந்திய ரூபாய் வரை கொண்டு வர முடியும். இது தவிர, நேபாள வர்த்தகத்தின் 70 சதவிகிதம் இந்தியாவிலிருந்து நடக்கிறது. எனவே, பொதுவாகவே நேபாள மக்கள் இந்திய ரூபாய்களை வைத்திருப்பார்கள்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டவுடன், நேபாள மக்கள் அதிர்ச்சியடைந்ததுடன், இந்திய ரூபாய் மீதான அவர்களின் நம்பிக்கை குறைந்துவிட்டதாக நேபாளத்தின் தேசிய மற்றும் மத்திய வங்கிகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் தேசிய வங்கியில் எட்டு கோடி இந்திய ரூபாய் இன்னும் அப்படியே இருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், அந்நாட்டு மக்களின் வசம் எவ்வளவு ரூபாய் உள்ளது என்பதில் இன்னும் தெளிவான தகவல் இல்லை..

நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் பேசவுள்ளதாக கூறியிருந்தார். ஆனால். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான விஜய் கோகலே, இந்த விவகாரம் குறித்து எந்தவொரு கூட்டத்திலும் யாரும் கலந்துரையாடவில்லை என்று கூறினார்.

இந்த விடயத்தில் பிரதமர் ஓலி நேபாளத்தில் விமர்சனத்துக்கு உள்ளானார்.

பணத்தை தண்ணீரில் வீசமுடியாது

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய, நேபாளத்துக்கான இந்திய தூதரான மஞ்ஜீவ் சிங், இந்த விவகாரம் தொடர்பான முறையான பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கிடையே தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.

"இந்தியாவில் உங்களுக்கும் எனக்கும் இருந்த அதே நேரம்தான் நேபாள மக்களும் இருந்தது. அவர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்க வேண்டும். இது தொடர்பான முறையான பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கிடையே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், அதுகுறித்து இருநாட்டு அரசாங்ககளுக்கும் தெரியும்" என்று அவர் மேலும் கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, மிதிலாவும் அவரது கணவரும் இந்தியாவுக்கான நேபாள தூதருமான தீப் குமாரும் டெல்லியில் இருந்தனர்.

500 மற்றும் 1000 மதிப்புள்ள 10-15 ஆயிரம் இந்திய பணத்தை அவர் இன்னமும் வைத்துள்ளதுடன், ஒரு நாள் இந்திய அரசாங்கம் அதனை மாற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் என்றும் நம்புகிறார்.

"இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், இந்தியா முழுவதும் இப்படியொரு ரூபாய் நோட்டு வழக்கத்தில் இருந்தது என்று எதிர்காலத்தில் மக்களிடம் காண்பிப்போம். வேறென்ன நாங்கள் செய்ய முடியும்? பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள இந்த பணத்தை நம்மால் தண்ணீரில் வீசி எறிந்துவிட முடியாது" என்று அவர் மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பணத்தை மாற்றுவதற்கு எவ்வளவு கடினமாக இருந்தது?

நேபாளத்தில் வாழும் பலர் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும், ஆனால் இந்திய-நேபாள எல்லையிலுள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் மிதிலா கூறுகிறார்.

மிதிலாவுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மூன்று பெண்களில் ஒருவர் தன்னிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புனித பயணத்திற்காக செலவழித்துவிட்டதாகவும், மற்றொரு பெண் தன்னிடமிருந்த பணத்தை லக்னோவிலுள்ள மருத்துவர் ஒருவரிடம் வலுக்கட்டாயமாக அளித்துவிட்டதாகவும் கூறுகிறார்.

Image caption மிதிலா

அங்கிருந்த மூன்றாவது பெண்ணொருவர், "என்னிடம் இந்திய பணமே இல்லை என்பதால் எனக்கு எவ்வித பிரச்சனையுமில்லை" என்று கூறினார்.

மேலும், தங்களிடமுள்ள பணத்தை குறைந்த மதிப்பிற்கு விற்கும் நிலைக்கும், இந்தியாவிலுள்ள தங்களின் உறவினர்களின் மூலமாக பணத்தை மாற்றுவது என பல்வேறு வழிகளில் பணத்தை மாற்றுவதற்கு முற்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்தியாவின் எல்லைப்புற கிராமங்களில் வசிக்கும் மக்கள் எளிதாக தங்களிடமிருந்த பணத்தை விற்ற நிலையில், நேபாளத்தின் குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தங்களது அரசாங்கத்தை நம்பியிருப்பதை தவிர வேறு வழியில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய ரிசர்வ் வங்கியின் நிலை

இந்திய அரசாங்கத்தின் இந்த நிலை ஓய்வூதியத்தாரர்கள், சிறுகுறு வணிகர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், அவர்கள் இருநாட்டு அரசாங்கத்தினரும் தங்களது நிலை மோசமடைய விடமாட்டார்கள் என்று நம்பினார்கள்.

இந்த தடைக்கு முன்னர், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நேபாளத்துக்கு எடுத்துச்சென்று, அதை நேபாளத்தின் பணமாக மாற்ற முடிந்தது.

ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டவுடனேயே நேபாள தேசிய வங்கி இந்திய ரூபாய்களை பரிமாற்றம் செய்யும் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டதோடு மட்டுமல்லாமல், உடனடியாக இரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை இந்திய ரிசர்வ் வங்கியுடன் நடத்தியது.

ஒருவர் 4,500 இந்திய ரூபாயை மட்டுமே மாற்றிக்கொள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்ததாகவும், ஆனால் அதை ஏற்றுக்கொண்டால் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் நேபாள தேசிய வங்கி அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அந்த வங்கியின் நிர்வாக இயக்குனரான பீஷ்மா ராஜ் துங்கனா கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர், நேபாளத்துக்கு வரும் மக்கள் 25,000 ரூபாய் வரை எடுத்துவர முடிந்த நிலையில், தற்போது வெறும் 4,500 ரூபாயைதான் மாற்றிக்கொள்ள முடியும் என்று நேபாள மக்களிடம் கூறுவது அவ்வளவு எளிதானதல்ல.

"இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, இந்த விவகாரத்தில் எங்களால் முடிவெடுக்க இயலவில்லை. இது இன்னும் நிலுவையில்தான் உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

Image caption பீஷ்மா ராஜ் துங்கனா, நிர்வாக இயக்குனர், நேபாள தேசிய வங்கி

"இந்திய பணத்தின் மீது நேபாள மக்களுக்கிருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு நிலவும் நிலையில், இந்த பிரச்சனையை ஏன் தீர்க்க முடியவில்லை? சுமார் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 1000 மதிப்புள்ள இந்திய ரூபாய்களை இந்தியா பரிமாறிக்கொண்டதாக பூட்டானின் அமைச்சரொருவர் கூறும்போது, எங்களிடம் மட்டும் இந்தியா ஏன் இந்த பாகுபாட்டை கடைபிடிக்கிறது?" என்று அவர் மேலும் கூறுகிறார்.

தற்போது 100 ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பதற்கும், பரிமாறிக்கொள்வதற்கும் நேபாளத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

"மக்களிடம் வரைவோலை, கடனட்டை மற்றும் வங்கி அட்டைகளை அதிகளவில் பயன்படுத்துமாறு கூறி வருகிறோம். தங்களிடம் உள்ள இந்திய ரூபாய்களை மாற்றுவதற்கு ஒருநாள் இந்திய அரசாங்கம் அனுமதிக்கும் என்று மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்" என்று துங்கனா கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: