ஜெரூசலேத்தில் அமெரிக்க தூதரகம் - ஏன் இவ்வளவு சர்ச்சை?

ஜெரூசலேத்தில் தனது புதிய தூதரகத்தை அமெரிக்கா இன்று திறக்க உள்ள நிலையில், இது ஏன் இவ்வளவு முக்கியப் பிரச்சனையாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப் தனது கணவர் ஜாரெட் குஷ்னெர் உடன் சென்றுள்ளார்

இஸ்ரேல் - பாலத்தீனம் இடையிலான மோதலின் மையப்புள்ளியாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.

சர்வதேச ரீதியாக, ஜெருசலேம் மீதான இறையாண்மை அங்கீகரிக்கப்படவில்லை. 1993-ஆம் ஆண்டின் அமைதி உடன்படிக்கையின்படி, ஜெரூசலேம் யாருக்கு என்ற இறுதி முடிவு அமைதிப் பேச்சுவார்த்தையின் இறுதியில் முடிவு செய்யப்பட வேண்டும் என்று தீர்மானமானது.

கடந்த 1967 -ஆம் ஆண்டு மத்தியக் கிழக்கு போர் நடந்ததில் இருந்து கிழக்கு ஜெரூசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. எந்த நாடும் அங்கீகரிக்கப்படாவிட்டாலும், ஒரு பகுதியை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அந்த நிலையில்தான் கடந்த 2017 டிசம்பர் மாதம் டிரம்ப் தனது அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த 1967 முதல் டஜன் குடியிருப்புக்களை இஸ்ரேல் கட்டியுள்ளது. கிழக்கு ஜெரூசலேத்தில் சுமார் 2 லட்சம் யூதர்கள் உள்ளனர். இஸ்ரேல் மறுத்தாலும், சர்வதசே சட்டங்களின்படி இது சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது.

பல நாடுகளின் தூதரகங்கள் ஜெரூசலேத்தில் இருந்தன. 1980-க் இஸ்ரேல் தனது தலைநகரமாக ஜெரூசலேத்தை முறைப்படியாக அறிவித்த பிறகு அந்த நாடுகள் தங்கள் தூதரகங்களை மாற்றிவிட்டன.

கடந்த ஆண்டு, ஜெரூசலேத்தை இஸ்ரேலின் தலைநகரமாக டிரம்ப் அங்கீகரித்ததில் இருந்து அமெரிக்கா பல பதிற்றாண்டுகளாக கடைபிடித்துவந்த பக்க சார்பற்ற நிலை முறிந்துபோனது. சர்வதேச சமூகம் அமெரிக்காவுடன் முரண்பட்டது. ஐரோப்பிய ஒன்றியமும் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாலத்தீனர்கள் போராட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நடவடிக்கைக்கு, இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. ஆனால், பாலத்தீனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்த ஒன்று கூடியுள்ளனர்.

ஜெரூசலேத்தில் அமெரிக்க தூரதக திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப் தனது கணவர் ஜாரெட் குஷ்னெர் உடன் சென்றுள்ளார். இவர்களுடன் மூத்த அமெரிக்க அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர்.

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றும் டிரம்பின் முடிவு பாலத்தீனர்களை கோபப்படுத்தியது.

ஒரு சிறிய இடைக்கால தூதரகம், திங்கட்கிழமை முதல் ஜெருசலேத்தில் ஏற்கனவே உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இயங்க தொடங்கும்.

ஜெருசலேத்தில் அமெரிக்க தூதரகத்திற்கான பெரிய இடம் பின்னர் தேர்ந்தேடுக்கப்படும். அப்போது டெல் அவீவ் நகரத்தில் இருந்து முழு தூதரகமும் இங்கு இடம் மாற்றப்படும்.

இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதின் 70-ம் ஆண்டு நிறைவு நாளில் அன்று புதிய தூதரகத்தைத் திறக்கும் விதமாக திறப்பு விழா தேதி அமைக்கப்பட்டுள்ளது.

இது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அரசியல் வாழ்க்கையில் மிகச்சிறந்த வாரமாகக் கருதப்படுகிறது. முதலில், அதிபர் டிரம்ப் இரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார். தற்போது தூதரக திறப்பு விழா நடக்கிறது.

தூதரக திறப்பு, நெதன்யாஹு அரசுக்கும், டிரம்புக்கும் சாதகமாக இருந்தாலும், நெதன்யாஹு சொல்வதைப் போல இது அமைதிக்கு வழிகோலும் என்ற கருத்துக்கு வலுச்சேர்ப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெருசலேத்தில் ஏற்கனவே உள்ள அமெரிக்க துணை தூதரகம், இடைக்கால தூதரகமாக செயல்படும்

திறப்பு விழாவில் காணொளி வழியாக டிரம்ப் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவைப் போன்று மற்ற நாடுகளும் தங்களது தூதரகங்களை ஜெருசலேமிற்கு மாற்ற வேண்டுமென்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

டிரப்பின் இந்த முடிவை, ''நூற்றாண்டின் அடி'' என பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் விவரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA

இஸ்ரேல் மற்றும் காஸாவை பிரிக்கும் வேலியின் அருகே ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் போராட்டம் நடத்த கூடினர்.

இஸ்ரேலுக்கும், பாலத்தீனர்களுக்கும் ஜெருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த இடம். யூதம், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் புனித தலங்கள் இங்கு உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: