இந்தியா - பாகிஸ்தானிடையே பிரிந்து தவிக்கும் குடும்பம்

சிராஜ் - சஜிதா படத்தின் காப்புரிமை Fakhir Munir/BBC

மும்பையின் அண்டாஃபில் பகுதியில் உள்ள குறுகிய சிக்கலான வழியை கொண்டிருக்கும் தெருவொன்றில் மிகச்சிறிய வீடொன்றில் சிராஜும் சஜிதாவும் தங்களது மூன்று குழந்தைகளுடன் சமீபகாலம் வரை ஒரு கனவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். சிராஜ் சமையல்காரராக வேலை செய்ய, சஜிதா தனது 13 வருட மண வாழ்வில் வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்னதாக இந்திய அதிகாரிகள், சிராஜ் சட்டத்துக்கு புறம்பான வகையில் எல்லையை கடந்ததாக குற்றம்சாட்டி அவரை அவரின் பிறந்த நாடான பாகிஸ்தானுக்கு நாடு கடத்தியதில் அந்த கனவு வாழக்கை சிதறியது. இந்த காரியங்கள் எல்லாம் 24 வருடங்களுக்கு முன்னதாக துவங்கியது. சிராஜுக்கு பத்து வயது இருக்கும்போது படிப்பில் சரியாக மிளிராததால் பெற்றோருடன் அவருக்கு சண்டை ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை Fakhir Munir/BBC

பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியான ஷர்கூலின் ஒரு சிறிய அழகான கிராமத்தில் உள்ள தனது வீட்டை விட்டு கராச்சிக்கு ஓடிப்போகும் முனைப்போடு குடும்பத்தை விட்டு வெளியேறினார் சிராஜ். ஆனால் லாகூர் ரெயில்வே நிலையத்தில் அவர் செல்ல வேண்டிய ரயிலுக்கு பதிலாக தவறான ரயிலொன்றில் ஏற, அவர் இந்தியாவுக்கு வந்தார்.

''சில நாட்களுக்கு நான் கராச்சியில் இருப்பதாக நினைத்தேன். பிறகுதான் அது இந்தியா என தெரிந்தது'' என ஷர்கூலில் உள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு வெளியே உள்ள மரக்கட்டிலில் அமர்ந்தபடி விவரிக்கிறார் சிராஜ். அமைதியாகத் தோன்றுகிறார் சிராஜ் ஆனால் அவர் கடுமையான சோகத்திலும் சீரிய வருத்தத்தில் இருக்கிறார். '' நான் அகமதாபாத்திலுள்ள சிறுவர்களுக்கான சிறையில் மூன்று வருடங்கள் இருந்தேன். விடுதலையான பிறகு விதி என்னை மும்பையில் சேர்த்தது. அங்கிருந்து எனது வாழ்க்கையை நான் மீண்டும் கட்டமைக்கத் துவங்கினேன்'' என்கிறார்.

சிராஜ் தனது ஆரம்ப கால மும்பை வாழ்க்கையில் நடைபாதையில் பசியுடன் உறங்கியிருக்கிறார் ஆனால் பின்னாளில் சமையலக்காரராக தன்னை மெருகேற்றிக் கொண்டார். 2005-ம் ஆண்டு அண்டை வீட்டார்கள் மூலமாக சஜிதாவைச் சந்தித்து திருமணம் செய்துகொண்டு கௌரவமாக வாழ்ந்தார்.

படத்தின் காப்புரிமை Fakhir Munir/BBC

பிபிசியிடம் பேசும்போது சஜிதாவின் கண்களில் கண்ணீர் கொட்டியது ''அதிகாரிகள் எனது உலகை அழித்துவிட்டார்கள். எனது குழந்தைகள் அவர்களது தந்தையை பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள்'' என அழுது கொண்டே பேசினார்.

"நான் இப்போது அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட் கொடுங்கள். அப்படிசெய்தால் பாகிஸ்தானில் சிராஜுடன் நாங்கள் மீண்டும் இணைய முடியும்'' என்கிறார்.

தனது சொந்த ஊரில் உள்ள தன் பெற்றோர்களை பார்ப்பதற்காக இந்திய அதிகாரிகளிடம் 'தான் ஒரு பாகிஸ்தானி' என்ற விவரத்தை சமர்ப்பிக்க சிராஜ் முடிவெடுத்தபோதிலிருந்து பிரச்னை துவங்கியது.

''2006-ல் எனக்கு முதல் குழந்தை பிறந்தபிறகு நான் எனது பெற்றோர்கள் இல்லாக் குறையை உணர்ந்தேன். என்னுடைய நல்லதுக்காக தான் அவர்கள் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்பதை உணர்ந்தேன்'' என்கிறார் சிராஜ்.

சிராஜின் கருத்துப்படி, மும்பையின் சிஐடி பிரிவானது இந்த விவாகரத்தில் ஒரு விசாரணையை முடுக்கிவிட்டது. அவர்கள் பாகிஸ்தானில் உள்ள சிராஜின் குடும்பத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் சிராஜுக்கு பயணம் செய்ய அனுமதிப்பதற்கு பதிலாக நாட்டின் வெளிநாட்டினர் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தார்கள்.

ஐந்து வருடமாக அவர் சட்டப் போரில் போராடினார் ஆனால் தோற்றார் மேலும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். சஜிதா தனது வேதனையை தெளிவாக வெளிப்படுத்தினார். ''அரசு தரப்பில் இருந்து யாரும் எங்களுக்கு உதவி செய்ய வரவில்லை. ஏன்? நாங்கள் முஸ்லீம்கள் என்பதாலா? என்னுடைய குழந்தைகளுக்கு கருணை காட்ட அவர்களிடம் வேண்டுகிறேன் மேலும் பாஸ்போர்ட் கிடைக்க இந்திய அதிகாரிகள் உதவ வேண்டும்'' என்றார் சஜிதா.

படத்தின் காப்புரிமை Fakhir Munir/BBC

சஜிதா தனது குடியிருப்பு உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் பாஸ்போர்ட் பிரச்சனையை தீர்க்கமுடியும். ஆனால் நில உரிமையாளர் ஒத்துழைப்பதில்லை என்கிறார்.

பாகிஸ்தானி அடையாள அட்டைக்காக சிராஜ் விண்ணப்பித்திருக்கிறார், ஆனால் நடைமுறை தாமதங்களால் விரக்தி அடைந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் சட்ட சம்பிரதாயங்களில் சிக்கியுள்ளனர் மேலும் எல்லையால் பிரிந்துள்ளனர். குறிப்பாக சிராஜ் பெரும் வேதனையில் உள்ளார்.

'' 25 வருடத்துக்கு முன்பாக நான் பெற்றோரிடம் இருந்து பிரிந்திருந்தேன் தற்போது எனது குழந்தைகளிடம் இருந்து பிரிந்திருக்கிறேன். இரு தசாப்தங்களுக்கு முன்பாக நான் அனுபவித்த வலியை மீண்டும் எனது குழந்தைகள் அனுபவிக்க விரும்விவில்லை'' என்கிறார் சிராஜ்.

சிராஜ் தனக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் சமம் என்கிறார். அவர் பிறந்தது ஒரு நாட்டில், வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டது மற்றொரு நாட்டில். ஆனால் இரு நாட்டிலும் அவர் தனது குடும்பத்தை தவறவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Fakhir Munir/BBC

அவரது பழைமைவாத மூதாதையர் கிராமத்தில் சிராஜின் வாழ்க்கை சிக்கலாக உள்ளது. குறிப்பாக அவர் சார்ந்த பஷ்துன் கலாசாரத்தை முழுமையாக பின்பற்றுவதில் கடினத்தை உணர்கிறார். ஏனெனில் சிறு வயதிலேயே விட்டுவிட்டதால் அவரால் மீண்டும் கலாசாரத்தில் தன்னை முழுமையாக தொடர்புபடுத்திக் கொள்ள முடியவில்லை.

சஜிதா நிலைமையிலும் பெரிய மாறுதல் இல்லை. சிராஜ் சென்ற பிறகு தனியாக குடும்பத்தை கவனிக்கிறார். சமையலை தொழிலாக எடுத்துக்கொண்டு, வீட்டில் செயற்கை நகைகள் தயாரிப்பதன் மூலம் வாழ்க்கை நடத்துகிறார்.

''என் குழந்தைகளின் தேவையை, வசதியை நான் எவ்வளவுதான் பூர்த்தி செய்தாலும் நான் அவர்களது தந்தை இடத்தில் அமர முடியாது. அவர்கள் (அதிகாரிகள்) எனது குழந்தைகள் அவர்களின் தந்தையிடம் இருந்து அன்பும் அரவணைப்பும் பெறுவதை பறித்துக்கொண்டார்கள்'' என சஜிதா அழுதுகொண்டே விவரிக்கிறார்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியையும் சஜிதா நாடியுள்ளார். எல்லைகளை கடந்து துயரத்தில் உழலும் மக்களை தொடர்பு கொள்ளும் அமைச்சராக இவர் அறியப்பட்டவராவார்.

''நானும் இந்தியாவை சேர்ந்தவள்தான். இந்நாட்டின் மகள்; நான் எனது கணவருடன் மீண்டும் இணைய உதவுங்கள்'' என அமைச்சரிடம் கூறியுள்ளார் சஜிதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: