வடகொரியா உச்சிமாநாடு: டிரம்ப் - கிம் சந்திப்பு நடக்குமென அமெரிக்கா நம்பிக்கை

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையேயான உச்சிமாநாடு ரத்து செய்யப்படும் அச்சுறுத்தல்கள் வந்துள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகமானது நிச்சயம் உச்சிமாநாடு நடக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை SAUL LOEB

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர், அமெரிக்க அதிபர் வடகொரியாவுடனான உச்சிமாநாட்டுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இன்று காலையில், வட கொரியா கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், அணு ஆயுதங்களை கைவிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தால் உச்சிமாநாட்டை வட கொரியா ரத்துச் செய்ய நேரிடலாம் என தெரிவித்திருந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பானது ஜூன் 12-ம் தேதி நடக்கவுள்ளது.

'' கூட்டம் நடக்கிறதெனில் அதிபர் தயாராக இருக்கிறார்'' என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

'' அப்படி நடக்கவில்லையெனில், தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிகபட்ச அழுத்தம் தரும் பிரசாரத்தை தொடர்வோம்'' எனக்கூறியுள்ளார்.

அதிபர் டிரம்ப் சமீபத்தில் நடந்துள்ள இந்த விவகாரங்கள் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்துகொள்ளும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரியா கூறியிருந்தது.

தனது அணு ஆயுத திட்டங்களை கைவிட தயாராக உள்ளதாக வட கொரியா கூறிய பிறகு, இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு ஏற்பட்டது.

அமெரிக்கா ஒருதலைபட்சமாக எங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தால், அமெரிக்கா- வட கொரியா பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டபோதிலும், இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் கீ-க்வான் கூறியதாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் கோபமடைந்த வட கொரிய, தென் கொரியாவுடன் இன்று(புதன்கிழமை) நடக்க இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.

படத்தின் காப்புரிமை EPA

இந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும், படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியுள்ளது.

''தென் கொரியவுடன் இணைந்து ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் நிலையில், வட கொரியா-அமெரிக்க இடையில் நடக்க உள்ள பேச்சுவார்த்தையின் தலைவிதியை பற்றி அமெரிக்கா கவனமாக விவாதிக்க வேண்டும்'' என கேசிஎன்ஏ கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

டிரம்ப்- கிம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்துவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தை குறித்து வட கொரியாவின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது தங்களுக்கு தெரியாது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

வடகொரியாவின் தொனி மாறுவது எதனால்?

தனது அணு வல்லமையை கட்டமைக்க வட கொரியா கடந்த பல ஆண்டுகளாக ஏராளமாக செலவு செய்துள்ளது.

இது டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தம் தரும் முயற்சிகளுக்கு கிடைக்கும் பலனாகவே வடகொரியா பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக சித்தரிக்கப்படுவதையும், இந்த சந்திப்பு டிரம்ப்க்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் வட கொரிய தரப்பு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

கிம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது தங்கள் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றிதான் என்று டிரம்ப் தரப்பு தற்பெருமையுடன் பேசி வருவது வடகொரியாவுக்கு எரிச்சலூட்டியுள்ளது.

தங்கள் பலத்துடன் இருக்கும் நிலையில்தான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளோம் என்று வடகொரியா இந்த உலகுக்கு உணர்த்த விரும்புகிறது.

தங்களுக்கு இசைவான பேரம் முடியாவிட்டால், சிங்கப்பூரில் நடைபெறவுள்ள கிம்-டிரம்ப் சந்திப்பிலிருந்து வெளியேறுவதற்கான அறிகுறியாகவே இந்த எச்சரிக்கை பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை EPA

எது குறித்த பேச்சுவார்த்தை ரத்தானது?

கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வட கொரிய மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையே நடந்த வரலாற்றுப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, புதன்கிழமை நடக்க இருந்த சிறிய அளவிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரு நாட்டு தலைவர்கள் ஒப்புக்கொண்ட விஷயங்கள் குறித்து, வட கொரிய மற்றும் தென் கொரிய நாட்டு பிரதிநிதிகளும் மேலும் விவாதிக்க இருந்தனர்.

அணு ஆயுதங்களைக் கைவிடுவது, இரு நாடுகள் இடையிலான விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவது, சீனா, அமெரிக்கா இடையே இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவற்றை விவாதிக்க இருந்தனர்.

வட கொரியா ஏன் கோபமடைந்தது?

அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிகள் வட கொரியாவை அடிக்கடி கோபப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், 100 போர் விமானங்கள், எண்ணிக்கை குறிப்பிடப்படாத பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எஃப்-15கே ரக ஜெட் ஆகியவற்றுடன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவும் இணைந்து இந்த சமீபத்திய ராணுவ பயிற்சியினை நடத்தியது.

இந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும்,படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியா கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

1953ல் அமெரிக்கா மற்றும் தென் கொரியா கையெழுத்திட்ட ஒரு பரஸ்பர பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில், இந்த பயிற்சிகள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என இரு நாடுகளும் அழுத்தமாகக் கூறியுள்ளன.

ஆனாலும் புதன்கிழமை தென் கொரியாவுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை வட கொரியா ரத்து செய்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: