20 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா சென்ற இந்திய அமைச்சர்

கடந்த இருபது ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவின் அமைச்சர் ஒருவர் வடகொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

செப்டம்பர் 1998இல், அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்த முக்தர் அப்பாஸ் நக்வி ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக வடகொரிய தலைநகர் பியாங்யாங் சென்றார்.

இந்த முறை இந்திய வெளியுறவு இணை அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் மேற்கொண்டுள்ள பயணம் நக்வியின் பயணத்தைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வி.கே.சிங் வடகொரியாவின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

இரண்டு நாட்கள் சிங் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் ' இரு நாடுகளுக்கிடையே அரசியல், பொருளாதார, கலாசார, கல்வி மற்றும் பிராந்திய ரீதியிலான ஒத்துழைப்பு' ஆகியன விவாதிக்கப்பட்டன.

தென்கொரியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சில வாரங்களுக்கு பின்னும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் ஆகியோர் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சில வாரங்களுக்கு முன்னும் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

தங்களை அணு ஆயுதங்களை கைவிடுமாறு வலியுறுத்தினால், ஜூன் 12 அன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ள டிரம்ப்-கிம் சந்திப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று வடகொரியா அறிவித்துள்ளதால், அது நடப்பது தற்போது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

வடகொரியா உடன் பிற நாடுகள் தங்கள் உறவை புதிப்பித்துக்கொள்ளும் இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறதா இல்லை, தங்கள் கூட்டாளியான அமெரிக்காவுக்கு உதவிபுரிய விரும்புகிறதா?

படத்தின் காப்புரிமை EPA

கடந்த 45 ஆண்டுகளாக இந்தியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்குஇடையே ராஜாங்க ரீதியிலான உறவு உள்ளது. டெல்லி மற்றும் பியாங்யாங் ஆகிய நகரங்களில் சிறிய தூதரகங்களும் உள்ளன.

கலாசார பகிர்வு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான திட்டங்கள் ஏற்கனவே இந்தியா மற்றும் வடகொரியா இடையே உள்ளன. ஐ.நா மூலம் வடகொரியாவுக்கு இந்தியா உணவுப் பொருட்களை முன்னதாக அனுப்பியுள்ளது. அதேபோல 2004இல் இந்தியாவில் சுனாமி ஏற்பட்டபோது வடகொரியா இந்தியாவுக்கு 30,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது.

இந்திய அமைச்சர் ஒருவர் 20 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா சென்றிருந்தாலும், அவ்வப்போது இந்திய அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.

ஏப்ரல் 2015இல் இந்தியா வந்த வடகொரியா வெளியுறவு அமைச்சர் இந்தியாவிடம் மனிதாபிமான உதவிகளைக் கோரினார். அதே ஆண்டு இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ டெல்லியில் உள்ள வடகொரியா தூதரகத்துக்கு சென்று அந்நாட்டு சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார்.

இந்திய அமைச்சர் ஒருவர் வடகொரியாவின் அலுவல்ரீதியிலான நிகழ்வில் முதல் முறையாக கலந்துகொண்டது அந்த நிகழ்வாதான் இருக்கும். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் முன்னேறி வருவதாக அவர் பேசினார்.

2013இல் சீனா மற்றும் தென்கொரியாவுக்கு அடுத்து வடகொரியாவின் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கியது. தொழிற்சாலைகளில் பயன்படும் வேதிப்பொருட்கள், கச்சா எண்ணெய், வேளாண் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்த இந்தியா, உளர் பழங்கள், இயற்கையான பசை, பெருங்காயம் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது. 2014இல் 200 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த இருநாட்டு வர்த்தகம், தொடர் அணு சோதனைகளால் வடகொரியா மீது ஐ.நா விதித்த தடைகளைத் தொடர்ந்து 130 மில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

நீண்டகால உறவு

"வடகொரியா தூதரக உறவு வைத்திருக்கும் மிகச் சில நாடுகளில் இன்றாக இந்தியா உள்ளது. இந்தியா வடகொரியாவுக்கு வெளியுலகுக்கான ஒரு சன்னலாக உள்ளது. இரு நாடுகளும் நீண்ட காலமாக, குறைந்த அளவிலான உறவை வைத்துள்ளன," என்கிறார் கிழக்காசிய நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உறவுகள் பற்றிய ஆய்வு நிபுணர் பிரசாந்த் குமார் சிங்.

படத்தின் காப்புரிமை Reuters

கடந்த ஆண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் வடகொரியாவில் தங்கள் தூதரக நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியதை இந்தியா மறுத்தது. "உங்கள் நட்பு நாடுகளின் தூதரகங்கள் அங்கு இருந்தால்தான் உங்களால் வடகொரியாவுடன் தொடர்புகொள்ள முடியும்," என்று அப்போது டில்லர்சனுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலளித்தார்.

கொரிய தீபகற்பத்தில் சமீபத்தில் நடந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து வடகொரியா வி.கே.சிங்கிடம் விலக்கியதாக இந்தியா தெரிவித்துள்ளது. அதற்கான முயற்சிகளுக்கும் இந்தியாவின் ஆதரவைத் தெரிவித்துள்ளார் வி.கே.சிங்.

டிரம்ப் மற்றும் கிம் இடையே நடக்கவுள்ள சந்திப்புக்கு இத்தியாவுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

"நம்மால் தற்போது யூகிக்கவே முடியும். கிம் உடனான சந்திப்புக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்றுதான் டிரம்ப் விரும்புவார். அதற்காக அமெரிக்கா இந்தியாவின் உதவியை நாடியிருக்கலாம்," என்கிறார் பிரசாந்த் குமார் சிங்.

"இந்த சந்திப்பில் இந்தியாவுக்கும் ஒரு பங்கு உள்ளது. அமெரிக்க-கொரிய பிரச்சனையில் எந்த விதமான தொடர்பும் இல்லாத ஒரே பெரிய நாடு இந்தியாதான்," என்கிறார் அவர்.

ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, ஒப்பீட்டளவில் ஒரு சிறிய நட்பு நாடுகூட அதற்கு உதவியாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்